Friday, March 20, 2009

காதல்

அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்


தாழ்ந்த விழி
தரை நோக்க
தனித்தியங்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்


பூ விதழ்
புன்னகை வீச
பூகம்பம் வெடிக்கும்
இதயத்தில்


இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்


மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்


கட்டில் தாண்டியும்
கரம் சேரும்


காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்

Tuesday, March 17, 2009

கோடை விடுமுறை

மாமா வீட்டில்
மாம்பழத்திற்கும் சண்டை
மஞ்சள் பலூனுக்கும் சண்டை..
பொம்மையோ புத்தகமோ
பொழுதுக்கும் ஆரவாரம்..
ஒரு மாதமாய்
கவலையில் அம்மாக்கள்....
கழிந்ததும்
ஒன்பது மாதமாய்
கவலையில் குழந்தைகள்..
அடுத்த கோடைக்காக ஏங்கி....

அக்கரைப் பச்சை

கூலித் தொழில் செய்யக்
கூப்பிட்டார் அதை
நாடி நம்சனங்கள் சென்றனரே!

ஏர் ஓட்டிச்செல்லும்
தொழில் மறந்து
கார் ஓட்டிச் செல்ல
மனம் விழைந்து
காலநேரம் தனை இழந்து
கணிணி முன்னே
கண் இழந்தனரே...

வீட்டை விற்றே
படித்த பிள்ளைகள்
நாட்டை விட்டே
பறந்தனரே...
சோற்றை உண்ட
கையாலே விஷக்
'கோக்'கை குடித்து
களித்தனரே...

கதை கவிதை
கற்பனை களிப்பினை
காசு பணத்தில்
மறந்தனரே...
குடும்பம் கோயில்
கலாச்சாரம்
குதூகலத்தை
இழந்தனரே...

கண்டோம் அவர்நிலை
பரிதாபம் அவர்க்கு
காதல் கூட கட்டாயம்
கண்ணித்திரையில்
'சாட்' செய்தே
காதல் கூட
கைக்கூடலாம்
குடும்பம் நடத்தல்
கூடுமோ?...

பாவம் அவர்தொழில்
படுத்தாச்சு
பாதிபேர் வேலை
போயாச்சு..
ஏறும் ஏற்றம்
பெரிதானால்
வீழும் வீழ்ச்சியும்
பெரிதாமே....

உழைப்பை மறந்து
போனதனால்
உடல் நலங்குன்றிப்
போயினரே...
உணர்வோம் இதனை
இப்போதே
உழைப்பை எள்ளி
நகையாதே

படித்த படிப்பை
நாட்டிற்கே
பயன்படச் செய்வோம்
இந்நாளே..
திறமையுடன் நற்
தொழில் செய்தே
உற்பத்தி திறனைப்
பெருக்கிடுவோம்...

உலகில் தொழில்கள்
எல்லாமே
உழவை நம்பி
உள்ளதனால்
உடலின் உழைப்பை
தள்ளாமல்
ஊக்கம் கொள்வோம்
உறுதியுடன்...

நாட்டின் நிலமை
சீராக
நாடி தொழில் பல
செய்திடுவோம்.
வரப்புயர
நீர் உயரும்
நீ உயர
நாடுயரும்
நாடுயர
நாம் உயர்வோம்...
நன்றாய் இதை
நாம் உணர்வோமே....


தீயிற் கொடியதோ தீ

நெஞ்சை இருளாக்கி நேர்மை யழித்துநல்லோர்
அஞ்சும் பகைவளர்த்து நம்மையேகொல் வஞ்சகத்தின்
வாயிற்சேர் பேரா சைபொறாமை கோபமெனுந்
தீயிற் கொடியதோ தீ