Friday, November 01, 2019

கண்ணீரும் புன்னகையும்...

My attempt to write Khalil Gibran's poem ' A Tear and a Smile' in Tamil...

கண்ணீரும் புன்னகையும்
______________________________
எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
ஆனதாக இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

எனது
துயரங்களை எல்லாம் 
சந்தோஷங்களாக
மாற்றிக் கொள்ள
விழையமாட்டேன்...

எனது  கண்ணீர் 
துக்கத்தால் தோன்றி 
சோகத்தின் வெளிப்பாடாக
நகைப்புக்குள்ளாவதை 
நான் நாட மாட்டேன்...

ஆனால் 
எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
ஆனதாக இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

எனது கண்ணீர் 
என்னைத் தூய்மையாக்கும்...
வாழ்வின் இரகசியங்களையும்
அதன் மர்மங்களையும்
எனக்கு அடையாளம் காட்டும்...

எனது புன்னகை 
என் மக்களின் 
மிக அருகில் 
என்னை அழைத்துச் செல்லும்...

படைப்பின் மகத்துவத்தை
எனக்கு உணர்த்தும்...

எனது கண்ணீர் 

துவண்ட நெஞ்சங்களின்
துணையாக 
என்னைச் சேர்க்கும்....

எனது புன்னகை 

வாழ்வின் 
அர்த்தத்தை 
நான் அறியச் செய்யும்...

நான் 
மனக்கசப்போடு
நம்பிக்கையின்றி
வாழ்வதைவிட

ஆசையோடும்
ஏக்கத்தோடும்
இறப்பதையே 
விரும்புகிறேன்...

அன்பிற்கும்
ஆராதனைக்குரிய அழகிற்குமான
எனது தேடல்..
எப்போதும் என் நெஞ்சில்
நிலைத்திருக்க வேண்டும்...

தேடல் இல்லாத போது
வாழ்க்கை 
இழிவானதாகிறது....

அன்பிற்காக ஏங்கும் 
ஆன்மாவின் ஒலி
மெல்லிசையை விட
இனிமையானது....

மலர்கள் 
மாலையில் 
ஏக்கத்தோடு தன்
இதழ்களை மூடிக்கொள்கின்றன...

காலையில் 
கதிரவனின் காதல்
முத்தத்தால் தங்கள் 
இதழ் விரிகின்றன....

பூக்களின் வாழ்க்கை 
ஏங்கியும், நிறைவேறியும்
நகர்கிறது...

கண்ணீரும் புன்னகையுமாய்...

மேகம்
கடலிலிருந்து
எழுந்து
நிலம் கடந்து
மலை அடைந்து
சில்லென்று தென்றல் தீண்ட
மழையாய் பொழிகிறது...

மழைநீர் 
மலையில் விழுந்து.,
வயலில் விளைத்து 
ஓடையாய் ஓடி மீண்டும் 
கடலிலே கலக்கின்றது....

மேகங்களின் பயணம் 
பிரிந்தும் சேர்ந்தும் 
தொடர்கிறது...

கண்ணீரும் புன்னகையுமாய்...

ஆன்மாவின் பயணமும்
அப்படியே...

பேரான்மாவிலிருந்து
பிறந்து
துயரத்தின் மலைக்கடந்து,
சந்தோஷ சமவெளி தாண்டி,
மரணத்தின் 
மென் தீண்டலால்
மீண்டும் 
தனது இருப்பிடமான
பேரான்மாவையே அடைகிறது...

இறைவனை நோக்கிய
ஆன்மாவின் பயணம்...

கண்ணீரும் புன்னகையுமாய்

எனவே

எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
நிறைந்து இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

No comments: