Saturday, May 09, 2020

குறும் பா

எடுத்துக் கொண்டதை
திருப்பித் தந்தது 
மழை...

வெளிச்ச உண்டியல் 
உடைந்து 
இருட்டு தரையில் 
சிதறிய
சில்லரை காசுகள் 
நட்சத்திரங்கள்...

சூரிய மாலையில் இருந்து
உதிர்ந்த
மல்லிகை பூக்கள் 
நட்சத்திரங்கள்...

சினுங்கி சினுங்கி
தூக்கம் கலைத்தது 
அலை பேசி...

திறக்கத் திறக்க
தெளிவு பிறந்தது 
புத்தகம்...

குழைத்து, குதப்பி
கொட்டிவிடும்
குழந்தைக்காக
காத்திருக்கிறது 
தட்டில் உணவு...

வானத் தரையில் 
கொட்டிவிட்ட 
கறுப்புச் சாயம்
இருள்...

அழுகை 

கண்ணம் துடைத்து 
நிமிர்ந்த போது
சுவடுகள் இன்றி 
பளிச்சென்றிருந்தது 
மனம்...

எப்பொழுதும் 
தலைகுனிய 
வேண்டியிருக்கிறது 
இவரிடம்
சவரத்தொழிலாளி

மழையைத் தடுக்கும் 
குட்டி வானம்
குடை...


Wednesday, May 06, 2020

மல்லிகை பூச்சரம்

கொட்டும் அருவி
குழவியர் வாயமுதம்
வீமும் மழைத்துளி 
விண்பரவும் நிலவொளி
நரைத்த முடி
நண்பகல் சூரிய ஒளி
முத்துப் பற்கள் 
முகம் காட்டும்
உன் சின்னச் சிரிப்பு
உருகி வழியும்
வெள்ளி இழை...

இத்தனை அழகாய்
உன் ஒற்றை 
பின்னலில் 
நான் வைத்த
மல்லிகைப் பூச்சரம்...

Sunday, May 03, 2020

அனுபவம்

வியர்வைத் துளிகளில் வழிந்திடும் அனுபவம்...
வெள்ளை இழையென ஒளிர்ந்திடும் அனுபவம்...
கற்றலில் பெறுவதும் கலைகளின் அனுபவம்...
உற்றவர் அற்றவர் உணர்த்திடும் அனுபவம்...
 
புத்தக அறிவினால் புதுப்புது அனுபவம்...
சத்தமே இன்றியுன் தனிமையும் அனுபவம்...
நித்தமுன் செயல்களில் நீபெறும் அனுபவம்...
புத்தியில் விதையென வளர்ந்திடும் அனுபவம்...