என் மொட்டை மாடியில்
புன்னைகைக் காட்டிய
நட்சத்திரக் குவியலை
எங்கே காணவில்லை?
"இருட்டுத் தரையில்
சிதறிய சில்லரைக் காசுகள்"
என்று நான்
கவிதை படைக்க
கற்றுக் கொடுத்த
நட்சத்திரங்கள்
எங்கே?
அன்று
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்தோம்..
இன்று அம்மியும் இல்லை…
அருந்ததி
நட்சத்திரமும் இல்லையே…
எங்கே போயின?
சுந்தரர்
வேடர்களுக்கு பயந்து
ஆற்றில் போட்டு
குளத்தில் எடுத்த
பொற்காசுகளைப் போல்
என் நட்சத்திரங்களை
இருநூறு கிலோமீட்டர்
சென்று தான் பார்க்க முடியுமாம்…
இங்கே
யாரந்த வேடர்கள்..
நகரின் வெளிச்சப் புகை
விண்ணை மறைத்து விட்டதாம்…
நகரின் எத்தனையோ
வீடுகளில்
எரியாத
விளக்குகள்
ஆடம்பர கடைவீதிகளில்
அதிகம் எரிவதால்
விண்ணை மட்டுமல்ல
எங்கள் கண்ணையுமல்லவா
மறைத்து விட்டது…
அறிவியல் ஆசிரியர்கள்
எப்படி காண்பிப்பீர்கள்
நட்சத்திர மண்டலத்தை…
ஒரு நாள் பயணமாக
இருநூறு கிலோமீட்டர்
தள்ளிச் சென்றா?
அன்று
சின்னஞ் சிறுவர்கள்
நட்சத்திரங்களைப் பார்த்துதான்
அறிவியல் மேல்
ஆசைக் கொண்டார்கள்..
இப்போது எப்படி
வரும் அறிவியல் மேல் ஆசை..
நட்சத்திரங்களைப் பார்த்து
பயணம் செல்லும்
பறவைகளே!!
எங்கள் நகரம்
உங்கள் கண்களில்
படவே இல்லையோ!!!
இரவு முழுவதும்
முழித்துக் கொண்டிருக்கும்
எங்கள் இளந் தலைமுறையே!
உங்களுக்குத் தெறியுமா?
மெலொடோனினைத் தடுத்து
உங்கள் ஆரோக்கியதிற்கு
தடையாய் இருப்பது
இந்த வெளிச்சப் புகைதான் என்று…
சிந்தியுங்கள் மக்களே!!!
இரவில் வெளிச்சமும்
இயற்ககைக்கு எதிரிதான்..
நாளைய விடியல்
நன்றாய் அமைய
இன்றே சிந்திப்போம்…
No comments:
Post a Comment