Thursday, May 28, 2020

கொரோனா - கல்விக் கொள்கை

கொல்லும் கொடிய வைரஸாம்,
கொரோனா' என்றே பெயரதற்காம்...
வீட்டில் இருக்கச் சொன்னாங்க, 
விரட்டி அடிப்போம் என்றாங்க...

அதனால்...

பள்ளிக் கூடம் போகல,
பாடத் திட்டம் எதுவுமில்லை...
வீட்டுப் பாடம் கொடுக்கல,
விடிய விடிய படிக்கல...

ஆனால் 

வேடிக்கை யாக தினந்தினமும்
வாழ்க்கைப் பாடம் கற்றோமே!!
ஒழுக்கம் உயர்வு என்பதனை
உணர்ந்தோம் பழகி பார்த்ததனால்...

அடிக்கடி கையை கழுவிக்கொள்!
ஆசாரக் கோவை மனதிற்கொள்!
அடுப்படி உணவே மருந்தென்றே
ஆச்சி சொன்ன பாடந்தான்...

அழகாய் நாங்கள் கற்றோமே!
ஆனால் சிறிய சந்தேகம்...
பள்ளிக் கூடம் திறந்ததுமே
பாழாய் போகும் இப்பாடம்...

மீண்டும் பழைய திட்டம்தான் 
மதிப்பெண் ஒன்றே குறிக்கோளாய்
மனனம் செய்யும் வழிமுறைதான்...
மாற்றம் உணடோ சொல்வீரே!!!

அதனால் 

ஐயா! எங்கள் பெரியோரே!!!
அருமை யான தருணமிது!!!
அறிந்தே கல்வி கொள்கையினை
மாற்றி அமைக்க முயல்வீரே!!!

Thursday, May 21, 2020

என் மனமென்னும் மேடையில்

நடக்காத நாடகம்
முடியாமல் தொடர்கிறது...
பேசாத வார்த்தைகள் 
மௌனத்தில் கரைகிறது...

இல்லாத ஓர் உணர்வை 
உள்நெஞ்சம் உணர்கிறது...
சொல்லாத செய்திகளைச்
சுகமென்றே சுமக்கிறது...

பொல்லாத நிஜங்களையோ
பொய்யென்றே சொல்கிறது...
பொழுதெல்லாம் புதிதான
கற்பனையில் திளைக்கிறது...

புரியாத மொழியெல்லாம்
பூவிழிகள் பேசிடவே...
வாய்பேசும் மொழியெல்லாம் 
வசப்படாமல் போகிறது...

நில்லாத நாடகத்தில் 
நிஜமெல்லாம் கனவாக...
கலைந்திடாத கனவெல்லாம்
கற்பனையில்  நிஜமாகும்...

Sunday, May 10, 2020

குறள் தாழிசை

உடலோடு உள்ளம் உறுதிப் பட்டால்
அடைந்திடும் நன்மை பல...

சொல்லும் செயலும் இணைந்தே  இருந்தால் 
இல்லை உனக்கே இழிவு...

உள்ளத்தால் ஒன்றி உழைப்பவர்கே அன்றி
உலகத்தில் இல்லை உயர்வு...

மனத்திற்கு நல்ல மருந்தாம் சிரிப்பு
உடலுக்கும் அஃதே உரம்...

உள்ளத்தால் உண்மை உரைப்பார்தம் உள்ளத்திற்கு
உண்டோ உடைக்கும் உளி... 

Saturday, May 09, 2020

குறும் பா

எடுத்துக் கொண்டதை
திருப்பித் தந்தது 
மழை...

வெளிச்ச உண்டியல் 
உடைந்து 
இருட்டு தரையில் 
சிதறிய
சில்லரை காசுகள் 
நட்சத்திரங்கள்...

சூரிய மாலையில் இருந்து
உதிர்ந்த
மல்லிகை பூக்கள் 
நட்சத்திரங்கள்...

சினுங்கி சினுங்கி
தூக்கம் கலைத்தது 
அலை பேசி...

திறக்கத் திறக்க
தெளிவு பிறந்தது 
புத்தகம்...

குழைத்து, குதப்பி
கொட்டிவிடும்
குழந்தைக்காக
காத்திருக்கிறது 
தட்டில் உணவு...

வானத் தரையில் 
கொட்டிவிட்ட 
கறுப்புச் சாயம்
இருள்...

அழுகை 

கண்ணம் துடைத்து 
நிமிர்ந்த போது
சுவடுகள் இன்றி 
பளிச்சென்றிருந்தது 
மனம்...

எப்பொழுதும் 
தலைகுனிய 
வேண்டியிருக்கிறது 
இவரிடம்
சவரத்தொழிலாளி

மழையைத் தடுக்கும் 
குட்டி வானம்
குடை...


Wednesday, May 06, 2020

மல்லிகை பூச்சரம்

கொட்டும் அருவி
குழவியர் வாயமுதம்
வீமும் மழைத்துளி 
விண்பரவும் நிலவொளி
நரைத்த முடி
நண்பகல் சூரிய ஒளி
முத்துப் பற்கள் 
முகம் காட்டும்
உன் சின்னச் சிரிப்பு
உருகி வழியும்
வெள்ளி இழை...

