Showing posts with label எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம். Show all posts
Showing posts with label எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம். Show all posts

Sunday, May 09, 2010

கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்

இத் தலைப்பில் திரு கபீரன்பன் அற்புதமான கட்டுரை எழுதியுள்ளார். அதன் கருத்தை சற்றே மரபு பாவில் அமைக்க நினைத்தேன். [கபீரின் கனிமொழிகள் என்ற கபீரன்பனின் பக்கத்தை அறிமுகப்படுத்திய திரு.அவனடிமையாருக்கு என் நன்றிகள்]
என் முயற்சி
விளம் மா விளம் மா
விளம் விளம் மா

சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழிக்கிறேன் நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!

Tuesday, May 04, 2010

இயற்கை வளங்களைக் காப்போம்.

புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா

கலைகள் வளரும் கவலைக் குறையும்
கருணை நிலைக்கும் உலகில்
விலையில் மணியும் பொருட்கள் பலவும்
விளையும் பெருகும் வளனும்
மழையும் பொழியும் உயிர்கள் மகிழ்
மரத்தை வளர்ப்போம் இயற்கை
வளத்தைச் சிதைக்க துயரம் நமக்கே
வறுமைப் பிடியில் உழல்வோம்.

Thursday, April 22, 2010

சென்னை மாம்பல மகிமை

வீதியில் ஓடும் வாகனம் தீய
விடமெனக் கக்கிடும் புகையை
ஆதியும் இன்றி அந்தமும் இல்லா
ஆண்டவன் போல்பெருங் கூட்டம்
காதினை அடைக்கும் கத்திடும் ஓசை
கரைந்திடும் கையிரு காசும்
ஈதெலாம் சென்னை மாம்பலந் தன்னில்
இருப்பினும் போய்வரல் இனிதே!

Thursday, April 15, 2010

இயற்கை வளங்களைக் காப்போம் 1

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

நாட்டிலே உள்ள நலங்களும் கோடி
நாமதை நன்குணர்ந் திங்கே
காட்டினை வளர்த்தே ஆற்றினை இணைத்து
காற்றினை மாசற காத்தே
வீட்டினில் துவங்கி வீதியில் எங்கும்
விளக்கினில் சூரிய ஆற்றல்
கூட்டிட வெப்பம் குறைந்திடும் புவியும்
குளிர்ந்துயிர் வாழ்ந்திடும் இனிதாய்.

துவளாது உழைப்பீர்.

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து
காத்திடல் கூடுமோ? சிறிய
ஊற்றது பெருகி ஆறென ஓடி
உயிர்களுக் குறுதுணை யாகும்
தோற்றிடத் தோல்வி திடமனத் தோடு
துவண்டிடா துழைப்பவர் தம்மை
போற்றிடும் உலகம் பொருளதும் சேரும்
புகழுடன் வாழ்திடு வாரே!

Monday, April 12, 2010

கோடைக்காலம்

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
வியர்வையில் நனைந்திடும் மக்கள்
சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
முயன்றிடார் வாழ்வைப் போல
மெல்லவே நகர்ந்து நோய்ப்பல தந்து
மிரட்டியே விலகிடும் நாட்கள்.