Monday, March 15, 2010

நல்வழி அறிவீர்

குறிலீற்று மா+ விளம்+ மா
விளம்+ விளம்+ மா

காலை எழுந்திட வேண்டும்
கனவுகள் கலைந்திட நானும்
பாலைப் பருகிட வேண்டும்
பயத்தொடு பசித்திடு முன்னே
நூலைக் கற்றிட வேண்டும்
நுண்கலை அறிந்திட வேண்டும்
ஆலைப் பொருளென யென்னை
ஆக்கிடும் வழியிது வேண்டாம்

தாக மெடுத்திட வேண்டும்
தண்ணெனும் நீரினைப் பருக
வேக வைத்திடுஞ் சோறும்
வெந்திட நேரமே யாகும்
நோகப் பூவிதழ் பிரித்து
நுகர்ந்திட நினைத்திடல் நன்றோ
போகச் செய்திடு வீரே
பொருந்திடு பாதையி லென்னை.

சிறுவர் பட்டாளம்

மா மா மா
மா மா மா

சிட்டுக் குருவிக் கூட்டம்
சிரிக்கும் சின்னத் தோட்டம்
பட்டப் பகலில் நிலவு
படிக்க வந்த தோற்றம்
கொட்டி விட்ட மணிபோல்
குலுங்கச் சிரிக்கும் அழகை
எட்டிப் பார்க்கும் இறைவா
எனக்கும் மீட்டுத் தாதா!

குழந்தைகளுக்கு

மா+மா+மா
மா+மா+மா

கண்ணே மணியே வாவா
கனவின் வடிவே வாவா
அன்பே வாழ்வின் வேராம்
அறிவே மூச்சுக் காற்றாம்
பண்பாய் வாழப் பழகு
படித்தே உயர்வது அழகு
உண்மை நேர்மை உழைப்பு
உன்னில் இருந்தால் சிறப்பு.

பண்ணும் இனிமைத் தமிழில்
படிக்க பேச விரும்பு
மண்ணைப் பெண்ணை மாற்றார்
மனத்தை மதிக்கப் பழகு
எண்ணந் தன்னில் ஈரம்
ஈகை பொறுமை இருந்தால்
வண்ணங் கலந்து வாழ்வும்
வளமாய் நிறைவாய் விளங்கும்.

பெண் குழந்தை வாழ்த்து

இயற்சீரால் ஆனது
மா/விளம் +மா/விளம் +மா
மா/விளம் + மா/வ்ளம் +மா
[வெண்தளை ஏற்றது.]


1.தங்கச் சிலையே, தமிழே,
தாவும் மரையே,அழகே
நங்கையர் நாடு நலனே
நயனில் நிலையினர் உள்ளார்
இங்கவர் எண்ணம் இழிய
இடியென் றெழுந்த எழிலே
பொங்கு புகழொடு பெண்மை
பொலிந்திட வந்தனை வாழி

அழகுத் தமிழ் பழகு

குறிலீற்று மா+ விளம்+ மா
.....விளம்+ விளம்+ மா

மழலை மொழியினைப் போன்றும்
மயக்கிடு மதுவினைப் போன்றும்
குழலில் காற்றது நுழைந்து
குழைந்திட வருமிசை போன்றும்
அழகு மிளிர்ந்திடு மன்றோ
அருந்தமிழ் தந்திடும் பண்கள்
பழக வந்திடும் பாவாய்
பைங்கிளி பேசிடு மன்றோ!
*****************

அருளுடை வாழ்வு

குறிலீற்று மா+ விளம்+ மா
விளம்+ விளம்+ மா



1.வண்டிச் சக்கரம் போலே
வாழ்க்கையும் விரைந்திடும், சற்றே
நின்றுச் சுவைத்திட வேண்டும்
நேரமுங் கிடைத்திட லரிது
வண்டு முகர்வதைப் போன்று
வாழ்ந்திட ஏங்கிடும் நெஞ்சம்
நன்று முன்னவர் நவின்ற
நலந்தரும் பொருளுடை வாழ்வு.