Thursday, April 09, 2009

காலணியும் கதைச் சொல்லும்

நடந்து வரும் காலணியே நீ
பறந்து வர நேர்ந்ததென்ன?

பேசாத வாய்திறந்தே நீ
சொல்லுகின்ற செய்தி என்ன?

வேடிக்கை இல்லையிது
என் வேதனையைச் சொல்லிடுவேன்.

எத்தனையோ கூட்டத்தில்
காலடியில் நான் கிடந்தேன்..
கட்டுண்டு இருந்ததனால்
கருத்துச் சொல்லாமலே
நானிருந்தேன்...

கரடு முரடு பாதையிலே
காலைக்காத்து நிற்கையிலே
அத்தனை சோகத்தையும்
அறிந்துக் கொண்டு
தானிருந்தேன்...

ஒருவன் செய்த
குற்றத்திற்கு
ஓரினமே அழிவதென்றால்
வீழும் சனநாயகம்
விரக்தியினால் சொல்லுகின்றேன்

பாழும் ஊழல்
பறித்ததன்று ஓருயிரை....
எனின்
வீணே ஓரினமே
சாகத்தூண்டிவிட்டார்
என்றாலும்
ஆகாதிவர் மேல் குற்றமில்லை
என்றே அறிவித்தது
அடுத்த ஊழல்

பட்டது பணக்காரரென்றால்
பத்தி பத்தியாய் எழுதுகின்றார்
பாரையே திரும்பி
பார்க்கச் செய்கின்றார்...

பொல்லாத அரசியலில்
ஓரினத்தையே
ஓட ஓட விரட்டி
தலைப்பாகை தனைக்கண்டால்
தலையையே
வெட்டி வீழ்த்தி,
மொட்டையடித்து
வெறியாட்டம் ஆடியவர்
வெகுளியாய் அறிவிக்கப்படுகிறார்.

பதவியிலிருப்போர்
பதிலளிக்காது
பார்வையைத் திருப்புகிறார்..

பதைப்புடன் நானிருந்தேன்
பதிலளிக்க மாட்டாரா?
பட்டதோர் வேதனை
பாரரிய வேண்டாமா?

ஓட்டு கேட்கும் வேளையிது
விட்டுவிட்டால்
நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை

தன் இனமே அழிந்தாலும்
உணர்வின்றி ஓய்ந்திருக்க
நானென்ன
தமிழன் காலடிச் செருப்பா?

சீரிப்பாய்ந்து விட்டேன்
சீக்கியர் சிரம் காத்து
சினம் சொல்லி
செயலிழந்தேன்..

என் துணை
நானிழந்தாலும்
எத்துணை
இழந்தாலும்
சொற் துணை இன்றி
நான் சொன்ன சொல்
சீக்கிரமே உணர்ந்திடுவர்..

காலணிகள்
பறக்க ஆரம்பித்தால்
பாரதம்
தலைக்கவிழும்
சிந்திப்பீர்...