Showing posts with label இசைப்பா. Show all posts
Showing posts with label இசைப்பா. Show all posts

Thursday, September 08, 2011

இசைப் பா

இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!

ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------

பெண்மை அழித்துபின் பதவியைக் காட்டி
பிழைத்திடும் பேடிகளைப் - பணம்
ஒன்றேக் குறியென ஊழல் செய்து
உழைப்பவர் வாடிடவேப் - பொது

பணத்தைச் சுருட்டி பொய்யால் மறைத்து
பிச்சைக் காரரென - மக்களை
மனத்தால் சுருக்கும் பயத்தால் ஒடுக்கும்
வன்முறைக் காரர்களை - தன்

பொறுப்பை மறந்து , படிக்கும் பெண்களை
புழுவாய் துடித்திடச்செய் - மனங்
கறுப்பாய்ப் போன கயவரைக் காலன்
காலால் மிதித்திடச்செய்-அவர்

நெஞ்சைப் பிளந்து நெருப்பால் சுட்டு
நேர்மைப் புகுத்திடச்செய் - கொல்
வஞ்சம் அறுத்து வேடம் கலைத்து
வாய்மை விதைதிடச்செய் - ஓம்

சக்தி சக்தி சக்தி என்றும்
சத்தியம் வாழ்ந்திடச்செய் - ஒன்றாய்
மக்கள் விழித்து வல்லமை யோடு
மாற்றம் கண்டிடச்செய்.

Saturday, December 11, 2010

இசைப்பா 2

இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!


நகர வாழ்வு


நீண்ட தெருக்கள்
..........நெளிந்த பாலம்
..........நிறைய கட்டிடங்கள் -விண்தொட
..........நிற்கும் பட்டிணத்தில்
வேண்டும் எதுவும்
..........விரைந்தே கிடைக்கும்
..........வேகம் வாழ்வோடு - மறந்த
..........விவேகம் மண்ணோடு

ஆண்பெண் பிரிவிலை
..........அனைவரும் சமமிங்
..........ஆயிரம் வாகனங்கள்-சாலை
..........அதன்மேல் குடித்தனங்கள்
தூண்டும் திரைப்பட
..........துறையில் ஓர்நாள்
..........துலங்கிடும் கனவோடு-நுழைந்தவர்
..........துயரம் மனத்தோடு

ஆண்டியும் உண்டிங்
..........ஆயிரம் கோடி
..........அடைந்தவர் வாழ்கின்றார்-வாசலை
..........அடைத்தவர் வாழ்கின்றார்.
வீண்பழி வருமென
..........விலகியே வாழ்வதை
..........விரும்பியே ஏற்கின்றார் -வாழ்வின்
..........வெற்றியை இழக்கின்றார்.

சிற்றூர்  வாழ்வு.
சட்டை இல்லை
..........சாலை இல்லை
..........சட்டம் தெரியவில்லை -மனங்கள்
..........சாக்கடை ஆகவில்லை
கட்டிடம் இங்கிலை
..........காசுடன் பணமும்
..........கையில் இருந்ததில்லை-சனங்கள்
..........கடமை மறந்ததில்லை

பட்டும் இல்லை
..........பகட்டும் இல்லை
..........பட்டினிக் கிடந்திடுவார்-பிறர்துயர்
..........பட்டால் கலங்கிடுவார்.
கொட்டும் வானம்
..........கொடுக்கும் கெடுக்கும்
..........குறையுடன் வாழ்கின்றார்- விட்டுக்
..........கொடுத்தவர் வாழ்கின்றார்.

Wednesday, December 08, 2010

தருவீர் தாய்ப்பால் - இசைப்பா

தாயின் பாலே
சேயின் அமுதம்
தெய்வம் தந்த அருமருந்தாம் பால்
ஈயின் சிறக்கும்
தாயின் நலமும்
நோயின் றிருக்கும் வழியதுவாம்.

[இயற்சீர் +இயற்சீர்

இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்! ]

கள்ளுண்ணாமை

கண்டவர் பழிக்க
உற்றவர் தவிக்க
கள்ளை உண்டு மயங்காதே - கள்
உண்ணச் சுவைக்கும்
உயிரைப் பறிக்கும்
கண்ணை மூடி வீழாதே

இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்

இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!

நலம் வாழ - இசைப்பா

சுத்தம் செய்வோம்

நித்தம் எங்கும்

சத்தம் குறைப்போம் நலம்வாழ -நல்

வித்தே முளைக்கும்

சத்தாய் உண்போம்

வஞ்சம் கோபம் விலக்கிடுவோம்.


இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்

இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!