Thursday, September 14, 2023

நிலவே!!!

நிலவே!

உன்னை நாங்கள்

அடைந்து விட்டோம்!

 

எவ்வளவு ஆனந்தம்

எங்களுக்கு!!

 

இந்திய மக்களின்

இதயத் துடிப்பல்லவா நீ!

 

ங்கள் பாட்டிமார்கள்

உன்னைக் காட்டித்தான்

தம் பிள்ளைகளுக்கு

உணவளித்தார்கள்

 

எங்கள் தாய்மார்களோ!

நிலா நிலா ஓடிவா!

என்று உன்னைத்

துணைக்கழைத்தார்கள்...

 

நாங்களோ !

உன்னை அடைந்தே விட்டோம்..

 

எவ்வளவு ஆனந்தம்

எங்களுக்கு!!

 

ஒருவேளை

நாளை எம் பிள்ளைகள்

உன்னை

சொந்தம் கொண்டாடுவார்களோ!

 

நிலவே

உனக்கும்

எங்களுக்குமான

இந்த இடைவெளியை

 

அன்று

கற்பனையால் கடந்தோம்..

 

இன்று

அறிவியலால் அளந்தோம்..

 

நிலவே

உன் அழகு

இன்றும் எங்களை

வசப்படுத்துகிறது..

 

எங்கள் குழந்தைகளுக்கு

கற்பனையை

கலையை

உன்மூலமாகத்தான்

சொல்லித்தருகிறோம்…

 

எங்கள் காதலுக்கும்

கவிதைக்கும்

நீயே அடிப்படை…

 

ஆனாலும்

 

நிலவே!

சற்று தள்ளி நில்

மனிதனை

அருகில் வரவிடாதே!

 

உன் அழகு

கனிமங்களை

அவன்

அள்ளிக் கொள்ளலாம்…

 

அழகிய பூமியில்

ஆயிரம்

கோடுகள்

கிழித்தவர்கள் நாங்கள்..

 

இன்றும்

நடந்துக் கொண்டே

இருக்கிறது

கோடுகளுக்கான

சண்டை …

 

உன்னையும்

துண்டாடவிடாதே!

 

வடதுருவம்

தென் துருவம்

என்று

இப்பொழுதே

துண்டாடுகிறார்கள்..

 

மனிதனை

அண்டவிடாதே!

 

எங்கள் சந்திராயனைத்

தூங்கவிட்டுவிடு

சந்திரனே!

 

உன் அழகை

கனிமங்களை

மனித இச்சைக்கு

அளித்துவிடாதே!

ஆசைக்கு

அளவில்லாதவர்கள் நாங்கள்

 

நிலவே!

அழகே!

உன்னைத் தொட்ட

எங்கள்

இதயத்தில்

உன் காதல்

என்றும் நிலைத்திருக்கும்…

 

எங்கள்

ஓவியத்திற்கு

வடிவமாய்

 

கவிதைக்குப்

பொருளாய்..

 

காதலுக்கு

துணையாய்

 

மட்டுமல்ல

 

எங்கள்

அறிவியல் அறிவிற்கும்

சாட்சியாய்..

 

என்றும், என்றும்

நீயே…

நிலவே !!!

Sunday, August 13, 2023

அலுவலகம்


இது ஒரு நீண்ட
இரயில் பயணம்…

25 முதல் 60 வயது வரைத்
தொடரும் நெடிய பயணம்

அறியாத வயதில்
ஆசையாய் ஏறிக்கொள்வோம்

அங்கும் இங்கும் தேடி
நமது இடத்தை கண்டிபிடிப்போம்

நமது இடம்
நமக்குப் பிடித்தது தானா?

இருக்கலாம்
இல்லாமலும் போகலாம்…

நமது உடன் பயணம் செய்பவர்கள்
நமக்கு பிடித்தவர்களா?

இருக்கலாம்,
இல்லாமலும் போகலாம்…

உடன் வருபவர்கள்
ஜாதி, இனம், மொழி என
எப்படி பட்டவரானாலும்
பயணம் ஒன்றுதான்

சிலருக்கு
ஜன்னல் அருகில் இடம்
கிடைக்கும்…

சிலருக்கு
மத்தியில் …

சிலருக்கோ
பர்த் கிடைக்கும்

ஜன்னல் அருகில்
இடம் கிடைத்தாலும்
முனகிக் கொண்டே சிலர்.

சிலர் ஆடிப்பாடி
கொண்டாட்டமாய்…

ஆர்வமாய் சிலர்
இங்கும் அங்குமாய்
திரிந்தபடி...
  
சிறிது தூரம் சென்றதும்
ஆட்டம் பாட்டம் குறைந்து
தனக்கான உணவை
வைத்துக் கொண்டு
பயணம் தொடரும்..

என் இடம், உன் இடம்
என்ற பாகு பாடு மறைந்து
உணர்வுகள் பரிமாறப்பட்டு
அமைதியாய் சில நேரம்…

சிலருக்கு
வாழ்க்கைத் துணையை
கூட பயணம் கொடுக்கும்

ஒரு சிலருக்கு
ஏசி அறை
கிடைக்கும்…

அனால் அங்கு
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்வதே
இல்லை….

சிலர் பேச வந்தாலும்
சிறிது நேரத்தில்
அமைதியாய் விடுவார்கள்

சிலரோ
முதல் வகுப்பில்
பயணிப்பார்கள்..

