Sunday, April 17, 2022

புனித வெள்ளி

ஆணியில் அறைந்தது
ஆணவம் செய்தது… 

அளவிலா கருணையோடு
அன்றுயிர்த் தெழுந்த
ஆண்டவன் செய்கையோ
அன்பின் எல்லையது...

மாயையால் மனிதர்
மாண்பினை இழந்தனர்
மாசிலா தேவனோ
மன்னித்து அருளினார்...


இன்றிந்த நாளிலே
இறைவன் அருளினை
இதயத்தில் ஏற்றுவோம்...
என்றும் போற்றுவோம்....

புனித வெள்ளி
நம் மனத்தை  புனிதமாக்கட்டும்!!!

உமா

Thursday, March 31, 2022

இனியவைகூறல்



வேலினை ஒத்த கண்கள்

வில்லினை ஒத்த நெற்றி

தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும்

தாமரை நிறத்தால் ஒக்கும்

தோளிரண்டு மூங்கில் என்றும்

துடியிடை மின்னல் போலும்

ஆயிழை தன்னைக் கண்டார்

யாரவள் மனத்தைக் கண்டார்???

Thursday, March 10, 2022

பூவா? புயலா? பெண்!!

அன்று!

அவள் கண்களில்

ஒளி இருந்தது

அவளோ!

இருட்டு அறையில்

சிறைப்பட்டிருந்தாள்…

 

சுதந்திர வெளிச்சம்

சூழ்ந்த போது

அவள் பார்வையோ

பறிக்கப்பட்டது…

 

பறந்த வெளியில்

பாதை தெரியவில்லை…

 

அடிமைச் சிறைவிட்டு

அடியெடுத்து வைத்தாலும்

ஆண்களின்  பார்வை

அச்சமூட்டியது…

 

அடிமைக் கூடு

அழிக்கப்பட்டப் போது

அவளது

அழகிய சிறகுகள்

சிதைந்தே இருந்தன…

 

எதிர்பார்ப்புகளால்

அவள்

இயக்கம்

தடுக்கப்பட்டது…

 

உலகம்

பட்டுப்பூச்சியை

பருந்தாய்

பறக்கச் சொன்னது…

 

பறந்தால் மட்டுமே

பெண் எனச் சொன்னது…

 

இருட்டு அறையிலும்

இயங்கிய கண்கள்

வெளிச்சம் கண்டு

விலகிச் செல்லுமா?

 

சின்னச் சிறகை

மெல்ல விரித்தே

வானம் அளந்தது.

வண்ணத்துப் பூச்சி..

 

பறந்த வெளிதான்

பாதை வகுத்து

பயணம் தொடர்ந்தாள்

பெண்

 

கிழட்டுப்

பார்வைகளை

கிழித்து எறிந்தாள்

 

புதிய உலகம்

புதிய பார்வை

புதிய பாதை

புதிய பயணம்

 

புதிதாய் என்றும்

பொலிவாள் பெண்…

 

பூவும் அல்ல

புயலும் அல்ல

 

அவள் பெண்…


(சென்னைத் துறைமுக தமிழ்ச்சங்க பெண்கள் தின சிறப்பு இதழுக்காக எழுதியது) 

Friday, February 18, 2022

முடிவு உன்கையில்

முடியாது என்பது
ஒரு கெட்ட வார்த்தை...
 
பொய்யை, 
பழிச்சொல்லைக் காட்டிலும்
பெரும் கேடு 
விளைவிக்கக்கூடியது...
 
உறுதியை 
உற்சாகத்தை
உடைக்கக்கூடியது...
 
முடியாது 
உறுதியற்ற மனத்தின் வெளிப்பாடு...
 
முடியாது என்பது 
முயற்சியின்மையின் மகன்
செயலின்மையின் சகோதரன்
சோம்பேறித் தனத்தின் தலைவன்
 
முடியாது
நம்பிக்கையை
கனவுகளை 
கலைக்கக்கூடியது
குறிக்கோளை 
குலைக்கக்கூடியது
 
முடியாது என்ற வார்த்தை
வெட்கக் கேடு,
சொல்லவும் நா கூச வேண்டியது

முடியாது 
உன்னில் புகுந்தால்
உன்னை உடைக்கும்
 
முடியாது என்பதை
முழுமனத்துடன்
வெறுத்துத் தள்ளிவிடு
விலக்கி எழு.
 
முடியாது
தைரியத்தின்
தன்னம்பிக்கையின்
உழைப்பின் எதிரி
 
உனது 
தைரியத்தின் கூரிய வாளால்
உழைப்பின் உறுதியால்
தன்னம்பிக்கைத் தனலால்
உடைத்து எரி
 
நம்பு!!
 
முடியாததை
முடித்து வைப்பது 
முடியும் என்ற முடிவு மட்டுமே!!

உன்னால் முடியும் நம்பு!!!

Edgar Albert Guest ன் Can't என்ற கவிதையின் தழுவல். எனது முயற்சி..