Thursday, September 14, 2023

நிலவே!!!

நிலவே!

உன்னை நாங்கள்

அடைந்து விட்டோம்!

 

எவ்வளவு ஆனந்தம்

எங்களுக்கு!!

 

இந்திய மக்களின்

இதயத் துடிப்பல்லவா நீ!

 

ங்கள் பாட்டிமார்கள்

உன்னைக் காட்டித்தான்

தம் பிள்ளைகளுக்கு

உணவளித்தார்கள்

 

எங்கள் தாய்மார்களோ!

நிலா நிலா ஓடிவா!

என்று உன்னைத்

துணைக்கழைத்தார்கள்...

 

நாங்களோ !

உன்னை அடைந்தே விட்டோம்..

 

எவ்வளவு ஆனந்தம்

எங்களுக்கு!!

 

ஒருவேளை

நாளை எம் பிள்ளைகள்

உன்னை

சொந்தம் கொண்டாடுவார்களோ!

 

நிலவே

உனக்கும்

எங்களுக்குமான

இந்த இடைவெளியை

 

அன்று

கற்பனையால் கடந்தோம்..

 

இன்று

அறிவியலால் அளந்தோம்..

 

நிலவே

உன் அழகு

இன்றும் எங்களை

வசப்படுத்துகிறது..

 

எங்கள் குழந்தைகளுக்கு

கற்பனையை

கலையை

உன்மூலமாகத்தான்

சொல்லித்தருகிறோம்…

 

எங்கள் காதலுக்கும்

கவிதைக்கும்

நீயே அடிப்படை…

 

ஆனாலும்

 

நிலவே!

சற்று தள்ளி நில்

மனிதனை

அருகில் வரவிடாதே!

 

உன் அழகு

கனிமங்களை

அவன்

அள்ளிக் கொள்ளலாம்…

 

அழகிய பூமியில்

ஆயிரம்

கோடுகள்

கிழித்தவர்கள் நாங்கள்..

 

இன்றும்

நடந்துக் கொண்டே

இருக்கிறது

கோடுகளுக்கான

சண்டை …

 

உன்னையும்

துண்டாடவிடாதே!

 

வடதுருவம்

தென் துருவம்

என்று

இப்பொழுதே

துண்டாடுகிறார்கள்..

 

மனிதனை

அண்டவிடாதே!

 

எங்கள் சந்திராயனைத்

தூங்கவிட்டுவிடு

சந்திரனே!

 

உன் அழகை

கனிமங்களை

மனித இச்சைக்கு

அளித்துவிடாதே!

ஆசைக்கு

அளவில்லாதவர்கள் நாங்கள்

 

நிலவே!

அழகே!

உன்னைத் தொட்ட

எங்கள்

இதயத்தில்

உன் காதல்

என்றும் நிலைத்திருக்கும்…

 

எங்கள்

ஓவியத்திற்கு

வடிவமாய்

 

கவிதைக்குப்

பொருளாய்..

 

காதலுக்கு

துணையாய்

 

மட்டுமல்ல

 

எங்கள்

அறிவியல் அறிவிற்கும்

சாட்சியாய்..

 

என்றும், என்றும்

நீயே…

நிலவே !!!