இத்தனை அழகாய்
உன் ஒற்றை 
பின்னலில் 
நான் வைத்த
மல்லிகைப் பூச்சரம்...

Sunday, May 03, 2020

அனுபவம்

வியர்வைத் துளிகளில் வழிந்திடும் அனுபவம்...
வெள்ளை இழையென ஒளிர்ந்திடும் அனுபவம்...
கற்றலில் பெறுவதும் கலைகளின் அனுபவம்...
உற்றவர் அற்றவர் உணர்த்திடும் அனுபவம்...
 
புத்தக அறிவினால் புதுப்புது அனுபவம்...
சத்தமே இன்றியுன் தனிமையும் அனுபவம்...
நித்தமுன் செயல்களில் நீபெறும் அனுபவம்...
புத்தியில் விதையென வளர்ந்திடும் அனுபவம்...

Monday, April 27, 2020

தடம்

புல்மேல் பனியின் தடங்கள் பதிவதில்லை
கல்லோ எதையும் பதிப்பதில்லை- காண்பீரோ
சில்லென்ற காற்றில் மணத்தின், செந்தமிழ்ச் 
சொல்லில் சுவையின் தடம்...

Thursday, April 09, 2020

கண்ணனாக வா!!

எப்பொழுதெல்லாம் 
தர்மம் அழிந்து அதர்மம் 
தலைதூக்குகிறதோ...
அப்பொழுதெல்லாம் 
'நான் 'அவதரிப்பேன்...

ஏற்றுக் கொண்டோம் 
இறைவா... நீ
கண்ணனாக வா 
'கொரோனா' வாக வேண்டாம்...

அழிக்கப்படுவது 
அதர்மமாக இருக்கட்டும்...
அகங்காரம், ஆணவம், பேராசை
அழியட்டும்...

காக்கப்படுவது 
கருணையாக ,
காதலாக 
இருக்கட்டும்...

மயக்கத்தைப் போக்கி 
மையலை மாற்று...
மரணத்தைக் காட்டி
வையத்தை அழிக்காதே...

மனிதம் காக்க
மனிதரை விட்டுவை...
மதத்தினைத் தாண்டி
மனிதரை வாழ செய்...

இறைவா 
கெடுப்பதல்ல
கொடுப்பதே உன்செயல்
அழிப்பதல்ல
காப்பதே உன்கடன்...

கண்ணனாக வா!!
‘கொரோனா’வாக வேண்டாம் !!

Tuesday, April 07, 2020

யோசனை பூக்கள்

மனிதனின் 
சிந்தனை தோட்டத்தில் 
மலர்வது
யோசனை பூக்கள்...

வாசனைப் பூக்களில்...
வண்ணங்கள் 
மயக்கும்...
யோசனை பூக்களின்
எண்ணங்கள் 
மயக்கும்... 

எண்ணங்கள் 
விதையாக 
எழுத்துக்கள் 
மலரும் போது...
படைப்புச் சோலையில்
கவிதைகள் 
பூத்துக் குலுங்கும்...

சங்கீதச் சோலையில்
ஸவரங்கள்
சேரும் போது
கற்பனை நீராலே
கீதங்கள்
மலரும்
மெட்டாக...

சிந்தனை சோலையில்
செயல்கள் உரமாக
பூத்துக் குலுங்கட்டும்
பயன்கள்
பொதுவாக...
அனைவருக்கும்  பொதுவாக...


 

Saturday, April 04, 2020

மின்னற் பொழுதுகள்

வாழ்க்கை பயணத்தில் சில
மின்னல் பொழுதுகள்...

நம்மை நமக்கே 
அடையாளம் காட்டும் 
அர்த்தம் நிறைந்த நிமிடங்கள்...

அவனுக்கு!

அரும்பு மீசை
தோன்றிய பொழுது
முதன் முதலாய் ஒரு
ஆண் மகனாய் 
தன்னை உணர்ந்த 
அழகிய தருணம்...
மறக்க முடியா
மின்னல் பொழுது!!

அவளுக்கு

தினமும் சென்ற பாதைதான்
திரும்பி அவன் பார்த்த பொழுது
பெண்மையை உணர்ந்து
வெட்கம் கொண்ட
வெளிச்ச நிமிடம் 
அழகிய மின்னல் பொழுது!!

வெளியுலகில்
முதல்முதலாய்
அவமானப் பட்ட
அந்த நொடி...
தன்மானத்தை 
தட்டி எழுப்பியத் தருணம்...
நம்மைச் செதுக்கிய
நல்லதொரு நிமிடம்...

யாருக்கில்லை அந்த 
அற்புத மின்னல் பொழுது!!

முதல் வெற்றி
வாசல் தட்டிய 
வசந்த நிமிடம்...

காதல் சொன்ன
கணப் பொழுது...

வலியின் உச்சத்திலும்
பிள்ளை ஈன்ற
பாசப் பொழுது

கையேந்திய பிள்ளை
கண்ணோடு கண் நோக்கி
புன்னகைத்த
பொன்னான பொழுது...

தாயின் சிதையில் 
தீயை மூட்டிய
நெஞ்சைப் பிசையும் 
நிமிடங்கள்...

யாருக்கும் உண்டு
இப்படி சில நிமிடங்கள்...
வாழ்வில்
மறக்க முடியா
மின்னல் பொழுதுகள்...

Friday, April 03, 2020

ஒற்றை எதிரி

தெருவோரம்
குப்பை இல்லை
சந்தையிலே 
சண்டை இல்லை ...

சுத்தம் என்பதை
சமூகம் உணர்ந்தது
சத்தம் இன்றி
சாலைகள் இருந்தன...

வண்டியில் சென்ற
மக்களைப் போலீஸ்
வணங்கிச் சொன்னது
வீட்டில் இருக்க...

வீட்டில் இருந்தவர்
உணவை வீணாக்காமல்
சமைத்து உண்டனர்
தருமம் செய்தனர்...

அரசு
'அதிகார' திமிரின்றி
அமைதி காத்தது...
தேக்கம் இன்றி 
செயல்கள் நடந்தது...

சிந்தனை ஒன்றாய்
தேசம் மலர்ந்தது

நச்சுக் கிருமியே!!
ஒற்றை எதிரி நீ

உன்னை வீழ்த்த
ஒற்றுமை கண்டது
இந்தியா
ஒன்றாய் நின்றது...

சற்றே

திரும்பிப் பார்க்கிறேன்
'சுதந்திர இந்தியா'...

ஒற்றை எதிரி
வீழ்த்தப் பட்டதும்
வீழ்ந்து விட்டதே
ஒற்றுமை, அமைதி...

எத்தனை பிரிவுகள்..
எத்தனை சண்டைகள்...

இன்றைய
'ஒற்றை எதிரி' நீ
உன்னை 
விட்டு விடுவதா?
விரட்டி அடிப்பதா?!!!





Tuesday, March 31, 2020

கடல்

அலை கடலின் ஓசை
ஆழ் கடலில் இல்லை...

ஆழ் கடலின் அமைதி
அலை கடலில் இல்லை...

அலைகடல் ஓயாது
ஆழ்கடல் பேசாது...

சிந்தனையில் 
ஆழ்கடல் அமைதி 
அறிவின் துவக்கம்... 

செயலில்
அலைகடல் ஆரவாரம்
இயக்கத்தின் அடையாளம்... 

கடலின் ஆழம் 
அலையில் தெரியாது...
அலைகள் இன்றி
ஆழ்கடல் கிடையாது....

சிந்தனை 
செயலுக்கு அடிப்படை
செயல்கள் இன்றி
சிந்தனை சிறக்காது.... 

நிழல்கள் நகர்ந்த பொழுது...

நிழல்கள் 
நகர்ந்த பொழுதுதான்
'நான் '
நிலைத்து நின்றேன்...

தாயின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
தானாக எழுந்து 
நடக்கலானேன்...

தந்தையின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
எனக்கென
தடம் ஒன்று 
இருக்கக் கண்டேன்...

நல்லாசிரியர் நிழல் 
எனைவிட்டு 
நகர்ந்த பொழுது, 
என் அறிவின் ஒளியில் 
இயக்கம் கொண்டேன்...

இணையில்லா
ஈசனருள்
இருக்கும் வரையில் 
வாழ்வில் 
இருள் என்பதே
இல்லை கண்டேன்!!. 

Sunday, March 29, 2020

சிந்தனைகள் சந்தித்தால்

சிதறிய எண்ணங்களை
சீராக்கி சேர்க்கிறது...
செயற்கரிய செய்கைக்கு 
'சிந்தனை' உரமாகிறது...

நல்லவர்கள் சிந்தித்தால் 
சிந்தனைகள் சந்தித்தால்...
நானிலத்தே நன்மைகள் 
நமக்கெல்லாம் விளைகிறது...

மாறாக சிந்திப்போர் 
மனத்தாலும் சந்தித்தால்....
தீராத துன்பங்கள் 
தீயாக சுடுகிறது....

சொல்லோடு சிந்தனை 
மொழிவழி சந்தித்தால்...
பொருளோடு பொருந்தியது 
நற்கவிதை ஆகிறது...

சிறப்பான சிந்தனை 
செயலோடு சந்தித்தால்...
மறுக்காமல் வெற்றிகள்
முன்வந்து நிற்கிறது...

மறக்காதே! சிந்தனையே
மனிதருக்கு வரமாகும்...
தவறாதே உள்ளத்தில் 
சிந்தனையைச் தெளிவாக்கு....

கொரானா

எண்ணங்கள் ஒன்றானால்
எளிதாகும் நம்முயற்சி
கொன்றழிக்கும் கொரானாவை
கெடுத்தழிப்போம், நம்மிடையே
இன்றைக்குத் தேவையெல்லாம்
இடைவெளிதான், சிந்திப்பீர்!
நன்றாகக் 'கை'கழுவி 
நலம்காப்பீர் நல்லோரே!!