Showing posts with label இணைக்குறள் ஆசிரியப்பா. Show all posts
Showing posts with label இணைக்குறள் ஆசிரியப்பா. Show all posts

Saturday, January 23, 2010

'காணும்' பொங்கல்

இன்று காணும் பொங்கல் திருநாள்
நன்றாய் காண' வேண்டும்
'காந்தி' சிலைமுதல்
'கண்ணகி' சிலைவழி
'மெரினா' கடற்கரை வரையிலும்
மெதுவாய் நடந்தால்
பெரிதாய் காணலாம்...
தீவுத் திடலில்
திரளும் கூட்டம்
பொருட்காட்சி காண
பெருகும் மக்களின்
பொருட்களில் நன்றாய்
பொங்கக் காணலாம்...
காக்கிச் சட்டையின்
கண்களில் கொஞ்சம்
கடுமைக் காணலாம்
கொடுத்தே விட்டால்
'மாமூலாய்' மகிழ்ச்சிக் காணலாம்...
மாநகரப் பேரூந்தில்
மக்கள் நெரிசல்
கூட்டமாய் இருக்கும் கொஞ்சம்
கூடவே காணலாம்...
காணும் பொங்கலில்
காணாது விட்டால்
பிரியாணி, பாக்கெட்,
பீடியு மில்லை, மீதியு மில்லை
ஓடியே சென்றுடை யணிந்து
வாடி! செல்வோம் வகையாய்
காணும் பொங்கல் நாமும் காணவே!

[அட இது நம்ம பிளேடு பக்கிரியும் அவங்க சம்சாரமும் கொண்டாடின காணும் பொங்கலுங்க.]

Wednesday, January 06, 2010

நன்றியுடன்


நற்றமிழ் தன்னை நானறிந் துய்யவே

கற்றிடச் செய்தவள்
ஈறாறு வயதில்
தேனாம் தமிழை
நாடி நான்படிக்க
பாட புத்தகத் துடனே
'பொன்னியின் செல்வனை'
என்னிடம் தந்தவள்
அன்புடை எந்தாய்....
என்றும் நன்றியோ(டு) என்மனம் நினைப்பது
அன்றென் வகுப்பில்
அருந்தமிழ் அளித்தென் ஆசைத் தீக்கு
நறுநெய் யிட்டநல்லா சிரியர் சிலர்
இல்லாயின் எந்தீ
சொல்லாம் எப்படி?...

வாழ்க்கைத் துணையாய் வந்தவன் தானுமென்
வாசிப்புத் துணையாய் நின்றான்.
நேசிக்கும் தமிழை
நேராய் நானுனர மேற்படிப்பு
படித்திடச் செய்தான்
படிப்படியாய் உயர்ந்திட எனக்கே
பக்கபல மாயிருந் தவர்பலர்
சக்கரையாய் இனிக்கும் அவர்நினைவு...

இங்கணம் இந்தமிழை
இயன்றவரைப் படித்திருக்க, தமிழ்பற்றால்
தாமறித் தமிழைநாம றியவலை தன்னில்
யாப்பிலக் கணங்கற் பித்தார் நன்றாய்
பாப்புனைய வல்லார்..
பொய்யிலாப் புகழுடை
அய்யன் வள்ளுவன்தன்
சொல்லாம் குறளினைக்
கல்லில் எழுத்தாய்
கருத்தில் இருத்தியோன்..
காலம் அழிக்கா கவிபுனைத் திறனை
அருந்தமிழ் தன்னில் எனக்களித் திட்ட
திரு.அகரம் அமுதா என்மனதில்
சிகரமென உயர்ந்தே நின்றார்..

சிறப்பாய் தனித்தமிழ்
பிறக்கும் இவரிடம், இன்தமிழில்
அறத்தோடு அழகாய் கருத்தைச் சொல்லும்
திறத்தான் திரு.தமிழ நம்பிநல்
மனத்தால் நற்றமிழை
எனக்களித்தார் நன்றியோடு
அவரைப் போற்றிப் பணிவேன்..
இவர்களின் துணையெனக் கிங்கே
அவரைக் கொடிக்கோர் கொம்பினைப் போன்றதே!...

Friday, September 25, 2009

விழி திறந்து காட்டுவழி - இணைக்குறள் ஆசிரியப்பா


இப்படம் திரு.தீபச்செல்வன் அவர்களின் http://deebam.blogspot.com/ வலையிலிருந்து எடுத்தாளப்பட்டது. இப் பா அவரது முகத்தை மூடிக் கொள்கிற குழந்தை என்ற கவிதைக்கு பின்னூட்டமாக எழுதபட்டது. இப் படம் எடுக்கப்பட்டச் சூழல் அவர் வரிகளிலேயே!!! (விடுதலைப் புலிகளது கட்டாய ஆட்சேட்பிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காகத் திருமணம் செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு/தம்பதிகளுக்குப் பிறந்த இந்தக் குழந்தை 20.09.2009 அன்று கைதடி தடுப்பு முகாமிலிருந்து விடுவிப்பதற்கு சற்று முன்னதாகக் காத்துக்கொண்டிருந்தப் பொழுது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டது.)

கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமிம்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ? நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக் காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!

Sunday, September 20, 2009

பாரதி தாசன் - [ இணைக்குறள் ஆசிரியப்பா ]



புரட்சி புலவன் பாரதி தாசன்

பரந்த உலகினில்

பொருட்களை எல்லாம்

பொதுவாய் வைத்திடும்

புதுமைச் சொன்னான்..

உழைப்பின் பலனெலாம்

உழைப்பவர் தமக்கே உரிமையாம் என்பதை

உரக்கச் சொன்னான்...

நன்றாம் அவன்நமை நாடச் சொல்லும்

ஒன்றாய் உளஞ்சேர்

காதல் திருமணம்,

கைம்பெண் மறுமணம்,

மண்ணில் மாந்த ரெல்லாம்

ஒன்றெனும் சமத்துவம், சகோத ரத்துவம்..

இன்னும் நம்மிடை இருக்கும்

மூடப் பழக்கம்

மிதிக்கச் சொன்னான்,

பகுத்தறி வாலதைப் போக்கச் சொன்னான்..

பெண்ணைச் சமமாய் மதித்திட

கண்ணாய்த் தமிழைக் காத்திட

கருத்தில் நேர்மை

கருணை கண்ணியம் கலந்தே தந்தான்

விருந்தாய் அருந்தமிழ்..

அறிந்தே நாமதைச்

சுவைப்போம், மகிழ்வோம், நற்றமிழ்

சுவைப்போல் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!

செல்வம் நிலையாமை - [ இணைக்குறள் ஆசிரியப்பா]

இன்றுளது நாளை இல்லா தாகும்
வண்டிச் சக்கரமாய்
வாழ்க்கைச் சுழலும்
வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
மாறும் யாவும்
மனிதர் வாழ்வினில்
வறியர் செல்வர், செல்வர்
வறியர் ஆவர்
அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!