Sunday, December 28, 2008

விலைமகள் வேதனை

[இப் பாடல் வெண்பா கற்பதற்கு முன் எழுதியது. இது வெண்பா இல்லை . நாலடிகளாய் வந்தாலும் தளைகள் சரியாக இருக்காது.]
இருவர் செய்யும் தவறில் ஆணுக்கு அறிவுரையும் பெண்ணுக்கு பழியையும் மேலும் தண்டணையையும் தருவது இவ்வாணாதிக்க உலகு.பெண்ணொருத்தி தவற ஆண்கள் பலபேர் காரணம்மென்பதை வசதியாக மறந்துவிடும் உலகம்.ஒருபுறம் விண்ணையும் சாடும் பெண்கள் மறுபுறம் விலையாகும் பெண்கள்.இன்னும் பலத்தடைகளைத் தாண்ட வேண்டும் இவர்கள்.

பெண்ணை பொருளாக்கி போதைக் கடிமையாகி
பின்னை அவளைப்பழித் துரைத்து பொல்லாத
கொலைமகள் விலைமகள் வேசியென் றுபேசி
கொல்லும் நெஞ்சையிவ் வாணுலகு.

கட்டிய கணவன் கள்ளைக் குடித்து
எட்டி உதைத்தால் ஏழைப்பெண் ணொருத்தி
இடறி விழுமிடம் வெறிநாய்க் கூட்டம்
கடித்துதறும் கட்டில் காண்.

தவறி பிறந்தாலும் தன்பிள்ளை என்பதனால்
தன்னை விருந்தாக்கி பசியாற்றும் பெண்மைக்காண்
கட்டில்சுக மல்லஅவள் காண்பதுவே பிள்ளை
தட்டில் ஒருபிடிச் சோறு.

படிப்பில்லை பொருளில்லை பசியாற வழியில்லை
வீதியிலுறங் கிடும்வேதனை தாங்காத போது
வெறிநாய்க் கூட்டம் விருந்துக் கழைக்க
வேசி ஆனாள் இவள்.

பிள்ளை பாசியாற பெற்றவர் தனைக்காக்க
கணவன் நோய்தீர கடமை தனதாக்கி
விலையாகும் பெண்ணை விலைபேசும் கயவன்
காண்பது காமம் மட்டுமே...


இப் பாடல்களை வெண்பாவின் இலக்கணத்துள் அடைக்கும் முயற்சி.
பெண்ணைப் பொருளாக்கி போதைக் கடிமையாகி
பின்னை அவளைப் பழித்துரைத்தே அன்னவள்
பொல்லா கொலைமகள் வேசியென்று பேசியேக்
கொல்லுந்நெஞ் சையிவ் உலகு.

கள்ளைக் குடித்து கணவன் தினமுமே
தொல்லைக் கொடுக்க ,படித்திடும் பிள்ளையும்
கல்லை உடைக்க, சில்லாய் சிதறியே
எல்லைக் கடந்தாள் இடிந்து.

படிப்பும் பொருளும் பசிதீர் வழியுமில்லை
வீதியிலு றங்கிடும் வேதனைத் தாங்காத
வேளை வெறிநாய்க் கூட்டம் விருந்தாக்க
வேசியென ஆனாள் இவள்.

தவறிப் பிறந்தாலும் தன்பிள்ளை என்றே
அவன்பசி போக்கும் அல்லல் அவளேற்க
கட்டில் சுகமல்ல காண்பதவள் பிள்ளையின்
தட்டில் ஒருபிடி சோறு.

Wednesday, December 24, 2008

தொட்டில் குழந்தைகள்

சின்ன சின்ன மத்தாப்பூக்கள்
சிரிக்கத்தெரிந்த ரோஜாக்கள்
தத்தி நடக்கும் மான் குட்டிகள்
கத்தி பேசும் கருங்குயில்கள்
கண்கள் இரண்டும் வண்டினங்கள்
காலைநேர பனித் துளிகள்
ஒலிஎழுப்பும் ஓவியங்கள்
ஒவ்வொன்றும் இரத்தினங்கள்
சக்கரக்கட்டி மனசுக்குள்
வெல்லக்கட்டி பேச்சுகள்
அத்தனையும் புறந்தள்ளி
அடிமனசை கல்லாக்கி
எங்கே சென்றனர் இவர் தாய்மார்கள்
குப்பை தொட்டியில் போட்டுவிட்டு
தொட்டில் குழந்தையாக்கிவிட்டு
எட்டிநின்று பார்ப்பாரோ
ஏக்கம் கொண்டு துடிப்பாரோ
தொல்லை ஒன்று விட்டதென்று
தன்சுகமே காண்பாரோ...
பிள்ளை ஒன்று பெறாததனால்
தள்ளி வைத்த என்கணவன்
தான் அறிவானோ...
எத்தனை சூரியன்கள் எனைச்சுற்றி
எத்தனை மின்மினிகள் அவர்கண்ணில்
முள்குத்தும் ஓர் நினைவை தள்ளிவைப்போம்
நாளை நமதென்று
நமதடியை எடுத்துவைப்போம்

Saturday, December 13, 2008

புத்தண்டே வருக

அன்றொருநாள்
வெள்ளைப்பரங்கியர்
வந்திறங்கிய
வெற்றுவாயில்
வழியாக
இன்றிறங்கிய - வீணர்தம்
வெடிச்சத்தம் விண்ணைப்பிளக்க
கதறியழும் குழந்தை சத்தம்
பெற்றவர் கல்லறையில் புதைந்துவிட
பெட்டி பெட்டியாய்
வெடிமருந்து
பரிசாகக் கொண்டு
புறப்படவேண்டாம்

புத்தாண்டே...........

பூக் கொண்டு வா
மணம் வீசி
பிணவாசம் போக்கு...
நீர்க் கொண்டு வா
வறண்ட இதயத்தில்
ஈரம் கசிய...
தேன் கொண்டு வா
கசந்த உறவுகள்
இனிமை காண...
அமைதி அள்ளி வா
எம்மிதயத்தில் அது
நிலவியிருக்க.....
காதல் கொண்டு வா
கவலை மறக்க....
கண்ணியம் கொண்டு வா
திறமை வளர்க்க....
நேர்மை கொண்டு வா
நெஞ்சில் நிலைக்க...
உண்மை கொண்டு வா
ஊழல் மறைய....
தீரம் கொண்டு வா
தீவிரவாத தலையறுக்க....

அன்பை கொண்டு வா
புத்தாண்டே...
அனைவரும்
மகிழ்ந்திருக்க....
புன்னகை கொண்டுவா
புத்தாண்டே.....
பூக்கள் கொண்டு வா..........


Friday, November 21, 2008

கண்ணாடிகண்ணாடியில் தெரியும்

என் பிம்பம்

அது நானல்ல..

ஏமாற்றுகிறது கண்ணாடி

என்னை எங்கோ ஒளித்து

எதையோ காட்டுகிறது

என் வீட்டுக் கண்ணாடி...

சின்னச் சின்ன சிறகுகள் எனக்குண்டு..

அதைக் கொண்டு

வானம் தொட்டு வரும்

வழக்கம் எனக்குண்டு

இறக்கை கொண்டு இமயம் மீதும்

சிறிது

இளைப்பாறி வருவதுண்டு

சிக்கவில்லை அது என் சின்ன

கண்ணாடிக்குள்..

வண்ணம் எனக்குண்டு

இன்பம் இழைத்து ஆசையில் ஊறி

அன்பில் தோய்ந்து அழுகையில் நனைந்து

துன்பம் துடைத்த

வானவில் வண்ணம் எனக்குண்டு..

கறுப்பு வெள்ளையாய் காட்டுகிறது

கண்ணாடி...

காதல் எனக்குண்டு

கண்ணம் குழிந்து கண்ணில் வழியும்

காட்டவில்லை அதை

என் வீட்டு கண்ணாடி...

வடுக்களும் எனக்குண்டு

தீச்சொல் பட்டு வஞ்சம் எரிந்து

நெஞ்சம் துளைத்த

வடுக்களும் எனக்குண்டு

நல்ல வேளை

அதையும் காட்டாது

எதையோ காட்டி

நிற்கின்றன..

எல்லார் வீட்டுக் கண்ணாடிகளும்.....


Wednesday, October 15, 2008

அம்மா

எனது பிறந்த நாள்உனக்கானது..

வலி பொறுத்து

எனைமடி தாங்கி

மாதங்கள் வருடங்கள் ஓடிவிட்டன....

எத்தனையோ தூரங்கள்

நாங்கள் கடந்தலும்

எங்களின் முதலடியை

எடுத்து வைத்தவள் நீ

எங்களுக்கு முகவரி தந்தவளும் நீ...

உன் உயிர்குடித்தே

எங்களின்

வாழ்நாள் கணக்குதுவங்கியது..

உன்ஆசைகளை

கனவுகளை

கொண்டே

எங்கள் பயணத்திற்குபாதை வகுத்தாய்...

முட்களையும்

மலராக்கும்

வித்தை தெரிந்திருந்தாய்...

உன் காயங்களை

எங்களின் பாதையில்

எச்சரிக்கை பலகையாக்கினாய்...

உன்

உழைப்பை

விடா முயற்சியை

தன்னம்பிக்கையை

எங்கள் பாதையில்

வெளிச்சம் தரும் விளக்குகளாக்கினாய்...

எங்கள் சிறகுகள் விரிய

நீ வானம் ஆனாய்...

ஒருபுறம் வெப்பம் தாங்கி

மறுபுறம் நிழல் தந்து

நிற்கும்

விரூட்சம்...

ஏற்றிவிட்டு அமைதியாய்

நின்றிருக்கும் ஏணி...

வாசம் தந்து

வாடும் மலர்...

சுவாசம் தந்து

வீசும் காற்று....

இப்படி

எத்தனையோ

விஷயங்கள்

நினைவூட்டும்

உனக்கான என்கடமையை....

இனி

மாற வேண்டும் அம்மா..

நீஎன் மகளாக...

என் மடித்தூங்கி

உன்கவலை மற..

என் கைபிடித்து

காலடி

எடுத்துவை..

நீ கொடுத்த அமுதம்

என் கண்ணில் நீராய்...

நீ கற்றுத் தந்த தமிழ் கொண்டு

ஒரு கவிதை மலர்

உன் காலடியில்...

ஆசிர்வதி அம்மா..

இன்றெனது

பிறந்தநாள்

இனிமை கொள் அம்மா

என் பிறந்த நாள்

உனக்கானது

வலி பொறுத்து

எனை மடிதாங்கி

மாதங்கள் வருடங்கள் ஓடிவிட்டன.........

Thursday, July 03, 2008

மொட்டை மாடி புல்

எல்லையில்லா காட்டை யழித்தே இங்கு
கட்டிடங்கள் கட்டு கின்றார் அதன்மேல்
புல்லைவளர்த் தேபோற்று கின்றார் பாழ்பசிக்கது
பழம்தருமோ நிழல்தந் திடுமோ நிற்க
மணம்தருபூக் கள்மலர்ந் திடுமோ மண்ணைக்
காத்திடுமோ ஏழை ஒருவன் தாகம்
தீராதிருக்கை யிலேநீர் தருமோ நெஞ்சில்
ஈரமில்லா தொருவன் தினம்பத் துவாளி
நீர்பாய்ச்சி வளர்த்து விட்டப் புதுப்பணக்
காரன்வீட் டுமொட்டை மாடி வளர்புல்