Showing posts with label Geethanjali. Show all posts
Showing posts with label Geethanjali. Show all posts

Tuesday, November 05, 2024

கீதாஞ்சலி 9

மதியில்லாதவனே

உன்னையே நீ ஏன் சுமக்கிறாய்

பிச்சைக் காரனே

உன் கதவண்டையே

ஏன் பிச்சை

கேட்கிறாய்..

 

உனது துன்பங்களை

எதையும் தாங்கும்

இறைவனிடமே

விட்டுவிடு…

வருந்தி

திரும்பிப் பார்க்காதே…

 

உனது ஆசை

உனது உள்ளொளியை

அணைத்துவிடுகிறது..

 

அந்த

புனிதமற்ற நிலை

வேண்டாம்

 

உண்மை அன்புடன்

தரும் கொடைகளையே

நீ பெற்றுக்கொள்

கீதாஞ்சலி 8

ஆடை அணிகலால்
அலங்கரிக்கப்பட்ட 
ஒரு குழந்தை
தனக்கே உரித்தான
மண்ணில் புரளும்
இன்பத்தை 
இழந்து விடுகிறது…

ஆடைகள்
கிழிந்துவிடுமோ
கசங்கிவிடுமோ 
என்று
நகரவும் மறுக்கிறது…

அதுபோலவே
நானும்
உலக இன்பங்களை
சுமந்து
உண்மை இன்பத்தை
அடைய முடியாமல்
தவிக்கிறேன்…

Tuesday, June 04, 2024

கீதாஞ்சலி 7

எனது கவிதை
தனது அணிகளை
அகற்றிவிட்டது 

எனது கவிதையில்
ஆடை, அலங்காரத்தின் 
பெருமை 
இப்பொழுது இல்லை..

எனக்கும் உனக்குமான
உறவை
இந்த அணிகலங்கள்
குலைக்கலாம்

உனக்கும் எனக்கும் 
இடையில்
அவை வரலாம்.

அவற்றின்
ஓசையில்
எனது  மெல்லிய 
இரகசியம்
காணாமல் போகலாம்

கவியரசே!
உனது பார்வையின் முன்
எனது கவிதைகள்
வெட்கப்படுகின்றன…

நான்
உன்னை சரணடைந்து
விட்டேன்..

எனது வாழ்வை
எளிமையாக, நேர்மையாக
வைத்துக் கொள்ள…

ஒரு குழலைப் போல்
உனது சங்கீதத்தால்
அதை
நிரப்புவீர்களாக!

கீதாஞ்சலி 6

இறைவா
இம்மலரை
இப்பொழுதே பறித்து
எடுத்துக் கொள்

ஒருவேளை
இம்மலர் 
தாழ்ந்து
தூசியில் விழுந்துவிடுமோ
என்று அஞ்சுகிறேன்.

உனது மாலையில்
இம்மலருக்கு
இடமில்லாமல் 
போகலாம்

ஆனாலும்
அருளோடு
உனது திருக்கைகளால்
பறித்துக் கொள்வதே
பேரானந்தம்

உணர்வதற்கு
முன்பே,
முழுவதுமாக
அர்ப்பணிக்கும் முன்பே
காலம்
கடந்து விடுமோ! 
 
இறைவா
இந்த மலரில்
வண்ணம் நீங்கி இருக்கலாம்,
மணம் மங்கி இருக்கலாம்

அனாலும்
உனது திருப்பணிக்காக
இப்பொழுதே
இம்மலரை
ஏற்றுக் கொள்ளுங்களேன்

கீதாஞ்சலி 5

இறவனின் சிந்தனையில்

சிறிது நேரம்

தியானிக்க வேண்டும்..

லௌகீக விஷயங்களை

பிறகு சிந்திக்கலாம்.

 

இறைவா

உன்னை

நான் தியானிக்க வேண்டும்…

 

உன்னைச் சிந்திக்காத

நிமிடங்கள்

என் நெஞ்சில்

அமைதியின்றிப் போகிறது.

நான் துன்பக்கடலில்

சிக்கித் தவிக்கிறேன்…

 

இறைவா

இதுவே தருணம்

இந்த அமைதியான

நேரத்தில்

உன்னை தியானிக்க

வேண்டும் 

Wednesday, April 10, 2024

கீதாஞ்சலி 4

இறைவா

 

நீ எங்கும் நிறைந்திருப்பவன்

எனவே

நீ வாழும்

இவ்வுடலை

மிகவும் பரிசுத்தமாக

வைத்திருக்க முயல்கிறேன்…

 

பகுத்தறிவை எனக்குள்

விதைத்தவன் நீ

எனவே

எனது சிந்தனையிலிருந்து

பொய்களை

விலக்கிடுவேன்…

 

எனது உள்ளத்தில்

நீ உறைந்திருக்கிறாய்

எனவே

எனது உள்ளத்திலிருந்து

தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி

அன்பை  வெளிப்படுத்த முற்படுவேன்

 

எனது

செயல்களுக்கெல்லாம்

வலிமையை நீயே தருகிறாய்

எனவே

எனது செயல்களின் மூலமே

உன்னை வெளிப்படுத்த முயல்கிறேன்

Sunday, April 07, 2024

கீதாஞ்சலி 3

இறைவா!

