Showing posts with label வெண்தாழிசை. Show all posts
Showing posts with label வெண்தாழிசை. Show all posts

Thursday, January 06, 2011

வெண்டாழிசை 4

தங்கத்தைப் புடம்போட தகதகக்கும் அதுபோல

பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி

சிங்கமென வெளிவருவாய் சிரித்து.

-------------------



மண்ணெல்லாம் நனைந்திடனும் வளம்பெற்றே வயலெல்லாம்

பொன்னாக விளைந்திடனும் புதுவாழ்வு மலர்ந்திடனும்

விண்பிளந்து வருமோநல் விருந்து.



கொட்டும்பார் மழையெங்கும் குளங்களெல்லாம் நிறைந்திடவே

பட்டமரம் துளிர்க்கும்பார் பசுமையெங்கும் தெரியும்பார்

கட்டமெல்லாம் தொலையும்பார் கரைந்து.



கட்டமுற்ற விவசாயி கடன்வாங்கிக் கருத்துடனே

நட்டதெல்லாம் பயிராக நமக்கிங்கே உணவாக

விட்டொழியும் வறுமையது விரைந்து.


1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகையில் அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.]

வெண்டாழிசை -3

இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும்
முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால்
அடைந்திடும் நிலைக்கிலை ஈடு.


பசித்திட புசித்திடு பயமதை விலக்கிடு
விசையுற நடந்திடு விருப்புடன் வினைசெய
நசிந்திடா நலம்பெறும் வாழ்வு.

[முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களாகவும் மூன்றாம் அடி முச்சீராகவும் இருக்கும்.
மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச் சீர்) தவிர மற்றவை கருவிள(நிரைநிரை)ச் சீர்கள்.
மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும்.
ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக ‘நாள்’ அல்லது ‘காசு’ என்ற வாய்பாட்டால் முடியவேண்டும்.

Thursday, November 25, 2010

வெண்தாழிசை

[1. இது மூன்றடிப் பாடல்

2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். ]

காற்றும் நீரும் காணும் யாவும்
தோற்றம் நீயே போற்றி நின்றேன்
ஏற்றம் தாராய் என்று.

என்றும் நின்றாள் ஏத்து கின்றேன்
குன்றில் கோவில் கொண்டாய்க் கந்தா
மண்ணில் அன்பே மாற்று.

மாறும் நெஞ்சில் மையல் உன்மேல்
சேரும் மாறென் சிந்தை மாற்று
காரென் றெம்மைக் காத்து.

விண்ணோர் வாழ்வை வேண்டின் மண்ணில்
பொன்னை ஈதல் போலே பின்னும்
கண்ணைத் தானம் செய்.

நல்லார் அல்லார் எல்லாம் சொல்லும்
சொல்லால் ஆகும் தீச்சொல் தீயாய்க்
கொல்லச் சேரும் தாழ்வு.

Wednesday, July 14, 2010

நெஞ்சில் தைக்குமே முள்.

வெண்தாழிசை

கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.

[1. இது ஒரு மூன்றடிப்பாடல்.

முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள்.