Tuesday, February 23, 2010

ஈகை

மாங்காய் + மா +தேமா

உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை
என்றைக்கும் இனிதே ஈவாய்!

முதுமை


விளம்/மாங்காய் + மா + தேமா

களைப்புற்ற காலம் என்றே

கருதிட வேண்டா நாளும்

அலைந்திங்கே பெற்ற பாடம்

அனுபவம் தன்னில் உண்டாம்

இளையவர்க் குதவும் வண்ணம்

இயம்பிட வேண்டும் மண்ணை

முளைத்திட்டச் செடியோ அன்றி

முற்றிய மரமே காக்கும்.

குழந்தைத் தொழிலாளி

விளம்/மாங்காய் மா தேமா

விடிந்திடும் முன்னே நானும்
வீட்டினில் வேலை செய்வேன்
குடித்திடும் அப்பா காட்டும்
கூலிக்கு வேலை செல்வேன்
அடித்திட வேண்டாம் கேட்பேன்
அன்றாடம் இரவு நேரம்
படித்திட வேண்டும் என்னைப்
பள்ளிக்கு அனுப்பு அம்மா!

கூடி வாழ்வோம்

மா மா காய்

கன்னங் கரிய காக்கையினம்
கூடி வாழும் தன்மையிலே
எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும்
ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை
கண்ணில் வீழும் மண்துகளை
கைகள் சென்று துடைப்பதுபோல்
மண்ணில் உயிர்கள் படுமுறுகண்
மாற்றும் மனதைக் கொள்வோமே.

பெற்றவர் உவகை

விளம்- மா- தேமா

பெற்றவர் தமக்கே பிள்ளை
பெருமைகள் சேர்ப்ப திங்கே
கற்றவர் அவையில் நன்றாய்
கற்றவன் இவனே என்று
மற்றவர் கூறக் கேட்க
மனத்தினில் மகிழும் நாளே
உற்றதோர் இன்னல் நீங்கி
உவந்திடும் உள்ளம் அன்றே!

உழைப்பே உயர்வாம்

விளச்சீர்+மா+தேமா

உழைப்பினில் உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
இளைஞனே வாழ்வில் வெற்றி
விளைந்திடும் நேர்மை தன்னில்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
கைவரக் கூடும் நாளை
வையகம் போற்றும் வாழ்வு.

உடல் நலம் பேணிட...

காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.

நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.

உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.

அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.

ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.

உண்மை அழகு

[மா+மா+காய்]
பாடும் குயிலின் அழகெல்லாம்
பாரீர் அதனின் குரலினிலே
வாடும் மலரும் ஓர்நாளில்
வாசம் அதனை மாற்றிடுமோ?
ஏடும் அழகாம் வெண்தாளில்
எழுதி கருத்தை விளக்கிடவே
நாடும் மனத்தில் அழகெல்லாம்
நன்மை தன்னில் காண்பீரே!

சேவற் கொடியோன் சிறப்பு.

காவல் அவனன்றி வேறில்லை என்பார்க்கு
பாவக் கரையழித்து காக்கும் கருணையே
சேவற் கொடியோன் சிறப்பு.

தொல்லைகள் தீர தொழுதிட்டால் போதுமென்றும்
இல்லை எனாதெவர்க்கும் ஈந்திடுவான் நல்லருளை
அல்லல் அகலும் விரைந்து.

எத்திக்கும் அன்பர் இணையடி தான்தொழுதே
சக்தி குமரன் திருப்புகழைச் சொல்லும்வாய்
தித்திக்கும் தேனாய் இனித்து.

வேலும் மயிலும் துணையென நம்பியே
நாளும் அவனடி நாம்தொழ நன்மையெலாம்
சேர்ந்தே சிறக்கும் வாழ்வு.