Wednesday, April 10, 2024

கீதாஞ்சலி 4

இறைவா

 

நீ எங்கும் நிறைந்திருப்பவன்

எனவே

நீ வாழும்

இவ்வுடலை

மிகவும் பரிசுத்தமாக

வைத்திருக்க முயல்கிறேன்…

 

பகுத்தறிவை எனக்குள்

விதைத்தவன் நீ

எனவே

எனது சிந்தனையிலிருந்து

பொய்களை

விலக்கிடுவேன்…

 

எனது உள்ளத்தில்

நீ உறைந்திருக்கிறாய்

எனவே

எனது உள்ளத்திலிருந்து

தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி

அன்பை  வெளிப்படுத்த முற்படுவேன்

 

எனது

செயல்களுக்கெல்லாம்

வலிமையை நீயே தருகிறாய்

எனவே

எனது செயல்களின் மூலமே

உன்னை வெளிப்படுத்த முயல்கிறேன்

Sunday, April 07, 2024

கீதாஞ்சலி 3

இறைவா!

அற்புதமான

உனது இசையை நீ

எப்படி இசைக்கிறாய்..

 

நான் அமைதியோடு

ஆச்சரியத்தில்

மூழ்கிபோகிறேன்..

 

உனது இசையின்

ஒளி

இவ் உலகையே

வெளிச்சமாக்குகிறதே!

 

உனது இசை

வானவெளியெங்கும்

பரவியிருக்கிறதே!

 

உனது

இசையின் பெருவெள்ளம்                           

கடினமான

பாறைகளையும்

உடைத்து

பெருகுகிறதே!

 

உனது இசையோடு

இசைக்க

நானும் எண்ணுகிறேன்

ஆனால்

வார்த்தையின்றி

தவிக்கிறேன்.

 

எனது

வார்த்தைகள்

கவிதையாய்

பரிணமிக்க முடிவதில்லை.

அதனால்

பரிதவிக்கின்றேன்

 

இறைவா

 

உனது

இசையின்

முடிவற்ற வலைக்குள்ளே

என் இதயம்

சிக்குண்டுவிட்டதே!

 

தாகூர்

இயற்கை வழியாக இறைவனைப் பார்க்கிறார்.

இயற்கையின் ஒவ்வொரு அழகும்

இறைவனை காட்டுவதல்லவா!

 

அதனால் தான் பாரதியும்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

என்கிறார் போலும்.

 

தொடர்வோம்..