Sunday, August 13, 2023

அலுவலகம்


இது ஒரு நீண்ட
இரயில் பயணம்…

25 முதல் 60 வயது வரைத்
தொடரும் நெடிய பயணம்

அறியாத வயதில்
ஆசையாய் ஏறிக்கொள்வோம்

அங்கும் இங்கும் தேடி
நமது இடத்தை கண்டிபிடிப்போம்

நமது இடம்
நமக்குப் பிடித்தது தானா?

இருக்கலாம்
இல்லாமலும் போகலாம்…

நமது உடன் பயணம் செய்பவர்கள்
நமக்கு பிடித்தவர்களா?

இருக்கலாம்,
இல்லாமலும் போகலாம்…

உடன் வருபவர்கள்
ஜாதி, இனம், மொழி என
எப்படி பட்டவரானாலும்
பயணம் ஒன்றுதான்

சிலருக்கு
ஜன்னல் அருகில் இடம்
கிடைக்கும்…

சிலருக்கு
மத்தியில் …

சிலருக்கோ
பர்த் கிடைக்கும்

ஜன்னல் அருகில்
இடம் கிடைத்தாலும்
முனகிக் கொண்டே சிலர்.

சிலர் ஆடிப்பாடி
கொண்டாட்டமாய்…

ஆர்வமாய் சிலர்
இங்கும் அங்குமாய்
திரிந்தபடி...
  
சிறிது தூரம் சென்றதும்
ஆட்டம் பாட்டம் குறைந்து
தனக்கான உணவை
வைத்துக் கொண்டு
பயணம் தொடரும்..

என் இடம், உன் இடம்
என்ற பாகு பாடு மறைந்து
உணர்வுகள் பரிமாறப்பட்டு
அமைதியாய் சில நேரம்…

சிலருக்கு
வாழ்க்கைத் துணையை
கூட பயணம் கொடுக்கும்

ஒரு சிலருக்கு
ஏசி அறை
கிடைக்கும்…

அனால் அங்கு
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்வதே
இல்லை….

சிலர் பேச வந்தாலும்
சிறிது நேரத்தில்
அமைதியாய் விடுவார்கள்

சிலரோ
முதல் வகுப்பில்
பயணிப்பார்கள்..

இவர்கள்
தனிமையைத்
தானாகத் தேடிக் கொண்டவர்கள்
யாரோடும் பேசமாட்டார்கள்.

தனக்கு வேண்டியதை
உதவியாளரிடம்
கேட்டுப் பெறுவார்கள்.

அவர்கள் அறை என்னவோ
பெரியதுதான்
அனால் உதவிக்குக் கூட
உள்ளே செல்ல முடியாது

60 வயதில்
ஒவ்வொருவராக
இறங்கி கொள்வார்கள்…

பயணிகள்
பிரியாவிடை கொடுப்பார்கள்
தொலைபேசி எண் கூட
பகிர்ந்து கொள்வார்கள்

அனால் பிரிந்ததும்
மிகச்சிலரே தொடர்வார்கள்

இரயில் விட்டு
இறங்கியப் பிறகு
வாழ்க்கை பொதுவானது

முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
என்பதெல்லம்
மறைந்துப் போகும்..

வாழ்க்கை பயணத்தில்
ஜாதி இனம் மொழி
என்று எல்லா
வித்தியாசங்களும் இருக்கும்
ஆனால்
இவற்றைத் தாண்டி
நாம் வளர்ந்து விடுவோம்…

சிலர் அந்த எண்ணத்துடன்
சிறிது தூரம் செல்வார்கள்
அனால் வாழ்க்கை
கற்றுக் கொடுக்கும்

சில சமையம்
மீண்டும் வருவோம்
சிலரை ஏற்றவோ
அல்லது இறங்குபவர்களை
வாழ்த்தவோ

அப்போது
நமது இடம்
யாரோ ஒருவருடையது…
அது நமது சொந்தமில்லை…

நாமோ அதைப் பற்றி
கவலைப் படுவதில்லை….

வாழ்க்கை பயணத்தை
அறிந்தவர்களாகிறோம்...