Friday, January 01, 2010

சென்னையில் மார்கழி

காரிருள் போர்வைக் கலையா திருக்கும்
மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது
கூர்வேல் விழியார் கூடி வரைந்த
வண்ணக் கோலம் வாசல் மறைக்கும்
எண்ணம் சிறக்க இருகரம் கூப்பி
அலையா மனதொடு கடுங்குளிர்த் தாங்கி
நிலைப்பே ரின்பம் நெஞ்சில் நிறுத்தி
கலையாம் இசையால் கண்ணனைப் பாடி
வெறுங்கா லோடு வீதியுலா வந்திடும்
திருமால் அடியார் திருத்தாள் தன்னை
பணிந்தே வணங்கிடும் பண்புடை பெண்கள்
அணிந்திடு பட்டும் பொன்னின் நகையும்
அவர்தம் சிறப்பை அழகாய்ச் சொல்லும்
கோவில் பக்கம் சிறுவர் தம்மை
பொங்கல் மணமே பெரிதாய் ஈர்க்கும்
பாட்டும் பரதமும் பக்தியோ டிணைந்து
பரவச மூட்டும் பாட்டுக்கச் சேரியில்
இப்படித்தான் இருந்தது எங்களூர் சென்னை
அன்றயப் பொழுதில் அணைத்தும் அருமையாய்
இன்றிவைக் குறைந்து இதயம் இருளாக
நல்லவைத் தேய்ந்து நலமிழந் தோமே!

சென்னையில் இன்று

கோலம் போட
வாசலின்றி
உயர்ந்தே நிற்கும்
அடுக்கு மாடி வீடுகள்

தூ' வென்று துப்பும் எச்சில்
தெருவெல்லாம் குப்பை தூசு
காலைக் கழிவு
கெட்டவார்த்தையோடு
எங்கும் பிச்சைக்காரகள்

பணத்தாசையால்
வாசனையூட்டப்பட்ட
வெற்றுப்பூ
வியாபாரம்

காசுக்காய்
கடவுளின் தாரிசனம்
ச்சி சீ
இதுதான்
இன்றாயச் சென்னை..

மூக்கைத் துளைக்கும்
'மெனு' ஒன்றிருந்தால் தான்
பாட்டுக் கச்சேரிக்கும்
கூட்டம் வரும்..

பாட்டை விட்டு
பட்டை எடை போடும்
'இரசிக பெருமக்கள்'

இடையே
குத்தாட்டப் பாட்டோடு
கூப்பிடும் தொலைப்பேசி
சத்தமாய் பேசும்
சலவையுடை யணிந்த
பகட்டு மனிதர்கள்

விற்பவர், நுகர்வோர் என
விலைப் பொருளாகிவிட்ட
இசைக் கலை..

இசையை இரசிக்கும்
இரசிகர்கள் போய்
இரசிகருக்காய்
இசையை வளைக்கும்
விதமாய் விட்டது
வெற்றியின் இரகசியம்..

இன்றும் இருக்கத்தான் செய்கிறது
இன்னனிசையும்
இனிமையும்
நேர்மையும் ஒழுக்கமும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்

அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
நல்லவை நாடி
இறைவனை வேண்டியபடி
'வாழ்க! சென்னை.

8 comments:

  1. Anonymous8:03 PM

    //அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
    நல்லவை நாடி
    இறைவனை வேண்டியபடி
    'வாழ்க! சென்னை.//

    _______/\______

    ReplyDelete
  2. கோலம்போட வாசலின்றி உயர்ந்தே நிற்கும் அடுக்குமாடி வீடுகள் இந்த வரிகள் நல்லா இருக்கு...!

    ReplyDelete
  3. கோலம்போட வாசலின்றி உயர்ந்தே நிற்க்கும் அடுக்கு மாடி வீடுகள்

    நல்லா எழுதியிருக்கீங்க....!

    ReplyDelete
  4. கூர்வேல் விழியார் கூடி வரைந்த
    வண்ணக் கோலம்

    அழகழாய் ...

    மூக்கைத் துளைக்கும்
    'மெனு' ஒன்றிருந்தால் தான்
    பாட்டுக் கச்சேரிக்கும்
    கூட்டம் வரும்..


    நிதர்சணம்...

    ReplyDelete
  5. உங்களது
    கவிதை மழையில்
    நனைந்ததில் - ஒரே
    இலக்கிய தும்மல்

    நல் கவிதை
    நலமென்றால்
    வாசிப்பனுபவமும்
    சுகம்தான்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    தோழன் மபா
    தமிழன் வீதி

    ReplyDelete
  6. தொன்றுதொட்டு வரும் பழக்க வழக்கங்களை மறந்து காலஓட்டத்தில் மாறிவிட்டமையை, முதலில் மரபும் பிறகுப் புதுக்கவிதையாக எழுதியும் சிம்பாலிக்காக உணர்த்திவிட்டீர்கள். வாழ்க.

    மற்றும் "புத்தாண்டு நல்வாழ்த்துகள்"

    ReplyDelete
  7. வாருங்கள் அமுதா. மிக்க நன்றி. இப் புத்தாண்டு மிக மிகச் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.
    அன்புடன் உமா.

    ReplyDelete
  8. ______/\______

    வணக்கம் திரு......
    வருகைக்கு நன்றி.

    பிரியமுடன் வசந்த் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    நட்புடன் ஜமால். மிக்க நன்றி, வாழ்த்துக்கும் வருகைக்கும்.

    தோழன் மபா, தமிழன் வீதி
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக தோடர்ந்து எழுதுகிறேன்.

    அன்புடன் உமா

    ReplyDelete