அற்புதமான

உனது இசையை நீ

எப்படி இசைக்கிறாய்..

 

நான் அமைதியோடு

ஆச்சரியத்தில்

மூழ்கிபோகிறேன்..

 

உனது இசையின்

ஒளி

இவ் உலகையே

வெளிச்சமாக்குகிறதே!

 

உனது இசை

வானவெளியெங்கும்

பரவியிருக்கிறதே!

 

உனது

இசையின் பெருவெள்ளம்                           

கடினமான

பாறைகளையும்

உடைத்து

பெருகுகிறதே!

 

உனது இசையோடு

இசைக்க

நானும் எண்ணுகிறேன்

ஆனால்

வார்த்தையின்றி

தவிக்கிறேன்.

 

எனது

வார்த்தைகள்

கவிதையாய்

பரிணமிக்க முடிவதில்லை.

அதனால்

பரிதவிக்கின்றேன்

 

இறைவா

 

உனது

இசையின்

முடிவற்ற வலைக்குள்ளே

என் இதயம்

சிக்குண்டுவிட்டதே!

 

தாகூர்

இயற்கை வழியாக இறைவனைப் பார்க்கிறார்.

இயற்கையின் ஒவ்வொரு அழகும்

இறைவனை காட்டுவதல்லவா!

 

அதனால் தான் பாரதியும்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

என்கிறார் போலும்.

 

தொடர்வோம்..

Friday, April 05, 2024

கீதாஞ்சலி 2

உன்னைப் பாட

என்னைப் பணிக்கும் பொழுது

எனது நெஞ்சம்

பெருமையால்

அடைத்துக் கொள்கிறதே!

உனது திருமுகத்தை

கண்டதும் எனது

கண்ணில் நீர் 

பெருக்கெடுக்கிறதே!

 

எனது வாழ்வின்

கஷ்ட நட்டங்கள்

ஒன்றாகி

இனிமையான பாடலாக

வெளிவருகிறதே!

 

மகிழ்ச்சில் திளைக்கும் பறவை

கடலைத் தாண்டி 

உல்லாசமாகப் பறப்பதைப் போல்

உனதன்பால் என் சிந்தனை

சிறகடிகிறதே!

 

உன் முன்

ஒரு கவிஞனாகவே

நான் நிற்கிறேன்

எனது கவிதையில்

நீ மகிழ்வாய்

என்று எனக்குத் தெரியும்

 

எனது இசையின்

மெல்லிய அலைகளின்

ஸ்பரிசத்தால்

உன்னைத் தொட்டு

இன்பமடைகிறேன்…

 

இறைவா

அந்த இன்ப மயக்கத்தில்

என்னை மறந்து

உன்னை

‘நண்பனே’

என்றழைகிறேனே!

நீ

இறைவனல்லவா!



அதனால் தான் பாரதியும்

பரசிவ வெள்ளம் என்ற பாட்டில்

"எண்ணமிட்டாலே போதும் 

எண்ணுவதே இவ் இன்பத்

தண் அமுதை உள்ளே 

ததும்பப்புரியுமடா

எங்கும் நிறைந்திருந்த ஈச 

வெள்ளம் என் அகத்தே

பொங்குகின்றது என்று 

எண்ணிப் போற்றி நின்றால் 

போதுமடா"

என்று பாடுகிறாரோ!

கீதாஞ்சலி 1

கீதாஞ்சலி

 

தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.

 

1.

இந்த முடிவற்ற பிறவியில்

என்னை

பிணித்திருக்கிறாயே

அதுவே உன் இச்சை போலும்.

 

மிகவும் பலவீனமான

இப்பாண்டத்தை

அடிக்கடி

வெறுமையாக்கி

மீண்டும் மீண்டும்

புத்துயிரை

நிரப்புகிறாய்

 

உனது சின்னஞ்சிறு

குழலில்

அமுத கானத்தை

காடு, மலை,

பள்ளத்தாக்கெங்கிலும்

இசைக்கிறாய்

 

உனது திருக்கரம்

தீண்டியதில்

எனது நெஞ்சம்

இன்பத்தின் எல்லையையே

தாண்டி விடுகிறதே!!!

உனது பெருமையை

பாடத் துவங்குகிறதே!!!

 

எனது சின்னஞ் சிறிய

கைகள் நிரம்பி வழியும் படி

பல அரிய கொடைகளை

நீ தருகிறாய்..

உனது கருணை

அளப்பரியது..

பல காலங்களாய்

தொடர்வது..

இன்னும்

முடியாமல்

தொடர்ந்து கொண்டே இருப்பது…


பாரதியும் அதனால் தான்..

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எங்கள் இறைவா இறைவா இறைவா!

என்று பாடுகிறார்...  


தொடர்வோம்..