Saturday, April 04, 2020

மின்னற் பொழுதுகள்

வாழ்க்கை பயணத்தில் சில
மின்னல் பொழுதுகள்...

நம்மை நமக்கே 
அடையாளம் காட்டும் 
அர்த்தம் நிறைந்த நிமிடங்கள்...

அவனுக்கு!

அரும்பு மீசை
தோன்றிய பொழுது
முதன் முதலாய் ஒரு
ஆண் மகனாய் 
தன்னை உணர்ந்த 
அழகிய தருணம்...
மறக்க முடியா
மின்னல் பொழுது!!

அவளுக்கு

தினமும் சென்ற பாதைதான்
திரும்பி அவன் பார்த்த பொழுது
பெண்மையை உணர்ந்து
வெட்கம் கொண்ட
வெளிச்ச நிமிடம் 
அழகிய மின்னல் பொழுது!!

வெளியுலகில்
முதல்முதலாய்
அவமானப் பட்ட
அந்த நொடி...
தன்மானத்தை 
தட்டி எழுப்பியத் தருணம்...
நம்மைச் செதுக்கிய
நல்லதொரு நிமிடம்...

யாருக்கில்லை அந்த 
அற்புத மின்னல் பொழுது!!

முதல் வெற்றி
வாசல் தட்டிய 
வசந்த நிமிடம்...

காதல் சொன்ன
கணப் பொழுது...

வலியின் உச்சத்திலும்
பிள்ளை ஈன்ற
பாசப் பொழுது

கையேந்திய பிள்ளை
கண்ணோடு கண் நோக்கி
புன்னகைத்த
பொன்னான பொழுது...

தாயின் சிதையில் 
தீயை மூட்டிய
நெஞ்சைப் பிசையும் 
நிமிடங்கள்...

யாருக்கும் உண்டு
இப்படி சில நிமிடங்கள்...
வாழ்வில்
மறக்க முடியா
மின்னல் பொழுதுகள்...

Friday, April 03, 2020

ஒற்றை எதிரி

தெருவோரம்
குப்பை இல்லை
சந்தையிலே 
சண்டை இல்லை ...

சுத்தம் என்பதை
சமூகம் உணர்ந்தது
சத்தம் இன்றி
சாலைகள் இருந்தன...

வண்டியில் சென்ற
மக்களைப் போலீஸ்
வணங்கிச் சொன்னது
வீட்டில் இருக்க...

வீட்டில் இருந்தவர்
உணவை வீணாக்காமல்
சமைத்து உண்டனர்
தருமம் செய்தனர்...

அரசு
'அதிகார' திமிரின்றி
அமைதி காத்தது...
தேக்கம் இன்றி 
செயல்கள் நடந்தது...

சிந்தனை ஒன்றாய்
தேசம் மலர்ந்தது

நச்சுக் கிருமியே!!
ஒற்றை எதிரி நீ

உன்னை வீழ்த்த
ஒற்றுமை கண்டது
இந்தியா
ஒன்றாய் நின்றது...

சற்றே

திரும்பிப் பார்க்கிறேன்
'சுதந்திர இந்தியா'...

ஒற்றை எதிரி
வீழ்த்தப் பட்டதும்
வீழ்ந்து விட்டதே
ஒற்றுமை, அமைதி...

எத்தனை பிரிவுகள்..
எத்தனை சண்டைகள்...

இன்றைய
'ஒற்றை எதிரி' நீ
உன்னை 
விட்டு விடுவதா?
விரட்டி அடிப்பதா?!!!





Tuesday, March 31, 2020

கடல்

அலை கடலின் ஓசை
ஆழ் கடலில் இல்லை...

ஆழ் கடலின் அமைதி
அலை கடலில் இல்லை...

அலைகடல் ஓயாது
ஆழ்கடல் பேசாது...

சிந்தனையில் 
ஆழ்கடல் அமைதி 
அறிவின் துவக்கம்... 

செயலில்
அலைகடல் ஆரவாரம்
இயக்கத்தின் அடையாளம்... 

கடலின் ஆழம் 
அலையில் தெரியாது...
அலைகள் இன்றி
ஆழ்கடல் கிடையாது....

சிந்தனை 
செயலுக்கு அடிப்படை
செயல்கள் இன்றி
சிந்தனை சிறக்காது.... 

நிழல்கள் நகர்ந்த பொழுது...

நிழல்கள் 
நகர்ந்த பொழுதுதான்
'நான் '
நிலைத்து நின்றேன்...

தாயின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
தானாக எழுந்து 
நடக்கலானேன்...

தந்தையின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
எனக்கென
தடம் ஒன்று 
இருக்கக் கண்டேன்...

நல்லாசிரியர் நிழல் 
எனைவிட்டு 
நகர்ந்த பொழுது, 
என் அறிவின் ஒளியில் 
இயக்கம் கொண்டேன்...

இணையில்லா
ஈசனருள்
இருக்கும் வரையில் 
வாழ்வில் 
இருள் என்பதே
இல்லை கண்டேன்!!. 

Sunday, March 29, 2020

சிந்தனைகள் சந்தித்தால்

சிதறிய எண்ணங்களை
சீராக்கி சேர்க்கிறது...
செயற்கரிய செய்கைக்கு 
'சிந்தனை' உரமாகிறது...

நல்லவர்கள் சிந்தித்தால் 
சிந்தனைகள் சந்தித்தால்...
நானிலத்தே நன்மைகள் 
நமக்கெல்லாம் விளைகிறது...

மாறாக சிந்திப்போர் 
மனத்தாலும் சந்தித்தால்....
தீராத துன்பங்கள் 
தீயாக சுடுகிறது....

சொல்லோடு சிந்தனை 
மொழிவழி சந்தித்தால்...
பொருளோடு பொருந்தியது 
நற்கவிதை ஆகிறது...

சிறப்பான சிந்தனை 
செயலோடு சந்தித்தால்...
மறுக்காமல் வெற்றிகள்
முன்வந்து நிற்கிறது...

மறக்காதே! சிந்தனையே
மனிதருக்கு வரமாகும்...
தவறாதே உள்ளத்தில் 
சிந்தனையைச் தெளிவாக்கு....

கொரானா

எண்ணங்கள் ஒன்றானால்
எளிதாகும் நம்முயற்சி
கொன்றழிக்கும் கொரானாவை
கெடுத்தழிப்போம், நம்மிடையே
இன்றைக்குத் தேவையெல்லாம்
இடைவெளிதான், சிந்திப்பீர்!
நன்றாகக் 'கை'கழுவி 
நலம்காப்பீர் நல்லோரே!!