சென்னையில் மார்கழி
காரிருள் போர்வைக் கலையா திருக்கும்
மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது
கூர்வேல் விழியார் கூடி வரைந்த
வண்ணக் கோலம் வாசல் மறைக்கும்
எண்ணம் சிறக்க இருகரம் கூப்பி
அலையா மனதொடு கடுங்குளிர்த் தாங்கி
நிலைப்பே ரின்பம் நெஞ்சில் நிறுத்தி
கலையாம் இசையால் கண்ணனைப் பாடி
வெறுங்கா லோடு வீதியுலா வந்திடும்
திருமால் அடியார் திருத்தாள் தன்னை
பணிந்தே வணங்கிடும் பண்புடை பெண்கள்
அணிந்திடு பட்டும் பொன்னின் நகையும்
அவர்தம் சிறப்பை அழகாய்ச் சொல்லும்
கோவில் பக்கம் சிறுவர் தம்மை
பொங்கல் மணமே பெரிதாய் ஈர்க்கும்
பாட்டும் பரதமும் பக்தியோ டிணைந்து
பரவச மூட்டும் பாட்டுக்கச் சேரியில்
இப்படித்தான் இருந்தது எங்களூர் சென்னை
அன்றையப் பொழுதில் அணைத்தும் அருமையாய்
இன்றிவைக் குறைந்து இதயம் இருளாக
நல்லவைத் தேய்ந்து நலமிழந் தோமே!
சென்னையில் இன்று
கோலம் போட
வாசலின்றி
உயர்ந்தே நிற்கும்
அடுக்கு மாடி வீடுகள்
தூ' வென்று துப்பும் எச்சில்
தெருவெல்லாம் குப்பை தூசு
காலைக் கழிவு
கெட்டவார்த்தையோடு
எங்கும் பிச்சைக்காரகள்
பணத்தாசையால்
வாசனையூட்டப்பட்ட
வெற்றுப்பூ
வியாபாரம்
காசுக்காய்
கடவுளின் தாரிசனம்
ச்சி சீ
இதுதான்
இன்றயச் சென்னை..
மூக்கைத் துளைக்கும்
'மெனு' ஒன்றிருந்தால் தான்
பாட்டுக் கச்சேரிக்கும்
கூட்டம் வரும்..
பாட்டை விட்டு
பட்டை எடை போடும்
'இரசிக பெருமக்கள்'
இடையே
குத்தாட்டப் பாட்டோடு
கூப்பிடும் தொலைப்பேசி
சத்தமாய் பேசும்
சலவையுடை யணிந்த
பகட்டு மனிதர்கள்
விற்பவர், நுகர்வோர் என
விலைப் பொருளாகிவிட்ட
இசைக் கலை..
இசையை இரசிக்கும்
இரசிகர்கள் போய்
இரசிகருக்காய்
இசையை வளைக்கும்
விதமாய் விட்டது
வெற்றியின் இரகசியம்..
இன்றும் இருக்கத்தான் செய்கிறது
இன்னனிசையும்
இனிமையும்
நேர்மையும் ஒழுக்கமும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
நல்லவை நாடி
இறைவனை வேண்டியபடி
'வாழ்க! சென்னை.
2 comments:
அருமை...
நன்றி
Post a Comment