Saturday, September 11, 2021

பாரதி நினைவில்

படிப்போர்க் கின்பம் பாரதியின்
பாட்டில் உண்டு பாரதிலே
படைப்போர்க் குண்டு பாடங்கள்
பக்தி, வீரம், காதலையே
சுவைப்போர்க் குண்டு தெள்ளமுது
சொல்லில் ஆழ்ந்த கருத்ததிலே 
விழைவோர்க் குண்டு விண்ணளவு 
விரிந்த பார்வை, மெய்யறிவு...

 

Wednesday, June 09, 2021

நலம் தா ஞாயிறே !!!

எனது வானில் 
வெளிச்சம் தந்தே
என்னை இயக்கும்  சூரியனே! உன்
ஒற்றைக் கதிரால்
உயிரைத் தொட்டு
உவகைத் தந்திட வா!யெதிரே!

ஏழை இவளின் 
இதயம் தைக்க
ஏன்நீ விழைந்தாய் இன்னுயிரே! என்
எண்ணம் மனத்தில் 
இனியும் வேண்டாம் 
எனறே மறைந்து நின்றனையோ!

கண்ணில் மறைந்தால்
கதியென் னாகும்
கருணைக் காட்டு கதிரவனே! உன்
காலச் சுழற்சியில் 
காண்பவர் ஆயிரம் 
கடுப்போ என்தன் எதிர்வரவே! 

விருப்பு வெறுப்பு
எதுவும் இன்றி
ஒன்றாய் காண்பது உன்னியல்பு! இன்று 
நெருப்பாய் என்தன் 
நினைவைத் தள்ளி 
வதைப்பது சரியோ!  நீயியம்பு...

எனது வானில் 
வெளிச்சம் தந்தே
என்னை இயக்கும்  சூரியனே! உன்
ஒற்றைக் கதிரால்
உயிரைத் தொட்டு
உவகைத் தந்திட வா!யெதிரே!

Sunday, May 30, 2021

கத்தி யின்றி ரத்த மின்றி

கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று நடக்குது...
சத்தி யத்தின்  நித்தி யத்தை
சற்ற சைத்துப் பார்க்குது...

குதிரை யில்லை யானை யில்லை 
கொல்வ திங்கோர் கிருமியே... 
எதிரில் நிற்கும் எவரென் றாலும் 
எடுத்துக் கொள்ளு மாவியை...

ஒண்டி யண்டி குண்டு விட்டிங் 
குயிர்ப றித்த லின்றியே 
மண்ணில் வந்து மூச்ச டைத்து 
மாந்தர் தம்மை மாய்க்குதே...  

கண்ட துண்டு கேட்ட துண்டு 
காய்ச்சல் கொல்லு மென்பதை
எண்ணி றந்த உயிர்கள் சாவ
தென்ப திங்கே கொடுமையே...

முகத்தை மூடி கையைக் கழுவி
முயன்று தடுக்க வேண்டுமே!
முடிவில் லாமல் தாக்கு மிந்த
முகமில் லாத பகைவனை...

தள்ளி நின்று தனித்தி ருந்து 
கூட்டங் கும்பல் தவிர்க்கவே! 
மெல்ல மெல்ல மறையு மிந்த 
மனித குலத்தி னெதிரியே!!!  

Friday, April 02, 2021

காத்திருப்பு

தாகூரின் இந்தப் பாடல் ஆழ்வார்களின்/நாயமார்களின் பாடலைப் போல் இறைவனை நாயகன் பாவனையில் பாடுவதாய் அமைந்திருக்கும். இறைவனை அடைவதையே தன் விருப்பமாக ஆண்டாள் திருப்பாவையில் பாடவில்லையா! அது போலவே இறைவனை அடையும் நாளுக்காக காத்திருப்பதையே இப்பாடலில் காட்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் பற்ற முடியும் என்பதைத்தானே ஆழ்வார்களும்/ நாயன்மார்களும்  காட்டினார்கள். அவன் அருளுக்காகத் தான் காத்திருக்கிறார்.

தாகூரின் இப்பாடலைத் தழுவி ஆசை மட்டுமே காரணமாய் முயன்று எனது கவிதையை ஆக்கியிருக்கிறேன். 

Waiting

The song I came to sing
remains unsung to this day.
I have spent my days in stringing
and in unstringing my instrument.

The time has not come true,
the words have not been rightly set;
only there is the agony
of wishing in my heart…..

I have not seen his face,
nor have I listened to his voice;
only I have heard his gentle footsteps
from the road before my house…..

But the lamp has not been lit
and I cannot ask him into my house;
I live in the hope of meeting with him;
but this meeting is not yet.

காத்திருப்பு

எனது வாழ்வின் பாடல்
இன்னும்
இசைக்கப் படாமலே
இருக்கிறது

எனது
வீணையின் நரம்புகளை
நான் சரிசெய்து கொண்டே
இருக்கிறேன்

எழுகின்ற ஆசையால்
எரிகின்ற நெஞ்சத்தில்
எழுதாத என்கவிக்கு
இசையமைத்துப் பார்க்கின்றேன்…

தேடலின்
சுமைமட்டுமே
துணையாகக்
காத்திருக்கின்றேன்…

நான் அவன்
முகம் கண்டதில்லை
குரல் கேட்டதில்லை
என்றாலும்

என்னருகில் அவன்
காலடி ஓசையைக்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றேன்…

அழைத்தால்
வருவானோ!!
அகம் நெகிழ
நினைத்தால் வருவான்…

இதய வாசல் திறந்தால்
இருள் விலகினால்
வெளிச்சமாய்
அவன் வருவான்…

அவன் வரும் நாளில்
எனது வாழ்வின் பாடல்
இனிமையாய்
இசைக்கப்படும்…

Sunday, March 21, 2021

நதிக்கரை நாகரிகம்


நாணலே மெத்தையாய்

நாணமே போர்வையாய்

நல்லதொரு தூக்கம்

விடியலை வரவேற்கும்  விழிப்பு

உள்ளத்தில் அமைதி

உண்மையால் உறுதி

ஆற்றை குடித்து

காற்றில் மிதந்து

காய் கனி

கடித்து உண்டு

வேட்டை யாடியும்

விளை யாடியும்

சில மணிகள்

இயற்கையைப் படித்து

இதயத்தால் வாழ்க்கை

கள்ளமில்லா காதல்

கடுப்பில்லா மனம்

களைப்பில்லா குணம்

காட்டாற்று வெள்ளம்

கரைப்புரள

காலம் கரைக்கட்டியது

ஏட்டைக் கிழித்தது

எழுத்தாணி

இன்றைய நாகரீகம்

எழுந்தது…

Monday, March 15, 2021

கம்பன் கவித்தேன்

'கம்பன் கவித்தேன்' என்ற என் இன்னுமொரு வலைத்தளம் கம்பனை அறியும் ஆவலில் துவங்கப்பட்டது.
தொடர்ந்து கம்பன் கவியின் அழகை இங்கு இரசிக்கலாம்