தாயே வாழ்க! தமிழே வாழ்க!
தாயே வாழ்க! தமிழர் வாழ்க!
தரணியில் எங்கும் தகவுடன் வாழ்க!
சுரண்டிடும் பேய்கள் சூழ்கலி நீங்கி
தமிழகம் வாழ்க! தன்னலம் நீக்கி
தமிழர் எழுக! தாயும் வாழ,
தன்னினம் வாழ, தமிழா எழுக!
இன்னல் யாவும் இன்றொடு முடிக!
கண்ணுங் கருத்தாய் கற்றே தமிழை
விண்ணும் அளந்திட வழிசெய் திடுக!
ஆய்ந்தே அறிவியல் அனைத்தும் அறிக!
தேய்ந்திடா வண்ணம் தமிழைக் காக்க
கலைச்சொல் ஆக்கியே கருத்துடன் சேர்த்தே
கலைகள் யாவும் கற்பீர் தமிழில்
அயல்மொழி நீக்கியே அழகாய் எழுதிட
இயல்பாய்த் தமிழில் இனிதாய்ப் பேசிட
தங்கும் தமிழும், சற்றும் தொய்விலா[து]
எங்கும் புகழோ[டு] உயர்ந்தே வளமுற
தமிழர் வாழ்க! தமிழகம் வாழ்க!
தமிழ்த்தாய் சிறப்புடன் வாழ்க! வாழ்கவே!
No comments:
Post a Comment