Saturday, December 22, 2018

பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் துறைமுக தமிழ் சங்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..

பாரதியின் பார்வையில் பாரதம்


தமிழைப் பற்றியும் பாரதியைப் பற்றியும் பேசுவதற்கும் கேட்பதற்கும் தமிழருக்கு சலிப்பதே இல்லை. பாரதி இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்திலும் தமிழ் மக்களின் சிந்தனையிலும் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர். கவிதையில் புதுப் பாதையை அமைத்தவர். இன்றைய புதுக் கவிதைகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தது அவரது வசனக் கவிதைகள்.

எந்த பொருளாக இருந்தாலும் ஒரு தெளிவான சிந்தனை கொண்டவர் பாரதி.

பாரதியை ஒரு கவிஞராக நம் எல்லோருக்கும் தெரியும். கவிதை, உள்ளத்தின் மலர்ச்சியாக அமைவது. மனத்தோடு மனம் பேசும் கலை கவிதை.

உரைநடை அல்லது கட்டுரைகள் சிந்திக்கத் தூண்டுவதாய், செயல் படத் தூண்டுவதாய் மட்டுமல்லாமல், ஆலோசனைகளும், விவாதங்களும் கொண்டு அமைவது.

பாரதியாரின் கட்டுரைகள் அவரது கவிதைகள் போல் எளிய நடையில் அமைந்தவையல்ல. என்றாலும் எளிமையாக எழுதப்பட வேண்டும் என்பதை, தமிழ் உரைநடையின் துவக்க காலத்திலேயே மிகத் தெளிவாக அறிந்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் பாரதி.

‘கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி’

என்பது பாரதியாரின் உரைநடை பற்றிய கருத்து.

அதுமட்டுமல்லாமல் சிந்தனைத் தெளிவு எவ்வளவு முக்கியம் என்பதை

‘ தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டி மாடு போல ஓரிடத்தில் படுத்துக் கொள்ளும்’

என்று நையாண்டி கலந்து மிக அழகாக சொல்லியிருப்பார்.

பாரதியின் கருத்துகளை கவிதையில் வரைந்து கவிச்சரத்தை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள நமது துறைமுக பணியாளர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

எனவே பாரதியின் கட்டுரைகளின் மூலம் நாம் அறிய கிடைக்கும் அவரது சமுதாய கருத்துகள் பற்றி நாம் இப்போது பார்ப்போம்

சமுதாயம் பற்றிய கருத்துகள் என்றால் அதில் பெண்களின் நிலைப் பற்றிய கருத்துகள் மிக முக்கியமானது. பாரதி பெண்களைப் பற்றிய மிகச் சிறந்த தெளிவான கருத்துகள் கொண்டிருந்தார். அதை சொல்ல பயப்பட்டதுமில்லை.

“ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு,மனம் உண்டு, புத்தியுண்டு, ஐந்து புலங்கள் உண்டு. அவர்கள் செத்த யந்திரங்களல்லர்……. சகோதரிகளே! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தர்மத்துக்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்மயுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றிப் பெறுவோம்….”

நாம் வெற்றி பெறுவோம் என தன்னையும் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பெண்களின் விடுதலைக்கு பெண்கள் முன்வந்து போராடவேண்டும் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறார். 

‘பதிவிரதை’ என்ற கட்டுரையில்
“அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதையாக இருக்க முடியும்?”
என்று சாடியிருக்கிறார். இது கற்பு என்பது இருபாலருக்கும் பொது என்ற அவரது கருத்தை காட்டுகிறது.

பாரதியார் பெண் விடுதலைக்காக 9 விடயங்களைத் சொல்கிறார்.

1.பெண்கள் வயதுக்கு வரும் முன் திருமணம் செய்யலாகாது
2.விருப்பமில்லாத கணவரை மணக்கும் படி வற்புறுத்தல் கூடாது
3.மணவிலக்கு உரிமை வேண்டும்
4.சொத்தில் சம உரிமை தர வேண்டும்
5.திருமணமின்றி வாழும் உரிமை வேண்டும்
6.பிற ஆடவருடன் பழகும் சுதந்திரம் வேண்டும்
7.உயர்கல்வி அனைத்துத் துறையிலும் தரப்படவேண்டும்
8.எவ்வித பணியிலும் சேரச் சட்டம் துணைவர வேண்டும்
9.அரசியல் உரிமை வேண்டும்.

பாரதியார் கோரிய இந்த உரிமைகளில் பல இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. என்றாலும் நாட்டிற்கே சுதந்திரமில்லா அந்நாளில் இப்படி சொத்தில் சம உரிமை, பிற ஆடவருடன் பழக உரிமை, மணவிலக்கு உரிமை, எந்த பணியிலும் சேர உரிமை என தனது காலம் தாண்டி சிந்தித்த பாரதியின் தொலைநோக்குப் பார்வை வியப்பளிக்கக்கூடியது.

பெண்கள் இன்று கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்கும் இனி காணவிருக்கும் உயர்வுகளுக்கெல்லாம் பாரதியின் பங்கு முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது என்பது உண்மையானது.

அடுத்து கல்வி பற்றிய அவரது சிந்தனைகளைப் பார்ப்போம்

தேசியக் கல்வி என்ற தனது கட்டுரையில் ஆரம்பப் பள்ளிக்கூடம் எவ்வாறு கட்டபடவேண்டும் அதில் என்னவெல்லாம் கற்பிக்கப்பட வேண்டும் என அருமையாக கூறியிருப்பார்.

“ உபாத்யாயர்கள் பி.ஏ, எம்,ஏ., பட்டதாரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்டிரிகுலேஷன் பரீட்சை தேறியவர்களாக இருந்தால் போதும். மெட்ரிகுலேஷன் தவறியவர்கள் கிடைத்தால் நல்லது.  இப்படி தமிழ் நாட்டில் ஏற்படும் தேசியப் பாடச் சாலைகளில் உபாத்யாயர்களாக வருபவர்கள் திருக்குறள் , நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாகவாவது இருக்க வேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும் ஸ்வதர்மாபிமானமும் எல்லா ஜீவர்களிடத்தும் கருணையும் உடைய உபாத்யாயர்களைத் தெரிந்தெடுத்தல் நல்லது”

என்று கூறியிருப்பார். 

எவ்வளவு உண்மையான கருத்துகள். இன்றய ஆசிரியர்கள் நிலை என்ன?

அதுமட்டுமல்ல இந்த தேசீய பாடச்சாலைகளில் காற்பிக்க வேண்டியன என சிலவற்றை சொல்லியிருப்பார்.

அ. எழுத்து, படிப்பு கணக்கு
ஆ. இலேசான சரித்திரப் பாடல்கள்
இ. பூமி சாஸ்த்திரம்
ஈ. மதப் படிப்பு
உ. ராஜ்ய சாஸ்திரம்
ஊ. பொருள் நூல்
எ. ஸயன்ஸ் அல்லது பௌதீக சாஸ்திரம்
ஏ. கைத் தொழில், விவசாயம்,தோட்டப் பயிற்சி, வியாபாரம்
ஐ. சரீரப் பயிற்சி
ஒ. யாத்திரை (ஏக்ஸ்கர்ஷன்)

என்று பட்டியலிட்டதோடு ஒவ்வொன்றும் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியிருபார்.

அதுமட்டுமல்லாமல் பொது குறிப்பு என்று தனியாக இப்பள்ளிக்கூடங்கள் அமைக்க எவ்வளவு பொருள் தேவைப்படும் அதை எப்படி பெறுவது. ஒவ்வொன்றிக்கும் எவ்வளவு எப்படிச் செலவு செய்ய வேண்டும், பாடத்திட்டத்திற்கான கருவிகள் எவ்வாறு பெறுவது என மிகத் தெளிவான வரையறையை கூறியிருக்கிறார்.

மிகவும் முக்கியமாக
“ இத்தகைய கல்விகற்பதில் பிள்ளைகளிடம் அரையணாக்கூட சம்பளம் வசூலிக்கக் கூடாது.” என்றும்

“மிகவும் ஏழைகளான பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடத்திலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும், வஸ்திரங்களும் இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்”

என்றும் ஒரு முழுமையான திட்டதையே அளித்திருப்பார். 

நினைத்துப் பாருங்கள் அன்றைய காலத்திலேயே விவசாயம், வணிகம், பொருளாதாரம் அறிவியல், அரசியல், உடற்பயிற்சி என எல்லாத் துறைகளிலும் மிகச்சிறந்த பாடத்திட்டத்தை அவர் அளித்திருப்பது வியக்கத் தக்கதே. 

இலவசக் கல்வி பற்றிய அவரது கருத்துகள் எவ்வளவு முக்கியமானது.

இவ்வாறு எத்துறையாயினும் தெளிவான சிந்தனை கொண்ட அம்மகாகவியின் ஆற்றலை என்னவென்பது. 

அவரது சிந்தனைகள் எல்லாம் நடைமுறை படுத்தப் பட வேண்டும் என்ற கருத்தினை அனைவரிடமும்   விதைப்போம். முயல்வோம்.

வாழ்க பாரதி நாமம். வாழ்க பாரத சமுதாயம்.

Thursday, November 22, 2018

பொய்த்துப் போன மழை




கொட்டி வழங்குமென்று
குதூகலமாய் காத்திருக்க
சொட்டிச் சென்றதிங்கே
சென்னைப் பக்கம்
வந்த மழை….

வங்கக் கடலோரம்
வளர்கின்ற காற்றழுத்தம்
தெற்குக் கரைநோக்கி
சீறிப் பாய்ந்தங்கே
தென்னைகள் சாய்த்ததென்ன
சேதங்கள் செய்ததென்ன…

வாராமல் வறட்சியிங்கே!...
வந்தபுயல் வேகத்தால்
வீடுகள் விளைநிலங்கள்
வீதியெங்கும் சோகமங்கே!...

மும்மாரிப் பொழிவதுவும்
முப்போகம் விளைவதுவும்
எப்போது நடக்குமிங்கே
ஏனிந்த மாற்றமிங்கே…

வாக்குறுதி தந்துவிட்டு
வேளை வந்தபோது
போக்குக்காட்டி ஏமாற்றும்
எங்களூர் அரசியலை
எளிதில்நீ கற்றாயோ

மழையே!!!!

லஞ்சம்
கொடுத்துக் கெடுப்பதுவும்
எதுவும்
கொடுக்காமல் வாட்டுவதும்
எங்கள் குணம்
ஏட்டிக்குப் போட்டியாக
ஏனிங்கே நீவந்தாய்…

எதிர்பார்ப்பு அதிகமென்றால்
ஏமாற்றமும் அதிகமென்று
எங்களுக்கே தெரிந்திருக்க
எதைச் சொல்ல நீ வந்தாய்?

“நல்லார் ஒருவர் உளரேல்….”
வள்ளுவரே நில்லும்…..

அந்த ஒரு நல்லவருக்காக
காலமெல்லாம் காத்திருப்போம்….

நாங்கள் மட்டும் மாறமாட்டோம்    

Tuesday, November 20, 2018

மரம்


படைப்பின்
உச்சம்
மனிதமா?
மரமா?

மண்தாங்கும்
மரமே அந்த
மண்ணைக்
காக்கும்

மனிதனுக்குண்டா
பிரதியுபகாரம்
செய்யும்
 இந்த குணம்...

இயற்கையிலிருந்து
எடுத்துக் கொண்டதையெல்லாம்
அவனால்
திருப்பித் தர இயலுமா....

மரத்தின்
உயரம் அதன்
வேரின் ஆழத்தைச்
சொல்லும்..

உயர்ந்த
மனிதர்களாய்
உலாவருபவர்கள்
தங்கள்
உள்ளத்தின்
ஆழத்தை
உலகுக்குக்
காட்டத்தயாரா..

தன்னை
அழிப்பவனுக்கும்
மரம்
நிழலையேத் தருகிறது..

மனிதன்
தான் உயர
எத்தனைச் சவ பெட்டிகளை
படிகட்டுகளாய்
அமைத்துக் கொள்கிறான்...

இயற்கையை
அழித்து ஒன்று...
சக மனிதனின்
கனவுகளை
சிதைத்து  ஒன்று...
சொந்தங்களை
அழித்து ஒன்று
சுய மரியாதையை
அழித்தும்
ஒன்று...

உயரம்
மரத்தின்
கம்பீரம்...

மனிதனுக்கு...
பணமே
உயரத்தை அளக்கும்
கருவி...
உயர உயர
அவன்
தாழ்ந்து போகிறான்....

மரம்
காய் தரும்
கனி தரும்
நிழல் தரும்
மழை தரும்....

மனிதன்
மண்ணழித்து
மரம் அழித்து
மனிதம் அழிந்து
நிற்கிறான்..

மனிதன்
உலகுக்கு
அச்சம்...

மரமோ
உலகின்
ஆச்சரியம்....

படைப்பின்
சிறப்பு
மரமா?
மனிதமா?....

Sunday, November 11, 2018

இரயில் பயணம்


வளைந்துச் செல்லும் பாதையில்
இரயிலின் மொத்த நீளமும்
பார்க்கும் ஆவலில்
எட்டிப் பார்க்கும்
இளமை...

நீண்ட பெட்டிகள்
நொடியில் மறையும்...

வாழ்க்கைப் பாடத்தை
இப்படி எப்பொழுதாவது
காட்டிச் செல்லும்
இரயில் பயணங்கள்...

பட்ட மரம்


பட்ட மரம் சொல்லும்
பக்கத்திருக்கும்
பச்சை மரம் சொல்லும்
இச்சைக் கொள்ளாதே...
இளமை நிலையல்ல...
முதுமை வரும் மெல்ல...

Saturday, October 27, 2018

கருப்பும் வெள்ளையும்...




கருப்பும் வெள்ளையுமாய்
மனிதர்கள்...

சில முகங்கள் சிரிப்புடன்..
சில முகங்கள் வெறுப்புடன்..

கருப்பும் வெள்ளையுமாய்
வாழ்க்கை..
சில நேரம்  இனிமைகள்
சில நேரம்  இயலாமைகள்

கருப்பும் வெள்ளையும்
எதிரானவையல்ல...

இயல்பானவை...

உணர்ந்தால் வாழ்க்கை
வண்ணக் கலவை...

தொலைந்து போனவை



படிக்கப்படாத புத்தகங்கள்
மிதிக்கப்படாத புல்வெளி
கிழிக்கப்படாத காகிதங்கள்
கிறுக்கப்படாத சுவர்கள்
உதைக்கப்படாத பந்து
உணரப்படாத இனிமைகள்
மனிதர்களே!!
எங்கே தொலைத்தீர்கள்
குழந்தைகளை....

Sunday, August 12, 2018

வாழ்த்து

புலரும் காலைப் பொழுதினிலே
புதிதாய் பூத்த பூக்களைப்போல்
மலரும் நாட்கள் மகிழ்வோடு
வாசம் பரப்பும் மனத்தோடு..
அலையும் கடலின் ஆழத்தில்
அமைதி தங்கி இருப்பதுபோல்
நிலையாய் தமிழும் இனிமைகளும்
நெஞ்சில் நிறைந்து நலம்வாழ்க!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
உமா...

அன்பு மகனுக்கு..

சிட்டுக் குருவியுன்
பட்டுச் சிறகை
விரித்தே பறக்க
வானம் நாங்கள்…

புத்தம் புதிய
பூவாய் நீ
வாசம் பரப்பும்
காற்றாய் நாங்கள்…

வண்ணக் கலவை
ஓவியம் நீ
வரைந்து மகிழ்ந்த
ஓவியன் நாங்கள்…

சிதறும் கல்லில்
சிற்பம் நீ
செதுக்கித் தந்த
சிற்றுளி நாங்கள்…

வண்ணத் தமிழின்
விளக்கம் நீ
விரித்தே எழுத
வார்த்தை நாங்கள்…

எந்தன் கவிதைப்
பொருளும் நீ
எழுத தோன்றும்
இன்பம் நீ…

எங்கள் வாழ்வின்
இயக்கம் நீ
எம்மைப் படைத்த
இறைவன் நீ…

என்றும் வாழ்வில்
தமிழ் போலே
உயர்வே உயர்வே
உயர்வே காண்….

இனிய
   பிறந்த நாள்
       நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
அம்மா, அப்பா...

Monday, May 07, 2018

சங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்

https://sangailakkiyamsuvaippom.blogspot.in/
சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை பகிர்வதன் மூலம் என்னை புதுப்பித்துக் கொள்ளும் சிறு முயற்சி.... எனது இன்னொரு தளத்தில்..

Saturday, December 30, 2017

புத்தாண்டே வருக...

கோடையில் தூரலும் - குளிர்
வாடையில் போர்வையும
வேருக்கு நீரையும்- மக்கள்
வியர்வைக்கு  பலனையும்
இன்பத்தில் நிறைவையும்- வாட்டும்
துன்பத்தில் துணிவையும்
இளமைக்கு அறிவையும்- துவண்ட
முதுமைக்கு துணையையும்
உண்மைக்கு வழியையும்- கெட்ட
பொய்மைக்கு இருளையும்
ஆணுக்கு பெருமையும்- நிகர்
பெண்ணுக்கு உயர்வையும்
தோளுக்கு வலிமையும்- நேர்மை
வாளுக்கு வெற்றியும்
அன்பையும் வழங்க வா  புத்தாண்டே
அமைதியை நிரைத்து வா...

மலர்க புத்தாண்டே...

நல்லதை செய்யும்
நெஞ்சுரம் கூட்டி
அல்லவை எதிர்க்கும்
ஆற்றலும் தந்து
நல்லவர் வாழ
நானிலம் வாழ
இல்லார், கல்லார்
இல்லா ராக
ஏற்றத் தாழ்வுகள்
எதிலும் இல்லா
மாற்றமும் தந்தே
மலர்க புத்தாண்டே...

Wednesday, October 18, 2017

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

இன்றைக்கும் என்றைக்கும்
இல்லத்திலும் உள்ளத்திலும்
உற்சாகம் கரைபுரள
இன்பங்கள் நிறைந்திருக்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
உமா

Monday, August 14, 2017

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

கண்ணில் கனிவாய்
கருத்தில் தெளிவாய்
நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண்
எண்ணம் உயர்ந்தால்
இன்சொல் இணைந்தால்
இல்லில் மகிழ்வாய் மலர்ந்திடுவான்...

Wednesday, July 26, 2017

நதி பின்னால் திரும்பாது

'நேற்று' என்பது
விதையாக...
'நாளை' பூக்கள்
மலர்ந்திடவே...
இன்றையப் பொழுதை
உரமாக்கு...

கண்ணை மூடும்
கண நேரம்
கடந்த காலம்
என்றாகும்...
இன்று இக்கணத்தை..
இனிதாக்கு...
இனிவருங்காலம்
உயர்வாகும்...

சொல்லும் சொல்லை
சீராக்கு
சோர்வை உந்தன்
பகையாக்கு...
துஞ்சியக் காலம்
துயராகும்..
விழித்திடு
இந்நொடி உனதாகும்...

விழுந்தது
முளைக்கும்
விதையானால்....

வெடித்தது
மலரும்
அரும்பானால்...

அடங்கியது
எழுந்திடும்
அலையானால்....

அறிவாய்....

கடந்தது
காலம்
என்றானால்.....

வாழ்க்கை
நதி பின்
திரும்பிடுமோ......

Thursday, March 16, 2017

உலக மகளிர் தினம்

இன்றையப் பெண்களின்
இமாலய வெற்றிகளுக்கு
அடித்தளமாய் அமைந்தது
அன்றையப் போராட்டம்...

பதினெட்டாம் நூற்றாண்டில்
புரட்சி பேசிய
புதுமைப் பெண்களின்
எழுச்சிப் போராட்டம்....

அன்று...
தொழிற் புரட்சி
துவங்கிய நாட்களில்
தோள் கொடுக்கத்
தேவைப்பட்டனர்
பெண்கள்.....

வேலை வாய்ப்பு
முதன் முதலாய்
வெளிச்சம் காட்டியது
அவர்கள் வாழ்வில்...

உழைப்பு ஒன்றானாலும்
ஊதியம் சமமில்லை...
பேச்சுரிமை இல்லை...
வாக்குரிமை இல்லை...
முன்னேறும்
வாய்ப்புகள் இல்லை...
இன்னும்
எத்தனையோ இல்லைகள்
இருந்துக் கொண்டே இருந்தன...

பதினெட்டாம் நூற்றாண்டில்
பற்றிய பொறி
இருபதாம் நூற்றாண்டில் தான்
வெடித்துச் சிதறியது...

உலக பெண்கள்
ஒற்றுமைக் காட்டினர்...

மார்ச் எட்டு
மகளிர் தினமானது....

சமுதாய வளர்ச்சியில்
சமபங்கு வகித்த
உழைக்கும் பெண்களின்
உரிமைப் போராட்டம்
வெடித்த தினம்

மகளிர் தினம்...

இது
கொண்டாட்ட தினமல்ல
உரிமைக்கான
உயர்வுக்கான
போராட்டதினம்...

இன்றோ..

ஊடகங்கள் வழியாக
உள்ளங்கைகளில்
குறுஞ்செய்தியாய்
வாழ்த்துக்கள்....

வியாபார சந்தையில்..
விற்பனைத் தந்திரமாய்
மார்ச் எட்டு...

ஆயிரம் செலவழித்தால்
ஐம்பது தள்ளுபடி...
பெண்கள் பயன் படுத்தும்
மேக்கப் சாதனங்களுக்கு...

பெண்களோடு வந்து
கூல்டிரிங்க்ஸ் குடித்தாலும்
விலைக்குறைப்பு
சலுகைகள்...
வெட்கக் கேடு...

இதுவா இலக்கு...

பெண்கள் வேண்டுவது
சுதந்திரம்..
சமத்துவம்..
பாதுகாப்பு...

நூறாண்டுகள் கழிந்து
இன்றும்
எட்டாக் கனியாய்
இந்த இலக்குகள்....

வாய்ப்புக் கிடைத்தால்
வானையும் வெல்லும்
வலிமைக் கொண்ட
பெண்களுக்கு...

வாழ்த்து மடல் வேண்டாம்...
வெளிச்சம் காட்டும்
விளக்குகளாய் ஒளிருங்கள்...

சுமைத்தாங்கியாய்....
வேண்டாம்
தடைக்கற்களாய் இல்லாமலேனும்
சற்றுத் தள்ளி நில்லுங்கள்...

பெண்களின் பாதுகாப்பு
கேள்விக் குறியாகும் போது..
ஆண் அங்கே
அசிங்கப்பட்டுப் போகிறான்....

ஒவ்வொரு சமுதாயத்தின்
வளர்ச்சியிலும்
ஆணுக்கு நிகராய்ப்
பெண்களும்
அப்பெண்களுக்கு
அரணாய் ஆண்களும்
அமையும்
அற்புத நாட்களை நோக்கியே..

ஊர்ந்துச் செல்லும்
உலக மகளிர் தினம்...
ஒவ்வொரு வருடமும்..

போராட்டங்கள்
உண்மையான
கொண்டாட்டங்களாய்
மாறும் நாட்கள்
நம் ஒவ்வொருவர்
கையிலும் உள்ளது...

ஒன்று படுவோம்..
உழைப்போம்...
உயர்வோம்.....