Wednesday, April 10, 2024

கீதாஞ்சலி 4

இறைவா

 

நீ எங்கும் நிறைந்திருப்பவன்

எனவே

நீ வாழும்

இவ்வுடலை

மிகவும் பரிசுத்தமாக

வைத்திருக்க முயல்கிறேன்…

 

பகுத்தறிவை எனக்குள்

விதைத்தவன் நீ

எனவே

எனது சிந்தனையிலிருந்து

பொய்களை

விலக்கிடுவேன்…

 

எனது உள்ளத்தில்

நீ உறைந்திருக்கிறாய்

எனவே

எனது உள்ளத்திலிருந்து

தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி

அன்பை  வெளிப்படுத்த முற்படுவேன்

 

எனது

செயல்களுக்கெல்லாம்

வலிமையை நீயே தருகிறாய்

எனவே

எனது செயல்களின் மூலமே

உன்னை வெளிப்படுத்த முயல்கிறேன்

Sunday, April 07, 2024

கீதாஞ்சலி 3

இறைவா!

அற்புதமான

உனது இசையை நீ

எப்படி இசைக்கிறாய்..

 

நான் அமைதியோடு

ஆச்சரியத்தில்

மூழ்கிபோகிறேன்..

 

உனது இசையின்

ஒளி

இவ் உலகையே

வெளிச்சமாக்குகிறதே!

 

உனது இசை

வானவெளியெங்கும்

பரவியிருக்கிறதே!

 

உனது

இசையின் பெருவெள்ளம்                           

கடினமான

பாறைகளையும்

உடைத்து

பெருகுகிறதே!

 

உனது இசையோடு

இசைக்க

நானும் எண்ணுகிறேன்

ஆனால்

வார்த்தையின்றி

தவிக்கிறேன்.

 

எனது

வார்த்தைகள்

கவிதையாய்

பரிணமிக்க முடிவதில்லை.

அதனால்

பரிதவிக்கின்றேன்

 

இறைவா

 

உனது

இசையின்

முடிவற்ற வலைக்குள்ளே

என் இதயம்

சிக்குண்டுவிட்டதே!

 

தாகூர்

இயற்கை வழியாக இறைவனைப் பார்க்கிறார்.

இயற்கையின் ஒவ்வொரு அழகும்

இறைவனை காட்டுவதல்லவா!

 

அதனால் தான் பாரதியும்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

என்கிறார் போலும்.

 

தொடர்வோம்..

Friday, April 05, 2024

கீதாஞ்சலி 2

உன்னைப் பாட

என்னைப் பணிக்கும் பொழுது

எனது நெஞ்சம்

பெருமையால்

அடைத்துக் கொள்கிறதே!

உனது திருமுகத்தை

கண்டதும் எனது

கண்ணில் நீர் 

பெருக்கெடுக்கிறதே!

 

எனது வாழ்வின்

கஷ்ட நட்டங்கள்

ஒன்றாகி

இனிமையான பாடலாக

வெளிவருகிறதே!

 

மகிழ்ச்சில் திளைக்கும் பறவை

கடலைத் தாண்டி 

உல்லாசமாகப் பறப்பதைப் போல்

உனதன்பால் என் சிந்தனை

சிறகடிகிறதே!

 

உன் முன்

ஒரு கவிஞனாகவே

நான் நிற்கிறேன்

எனது கவிதையில்

நீ மகிழ்வாய்

என்று எனக்குத் தெரியும்

 

எனது இசையின்

மெல்லிய அலைகளின்

ஸ்பரிசத்தால்

உன்னைத் தொட்டு

இன்பமடைகிறேன்…

 

இறைவா

அந்த இன்ப மயக்கத்தில்

என்னை மறந்து

உன்னை

‘நண்பனே’

என்றழைகிறேனே!

நீ

இறைவனல்லவா!



அதனால் தான் பாரதியும்

பரசிவ வெள்ளம் என்ற பாட்டில்

"எண்ணமிட்டாலே போதும் 

எண்ணுவதே இவ் இன்பத்

தண் அமுதை உள்ளே 

ததும்பப்புரியுமடா

எங்கும் நிறைந்திருந்த ஈச 

வெள்ளம் என் அகத்தே

பொங்குகின்றது என்று 

எண்ணிப் போற்றி நின்றால் 

போதுமடா"

என்று பாடுகிறாரோ!

கீதாஞ்சலி 1

கீதாஞ்சலி

 

தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.

 

1.

இந்த முடிவற்ற பிறவியில்

என்னை

பிணித்திருக்கிறாயே

அதுவே உன் இச்சை போலும்.

 

மிகவும் பலவீனமான

இப்பாண்டத்தை

அடிக்கடி

வெறுமையாக்கி

மீண்டும் மீண்டும்

புத்துயிரை

நிரப்புகிறாய்

 

உனது சின்னஞ்சிறு

குழலில்

அமுத கானத்தை

காடு, மலை,

பள்ளத்தாக்கெங்கிலும்

இசைக்கிறாய்

 

உனது திருக்கரம்

தீண்டியதில்

எனது நெஞ்சம்

இன்பத்தின் எல்லையையே

தாண்டி விடுகிறதே!!!

உனது பெருமையை

பாடத் துவங்குகிறதே!!!

 

எனது சின்னஞ் சிறிய

கைகள் நிரம்பி வழியும் படி

பல அரிய கொடைகளை

நீ தருகிறாய்..

உனது கருணை

அளப்பரியது..

பல காலங்களாய்

தொடர்வது..

இன்னும்

முடியாமல்

தொடர்ந்து கொண்டே இருப்பது…


பாரதியும் அதனால் தான்..

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எங்கள் இறைவா இறைவா இறைவா!

என்று பாடுகிறார்...  


தொடர்வோம்..

Thursday, April 04, 2024

வேண்டுதல்

இறைவா

இம்மலரை

இப்பொழுதே பறித்து

எடுத்துக் கொள்

 

ஒருவேளை

இம்மலர் 

தாழ்ந்து

தூசியில் விழுந்துவிடுமோ

என்று அஞ்சுகிறேன்.

 

உனது மாலையில்

இம்மலருக்கு

இடமில்லாமல் 

போகலாம்

ஆனாலும்

அருளோடு

உனது திருக்கைகளால்

பறித்துக் கொள்வதே

பேரானந்தம்

 

உணர்வதற்கு

முன்பே,

முழுவதுமாக

அர்ப்பணிக்கும் முன்பே

காலம்

கடந்து விடுமோ! 

 

இறைவா

இந்த மலரில்

வண்ணம் நீங்கி இருக்கலாம்,

மணம் மங்கி இருக்கலாம்

அனாலும்

உனது திருப்பணிக்காக

இப்பொழுதே

இம்மலரை

ஏற்றுக் கொள்ளுங்களேன்.


தனது ஆன்மாவையே மலராக 

இறைவனுக்கு அளிக்கும் 

தாகூரின் பாடல்

GitanjaliRabindranath Tagore

Pluck this little flower and take it,

delay not! I fear lest it droop and 

drop into the dust.

It may not find a place in thy garland,

but honour it with a touch of pain 

from thy hand and pluck it. 

I fear lest the day end 

before I am aware, 

and the time of offering go by.

Though its colour be not deep and 

its smell be faint, 

use this flower in thy service and 

pluck it while there is time.

Wednesday, April 03, 2024

தேடல்

வாழ்வென்னும் உலக பெருவிழாவிற்கு
அனுமதியோடு
வந்திருக்கின்றேன்
எனவே
எனது வாழ்க்கை பேறு பெற்றது. 
எனது கண்கள் காணவும் 
காதுகள் கேட்கவும்
பலவற்றையும் உணர்ந்து
வந்திருக்கின்றேன்

உலக வாழ்வில் 
இது என்னுடைய நேரம்
எனது வாழ்வின் 
இசையை 
இசைக்கும் தருணமிது.
என்னால்
முடிந்தவரையில்
வாசித்துவிட்டேன்.

இனி
என்னுள்
இறைவனைக் கண்டு
எனது அமைதியான 
அர்ப்பணிப்புக்கான 
நேரமும் வந்திடாதோ!!! 
என்று ஏங்குகின்றேன்…

Part of Geethanjai by 
Rabindranath Tagore
(எனது தமிழாக்கம்/ தழுவல் )

I have had my invitation to this world’s festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard.

It was my part at this feast to play upon my instrument, and I have done all I could.

Now, I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?