இவர்கள்
தனிமையைத்
தானாகத் தேடிக் கொண்டவர்கள்
யாரோடும் பேசமாட்டார்கள்.

தனக்கு வேண்டியதை
உதவியாளரிடம்
கேட்டுப் பெறுவார்கள்.

அவர்கள் அறை என்னவோ
பெரியதுதான்
அனால் உதவிக்குக் கூட
உள்ளே செல்ல முடியாது

60 வயதில்
ஒவ்வொருவராக
இறங்கி கொள்வார்கள்…

பயணிகள்
பிரியாவிடை கொடுப்பார்கள்
தொலைபேசி எண் கூட
பகிர்ந்து கொள்வார்கள்

அனால் பிரிந்ததும்
மிகச்சிலரே தொடர்வார்கள்

இரயில் விட்டு
இறங்கியப் பிறகு
வாழ்க்கை பொதுவானது

முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
என்பதெல்லம்
மறைந்துப் போகும்..

வாழ்க்கை பயணத்தில்
ஜாதி இனம் மொழி
என்று எல்லா
வித்தியாசங்களும் இருக்கும்
ஆனால்
இவற்றைத் தாண்டி
நாம் வளர்ந்து விடுவோம்…

சிலர் அந்த எண்ணத்துடன்
சிறிது தூரம் செல்வார்கள்
அனால் வாழ்க்கை
கற்றுக் கொடுக்கும்

சில சமையம்
மீண்டும் வருவோம்
சிலரை ஏற்றவோ
அல்லது இறங்குபவர்களை
வாழ்த்தவோ

அப்போது
நமது இடம்
யாரோ ஒருவருடையது…
அது நமது சொந்தமில்லை…

நாமோ அதைப் பற்றி
கவலைப் படுவதில்லை….

வாழ்க்கை பயணத்தை
அறிந்தவர்களாகிறோம்...

Saturday, August 12, 2023

இரகசியம் அழகானது

பூவின் இரகசியம்

தேன்

மெதுவாக

வண்டை அழைக்கும்….

 

புல்லின் இரகசியம்

பனித்துளி

சூரியனோடு

சொந்தம் கொண்டாடும்…

 

மேகத்தின் இரகசியம்

மின்னலாய்

வெளிப்படும்

 

நீள் நதியின்

இரகசியம்

வயல்களில்

விளைச்சலாய்…

 

காற்றின்

இரகசியம்

தென்றல்

 

கடற்கரையின்

இரகசியம்

கிளிஞ்சல்கள்…

 

மண்ணின்

இரகசியம்

மரங்களாய்…

 

வானோ

வெள்ளி நீர்த் தூறலாய்…

 

ஒளி இருளோடு

பேசும் இரகசியம்

நட்சத்திரங்கள்…


இருள் ஒளியோடு

பேசும் இரகசியம்

நிழல்களாய்...

 

குழந்தையின்

இரகசியம்

சிரிப்பு…

 

பெண்ணின்

இரகசியம்

பார்வை…

 

ஆணின்

இரகசியம்

அவன் அணைப்பில்….

 

எழுத்தின்

இரகசியம்

இனிய

கவிதையாய்….

 

இரகசியம் அழகானது…

Monday, July 24, 2023

நட்பு

எனது
தொலைபேசியிலிருந்து
அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்

நட்பு என்ன
பணமா?
பதவியா?
இல்லை
வலைத்தளங்களில் விழும்
“லைக்’ குகளா?

அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்.

அடடா!
என் கவிதைகளைப்
பகிர
நண்பர்களில்லையே!!!

தனிமையில்
நான் எழுதிய
கவிதைகளைப்
பகிர்ந்துக் கொள்ள
நல்ல
நட்பிற்காக
காத்திருக்கிறேன்…

கிழிசல்

என்
கவிதை புத்தகத்தை
நீ
திருடிக் கொண்டுவிட்டாய்…
இல்லை என்று
சத்தியம் செய்தாய் நீ..
என்னிடம் கேட்டால்
நானே கொடுத்திருப்பேனே!

என் இதயத்தின்
கிழிசலில்
நட்பு
மாட்டிக் கொண்டு
உடைந்து போனது….

கவலை மற

மூளையில்
இரத்தக் கசிவு
எனக்குத் தான்…

சிக்கலில்லாமல் இருக்க
சில வழிகள்…
எல்லோரும் சொன்னார்கள்

'நடப்பது நடக்கும்
கவலை மற'…

ஆனால்
நடந்ததை
மறப்பதெப்படி?

'துக்கத்தை
தூர எறிந்தால்
தூக்கம் வரும்'…

என் துக்கங்களை
எங்கே
எறிவது….

நீ கிழித்த
என் இதயத்தை
மூடி மறைத்து விட்டேன்,
மூளைதான்
காட்டிக் கொடுத்துவிட்டது…

ஆஹா
இது என்ன!

என் கவிதை
என்னை ஆற்றுகிறதே!

என் புண்களையெல்லாம்
துடைத்து எறிகிறதே!

கலையே!
கற்பனையே!!
நான் உன்னை
காதலிக்கின்றேன்..

இந்த
கவிதை மலரை
என் இதயத்தில்
மலரவைப்பாயா?

------