Thursday, October 24, 2019

பூவின் பாடல்

நான்
இயற்கை அன்னை 
தினமும் பேசும் 
அன்பு மொழி...

நான்
நீல விதானத்திலிருந்து 
பச்சை விரிப்பில் விழுந்த
நட்சத்திரம் ...

நான்
குளிர்கால 
ஏகாந்தத்தின் விந்து...
கோடையின் மடியில் தவழ்ந்து 
இலையுதிர் காலத்தில் இமைமூடி
வசந்தம் பெற்றெடுத்த
வண்ண மகள்...

காலையில் 
காற்றோடு கலந்து 
கதிரவன் வரவைக்
கட்டியம் கூறுவேன்...
மாலையில் 
பறவைகளின் கீதத்தோடு
பகலுக்கு பிரியாவிடையளிப்பேன்...

இந்த பூமி
எனது வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது...
காற்று
எனது வாசத்தால்
நிரம்பியுள்ளது...

நான்
இரவின்
ஆயிரமாயிரம் கண்களால் 
துயில் கொள்கிறேன்...

பகலின்
ஒற்றைக் கண்ணால்
விழிக்கிறேன்...

நான் 
பனியை அருந்தி 
புட்களின் இசையோடு
புற்களின்  அசைவிற்கேற்ப
நடனமாடுகிறேன்...

நான் 
காதலர்களின் பரிசு...
திருமணங்களில் அலங்காரம்...

நான்
இறந்தவர்களுக்கான
கடைசி பரிசு...

நான் 
மகிழ்ச்சியில் ஒரு பாதி...
துக்கத்திலும் ஒரு பாதி...

ஆனாலும் 
நான் 
வெளிச்சம் நோக்கியே 
என்
விழிகளைத் திறக்கிறேன்...
எனது இருண்ட நிழலை
நான் பார்ப்பதில்லை...

மனிதர்கள் 
கற்க வேண்டிய
பாடம் இது...


கலில் ஜிப்ரானின் ' Song of the flower' கவிதையை தமிழாக்கம் செய்யும் எனது முயற்சி  




No comments: