கருத்தில் தெளிவாய்
நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண்
எண்ணம் உயர்ந்தால்
இன்சொல் இணைந்தால்
இல்லில் மகிழ்வாய் மலர்ந்திடுவான்...
'நேற்று' என்பது
விதையாக...
'நாளை' பூக்கள்
மலர்ந்திடவே...
இன்றையப் பொழுதை
உரமாக்கு...
கண்ணை மூடும்
கண நேரம்
கடந்த காலம்
என்றாகும்...
இன்று இக்கணத்தை..
இனிதாக்கு...
இனிவருங்காலம்
உயர்வாகும்...
சொல்லும் சொல்லை
சீராக்கு
சோர்வை உந்தன்
பகையாக்கு...
துஞ்சியக் காலம்
துயராகும்..
விழித்திடு
இந்நொடி உனதாகும்...
விழுந்தது
முளைக்கும்
விதையானால்....
வெடித்தது
மலரும்
அரும்பானால்...
அடங்கியது
எழுந்திடும்
அலையானால்....
அறிவாய்....
கடந்தது
காலம்
என்றானால்.....
வாழ்க்கை
நதி பின்
திரும்பிடுமோ......
சென்னையில் மார்கழி
காரிருள் போர்வைக் கலையா திருக்கும்
மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது
கூர்வேல் விழியார் கூடி வரைந்த
வண்ணக் கோலம் வாசல் மறைக்கும்
எண்ணம் சிறக்க இருகரம் கூப்பி
அலையா மனதொடு கடுங்குளிர்த் தாங்கி
நிலைப்பே ரின்பம் நெஞ்சில் நிறுத்தி
கலையாம் இசையால் கண்ணனைப் பாடி
வெறுங்கா லோடு வீதியுலா வந்திடும்
திருமால் அடியார் திருத்தாள் தன்னை
பணிந்தே வணங்கிடும் பண்புடை பெண்கள்
அணிந்திடு பட்டும் பொன்னின் நகையும்
அவர்தம் சிறப்பை அழகாய்ச் சொல்லும்
கோவில் பக்கம் சிறுவர் தம்மை
பொங்கல் மணமே பெரிதாய் ஈர்க்கும்
பாட்டும் பரதமும் பக்தியோ டிணைந்து
பரவச மூட்டும் பாட்டுக்கச் சேரியில்
இப்படித்தான் இருந்தது எங்களூர் சென்னை
அன்றையப் பொழுதில் அணைத்தும் அருமையாய்
இன்றிவைக் குறைந்து இதயம் இருளாக
நல்லவைத் தேய்ந்து நலமிழந் தோமே!
சென்னையில் இன்று
கோலம் போட
வாசலின்றி
உயர்ந்தே நிற்கும்
அடுக்கு மாடி வீடுகள்
தூ' வென்று துப்பும் எச்சில்
தெருவெல்லாம் குப்பை தூசு
காலைக் கழிவு
கெட்டவார்த்தையோடு
எங்கும் பிச்சைக்காரகள்
பணத்தாசையால்
வாசனையூட்டப்பட்ட
வெற்றுப்பூ
வியாபாரம்
காசுக்காய்
கடவுளின் தாரிசனம்
ச்சி சீ
இதுதான்
இன்றயச் சென்னை..
மூக்கைத் துளைக்கும்
'மெனு' ஒன்றிருந்தால் தான்
பாட்டுக் கச்சேரிக்கும்
கூட்டம் வரும்..
பாட்டை விட்டு
பட்டை எடை போடும்
'இரசிக பெருமக்கள்'
இடையே
குத்தாட்டப் பாட்டோடு
கூப்பிடும் தொலைப்பேசி
சத்தமாய் பேசும்
சலவையுடை யணிந்த
பகட்டு மனிதர்கள்
விற்பவர், நுகர்வோர் என
விலைப் பொருளாகிவிட்ட
இசைக் கலை..
இசையை இரசிக்கும்
இரசிகர்கள் போய்
இரசிகருக்காய்
இசையை வளைக்கும்
விதமாய் விட்டது
வெற்றியின் இரகசியம்..
இன்றும் இருக்கத்தான் செய்கிறது
இன்னனிசையும்
இனிமையும்
நேர்மையும் ஒழுக்கமும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
நல்லவை நாடி
இறைவனை வேண்டியபடி
'வாழ்க! சென்னை.
இனிய சொல்லால்,செயற்திறத்தால்
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்டீர்
எளிதில் அனுகும் இயல்பால் நீர்
ஏற்றம் கொண்டீர், நன்மனத்தால்
பணியில் பெற்ற நல்லறிவை
பகிர்ந்தீர் நாங்கள் பயனுறவே...
அணியால் சிறப்பு செய்யுளுக்கே...
அதுபோல் நீவீர் இப்பணிக்கே...
பணியும் பெருமை என்றாற்போல்
பண்பால் உயர்ந்தீர் உம்வாழ்வில்
கனியில் சுவைப்போல், செந்தமிழில்
குறளின் நலன்போல் என்றென்றும்
குறையா செல்வம்,அன்போடு
கூடும் சுற்றம், மனநிறைவு
நிலையாய் பெற்று நலம்வாழ
நெஞ்சில் வணங்கி வாழ்த்துகின்றோம்....
காய் காய் காய் மா
காய் காய் காய் மா
தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை
தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று
விரும்பாத துர்நாற்றம் வீணாகும் மண்ணும்
விலங்கினங்கள் உண்டாலோ உண்டாகும் மரணம்
குறுப்பான குழந்தைக்கும் கேடாச்சே இதனைக்
கொண்டேத்தன் தலைமூட நின்றததன் மூச்சே
பெருந்தீங்கை மனங்கொண்டே பெரியோர்கள் நாமே
பிழையாமல் பயன்பாட்டை நிறுத்திடுவோம் இன்றே!