Saturday, December 22, 2018

பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் துறைமுக தமிழ் சங்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..

பாரதியின் பார்வையில் பாரதம்


தமிழைப் பற்றியும் பாரதியைப் பற்றியும் பேசுவதற்கும் கேட்பதற்கும் தமிழருக்கு சலிப்பதே இல்லை. பாரதி இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்திலும் தமிழ் மக்களின் சிந்தனையிலும் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர். கவிதையில் புதுப் பாதையை அமைத்தவர். இன்றைய புதுக் கவிதைகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தது அவரது வசனக் கவிதைகள்.

எந்த பொருளாக இருந்தாலும் ஒரு தெளிவான சிந்தனை கொண்டவர் பாரதி.

பாரதியை ஒரு கவிஞராக நம் எல்லோருக்கும் தெரியும். கவிதை, உள்ளத்தின் மலர்ச்சியாக அமைவது. மனத்தோடு மனம் பேசும் கலை கவிதை.

உரைநடை அல்லது கட்டுரைகள் சிந்திக்கத் தூண்டுவதாய், செயல் படத் தூண்டுவதாய் மட்டுமல்லாமல், ஆலோசனைகளும், விவாதங்களும் கொண்டு அமைவது.

பாரதியாரின் கட்டுரைகள் அவரது கவிதைகள் போல் எளிய நடையில் அமைந்தவையல்ல. என்றாலும் எளிமையாக எழுதப்பட வேண்டும் என்பதை, தமிழ் உரைநடையின் துவக்க காலத்திலேயே மிகத் தெளிவாக அறிந்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் பாரதி.

‘கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி’

என்பது பாரதியாரின் உரைநடை பற்றிய கருத்து.

அதுமட்டுமல்லாமல் சிந்தனைத் தெளிவு எவ்வளவு முக்கியம் என்பதை

‘ தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டி மாடு போல ஓரிடத்தில் படுத்துக் கொள்ளும்’

என்று நையாண்டி கலந்து மிக அழகாக சொல்லியிருப்பார்.

பாரதியின் கருத்துகளை கவிதையில் வரைந்து கவிச்சரத்தை நம்முடன் பகிர்ந்துக் கொள்ள நமது துறைமுக பணியாளர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

எனவே பாரதியின் கட்டுரைகளின் மூலம் நாம் அறிய கிடைக்கும் அவரது சமுதாய கருத்துகள் பற்றி நாம் இப்போது பார்ப்போம்

சமுதாயம் பற்றிய கருத்துகள் என்றால் அதில் பெண்களின் நிலைப் பற்றிய கருத்துகள் மிக முக்கியமானது. பாரதி பெண்களைப் பற்றிய மிகச் சிறந்த தெளிவான கருத்துகள் கொண்டிருந்தார். அதை சொல்ல பயப்பட்டதுமில்லை.

“ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு,மனம் உண்டு, புத்தியுண்டு, ஐந்து புலங்கள் உண்டு. அவர்கள் செத்த யந்திரங்களல்லர்……. சகோதரிகளே! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தர்மத்துக்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்மயுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றிப் பெறுவோம்….”

நாம் வெற்றி பெறுவோம் என தன்னையும் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பெண்களின் விடுதலைக்கு பெண்கள் முன்வந்து போராடவேண்டும் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறார். 

‘பதிவிரதை’ என்ற கட்டுரையில்
“அட பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதையாக இருக்க முடியும்?”
என்று சாடியிருக்கிறார். இது கற்பு என்பது இருபாலருக்கும் பொது என்ற அவரது கருத்தை காட்டுகிறது.

பாரதியார் பெண் விடுதலைக்காக 9 விடயங்களைத் சொல்கிறார்.

1.பெண்கள் வயதுக்கு வரும் முன் திருமணம் செய்யலாகாது
2.விருப்பமில்லாத கணவரை மணக்கும் படி வற்புறுத்தல் கூடாது
3.மணவிலக்கு உரிமை வேண்டும்
4.சொத்தில் சம உரிமை தர வேண்டும்
5.திருமணமின்றி வாழும் உரிமை வேண்டும்
6.பிற ஆடவருடன் பழகும் சுதந்திரம் வேண்டும்
7.உயர்கல்வி அனைத்துத் துறையிலும் தரப்படவேண்டும்
8.எவ்வித பணியிலும் சேரச் சட்டம் துணைவர வேண்டும்
9.அரசியல் உரிமை வேண்டும்.

பாரதியார் கோரிய இந்த உரிமைகளில் பல இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. என்றாலும் நாட்டிற்கே சுதந்திரமில்லா அந்நாளில் இப்படி சொத்தில் சம உரிமை, பிற ஆடவருடன் பழக உரிமை, மணவிலக்கு உரிமை, எந்த பணியிலும் சேர உரிமை என தனது காலம் தாண்டி சிந்தித்த பாரதியின் தொலைநோக்குப் பார்வை வியப்பளிக்கக்கூடியது.

பெண்கள் இன்று கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்கும் இனி காணவிருக்கும் உயர்வுகளுக்கெல்லாம் பாரதியின் பங்கு முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது என்பது உண்மையானது.

அடுத்து கல்வி பற்றிய அவரது சிந்தனைகளைப் பார்ப்போம்

தேசியக் கல்வி என்ற தனது கட்டுரையில் ஆரம்பப் பள்ளிக்கூடம் எவ்வாறு கட்டபடவேண்டும் அதில் என்னவெல்லாம் கற்பிக்கப்பட வேண்டும் என அருமையாக கூறியிருப்பார்.

“ உபாத்யாயர்கள் பி.ஏ, எம்,ஏ., பட்டதாரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்டிரிகுலேஷன் பரீட்சை தேறியவர்களாக இருந்தால் போதும். மெட்ரிகுலேஷன் தவறியவர்கள் கிடைத்தால் நல்லது.  இப்படி தமிழ் நாட்டில் ஏற்படும் தேசியப் பாடச் சாலைகளில் உபாத்யாயர்களாக வருபவர்கள் திருக்குறள் , நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாகவாவது இருக்க வேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும் ஸ்வதர்மாபிமானமும் எல்லா ஜீவர்களிடத்தும் கருணையும் உடைய உபாத்யாயர்களைத் தெரிந்தெடுத்தல் நல்லது”

என்று கூறியிருப்பார். 

எவ்வளவு உண்மையான கருத்துகள். இன்றய ஆசிரியர்கள் நிலை என்ன?

அதுமட்டுமல்ல இந்த தேசீய பாடச்சாலைகளில் காற்பிக்க வேண்டியன என சிலவற்றை சொல்லியிருப்பார்.

அ. எழுத்து, படிப்பு கணக்கு
ஆ. இலேசான சரித்திரப் பாடல்கள்
இ. பூமி சாஸ்த்திரம்
ஈ. மதப் படிப்பு
உ. ராஜ்ய சாஸ்திரம்
ஊ. பொருள் நூல்
எ. ஸயன்ஸ் அல்லது பௌதீக சாஸ்திரம்
ஏ. கைத் தொழில், விவசாயம்,தோட்டப் பயிற்சி, வியாபாரம்
ஐ. சரீரப் பயிற்சி
ஒ. யாத்திரை (ஏக்ஸ்கர்ஷன்)

என்று பட்டியலிட்டதோடு ஒவ்வொன்றும் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியிருபார்.

அதுமட்டுமல்லாமல் பொது குறிப்பு என்று தனியாக இப்பள்ளிக்கூடங்கள் அமைக்க எவ்வளவு பொருள் தேவைப்படும் அதை எப்படி பெறுவது. ஒவ்வொன்றிக்கும் எவ்வளவு எப்படிச் செலவு செய்ய வேண்டும், பாடத்திட்டத்திற்கான கருவிகள் எவ்வாறு பெறுவது என மிகத் தெளிவான வரையறையை கூறியிருக்கிறார்.

மிகவும் முக்கியமாக
“ இத்தகைய கல்விகற்பதில் பிள்ளைகளிடம் அரையணாக்கூட சம்பளம் வசூலிக்கக் கூடாது.” என்றும்

“மிகவும் ஏழைகளான பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடத்திலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும், வஸ்திரங்களும் இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்”

என்றும் ஒரு முழுமையான திட்டதையே அளித்திருப்பார். 

நினைத்துப் பாருங்கள் அன்றைய காலத்திலேயே விவசாயம், வணிகம், பொருளாதாரம் அறிவியல், அரசியல், உடற்பயிற்சி என எல்லாத் துறைகளிலும் மிகச்சிறந்த பாடத்திட்டத்தை அவர் அளித்திருப்பது வியக்கத் தக்கதே. 

இலவசக் கல்வி பற்றிய அவரது கருத்துகள் எவ்வளவு முக்கியமானது.

இவ்வாறு எத்துறையாயினும் தெளிவான சிந்தனை கொண்ட அம்மகாகவியின் ஆற்றலை என்னவென்பது. 

அவரது சிந்தனைகள் எல்லாம் நடைமுறை படுத்தப் பட வேண்டும் என்ற கருத்தினை அனைவரிடமும்   விதைப்போம். முயல்வோம்.

வாழ்க பாரதி நாமம். வாழ்க பாரத சமுதாயம்.

No comments: