Friday, December 16, 2016

சென்னையில் மார்கழி

காரிருள் போர்வைக் கலையா திருக்கும்
மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது
கூர்வேல் விழியார் கூடி வரைந்த
வண்ணக் கோலம் வாசல் மறைக்கும்
எண்ணம் சிறக்க இருகரம் கூப்பி
அலையா மனதொடு கடுங்குளிர்த் தாங்கி
நிலைப்பே ரின்பம் நெஞ்சில் நிறுத்தி
கலையாம் இசையால் கண்ணனைப் பாடி
வெறுங்கா லோடு வீதியுலா வந்திடும்
திருமால் அடியார் திருத்தாள் தன்னை
பணிந்தே வணங்கிடும் பண்புடை பெண்கள்
அணிந்திடு பட்டும் பொன்னின் நகையும்
அவர்தம் சிறப்பை அழகாய்ச் சொல்லும்
கோவில் பக்கம் சிறுவர் தம்மை
பொங்கல் மணமே பெரிதாய் ஈர்க்கும்
பாட்டும் பரதமும் பக்தியோ டிணைந்து
பரவச மூட்டும் பாட்டுக்கச் சேரியில்
இப்படித்தான் இருந்தது எங்களூர் சென்னை
அன்றையப் பொழுதில் அணைத்தும் அருமையாய்
இன்றிவைக் குறைந்து இதயம் இருளாக
நல்லவைத் தேய்ந்து நலமிழந் தோமே!

சென்னையில் இன்று

கோலம் போட
வாசலின்றி
உயர்ந்தே நிற்கும்
அடுக்கு மாடி வீடுகள்

தூ' வென்று துப்பும் எச்சில்
தெருவெல்லாம் குப்பை தூசு
காலைக் கழிவு
கெட்டவார்த்தையோடு
எங்கும் பிச்சைக்காரகள்

பணத்தாசையால்
வாசனையூட்டப்பட்ட
வெற்றுப்பூ
வியாபாரம்

காசுக்காய்
கடவுளின் தாரிசனம்
ச்சி சீ
இதுதான்
இன்றயச் சென்னை..

மூக்கைத் துளைக்கும்
'மெனு' ஒன்றிருந்தால் தான்
பாட்டுக் கச்சேரிக்கும்
கூட்டம் வரும்..

பாட்டை விட்டு
பட்டை எடை போடும்
'இரசிக பெருமக்கள்'

இடையே
குத்தாட்டப் பாட்டோடு
கூப்பிடும் தொலைப்பேசி
சத்தமாய் பேசும்
சலவையுடை யணிந்த
பகட்டு மனிதர்கள்

விற்பவர், நுகர்வோர் என
விலைப் பொருளாகிவிட்ட
இசைக் கலை..

இசையை இரசிக்கும்
இரசிகர்கள் போய்
இரசிகருக்காய்
இசையை வளைக்கும்
விதமாய் விட்டது
வெற்றியின் இரகசியம்..

இன்றும் இருக்கத்தான் செய்கிறது
இன்னனிசையும்
இனிமையும்
நேர்மையும் ஒழுக்கமும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்

அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
நல்லவை நாடி
இறைவனை வேண்டியபடி
'வாழ்க! சென்னை.

Tuesday, November 15, 2016

வாழ்த்து

வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
   வளர்க உன்புகழ் வையகந் தன்னில்
சூழ்ந்து நல்லவர் நின்னுடன் நிற்க
   சொல்லில் தீதற சுவையுடன் கருத்தில்
ஆழ்ந்த சிந்தனை அறத்துடன் காட்டி
   அழகு செந்தமிழ் நாடகம் வளர்த்து
நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
   நீயும் நிந்திறன் செழிப்புற வாழ்க!

Sunday, July 31, 2016

உழைப்பு

பேப்பர் பேப்பர்
என்றே கூவி
பழைய பேப்பர் வாங்கிடுவார் -  மறு
சுழற்சிக் காக
கொடுத்தே இந்த
பூமி காக்க உதவிடுவார் - நாம்
செய்யும் தொழிலில்
சிறுமை இல்லை
நன்மை பெரிதாய் இருக்கையிலே-சிறு
குடிசைத் தொழிலும்
உயர்த்தும் உன்னை
உழைக்கும எண்ணம் வலுக்கையிலே...

Thursday, July 21, 2016

நல்லறிவு பெற்றவளாம் சுவாதி என்பாள்
   நண்பனென வந்தவனால் தாக்கப் பட்டாள்
பல்லுதிர பலரெதிரே வெட்டிக் கொல்ல
   பயந்ததனால் எவரெதையும் செய்யா நின்றார்
சில்லிட்டு, நெஞ்சடைத்து, சின்னப் பெண்ணின்
   சாவதனைக் கண்டொருவர் மாய்ந்தே போனார்
பல்வேறு காரணங்கள் புனைந்துக் கூறி
   பத்திரிக்கை பிரபலங்கள் பாய்ந்தே வந்தார்

புரியாத புதிராகும் நடந்த உண்மை
   பொல்லாத காலமதை புறத்தே தள்ளும்
அறியாத பருவத்தில் வலையில் சிக்கி
   அறிவற்ற செய்வோரை அதிகம் கண்டோம்
சரியென்றும் தவறென்றும் தெளிய நல்லத்
   தருணமிது தவறான பாதைத் தள்ளி
அறிவாலே ஆய்ந்தறிந்து கொள்வோம் உண்மை
   அன்பினையும் நட்பினையும் காப்போம் போற்றி

முகநூலின் முழுவிவரம் உண்மை இல்லை
   உணராமல் உறவாட வருமே தொல்லை
நகரத்து வாழ்வினிலே நட்பு ணர்வு
   நாடகமாய் ஆனதிலே அழிவே எல்லை
முகங்காட்டும் கண்ணாடி உளமா காட்டும்
   உண்மையதை ஊடகமா எடுத்து ரைக்கும்
பகலவனால் இருள்மறையும் காட்சித் தோன்றும்
  பகுத்தறிவே சரியானப் பாதைக் காட்டும்...

Friday, April 29, 2016

வாழ்த்து

இனிய சொல்லால்,செயற்திறத்தால்
   எங்கள் நெஞ்சில் நிறைந்திட்டீர்
எளிதில் அனுகும் இயல்பால் நீர்
   ஏற்றம் கொண்டீர், நன்மனத்தால்
பணியில் பெற்ற நல்லறிவை
   பகிர்ந்தீர் நாங்கள் பயனுறவே...
அணியால் சிறப்பு செய்யுளுக்கே...
   அதுபோல் நீவீர் இப்பணிக்கே...

பணியும் பெருமை என்றாற்போல்
   பண்பால் உயர்ந்தீர் உம்வாழ்வில்
கனியில் சுவைப்போல், செந்தமிழில்
   குறளின் நலன்போல் என்றென்றும்
குறையா செல்வம்,அன்போடு
   கூடும் சுற்றம், மனநிறைவு
நிலையாய் பெற்று நலம்வாழ
   நெஞ்சில் வணங்கி வாழ்த்துகின்றோம்....