Friday, January 30, 2009

"மெனோபாஸ்"

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா"

பாரதியார்.

உள்ளம் சோர்து போகும் நெஞ்சில்
உற்சாக மின்றி ஆகும்
கோபம் வரக் கூடும் கடுஞ்
சொல்லும் வீச லாகும்..

உடலின் உறுதி போகும் நாளும்
தேயும் எலும்பும் வாட்டும்
கூடும் எண்ணம் ஓடும் எதிலும்
நாட்ட மின்றி வாடும்..

குற்ற மவள்மேல் இல்லை இயற்கை
மாற்ற மிந்த தொல்லை
நாற்ப தொத்த வயதில் பெண்மை
நலன் கெடுவ துண்டு..

உண்மை நிலை புரிந்து நீயும்
ஒத்து ழைத்து வந்தால்
நீரில் பட்ட நெருப்பாய் இன்னல்
தானும் பட்டுப் போகும்..

கைப் பிடித்த கணவன் சற்றே
கால் பிடிக்க வேண்டும்
பெற்றப் பிள்ளைக் கூட கொஞ்சம்
பொறுமைக் காட்ட வேண்டும்..

காதல் சொன்ன கண்கள்
கவலை காட்டும் போது
கரும்புக் கதைகள் பேசி அவள்
கருத்தை நீயும் மாற்று..

ஓய்ந்து போன நெஞ்சில்
உற்சாகம் கொஞ்சம் ஊற்று
தாரம் அவள் துயரில்
தாயாக நீயும் மாறு..

தேனான சொல் ஊற்று
தீர்க்கும் அவள் தாகம்
பாடான இப் பாடு
பார்த்தால் சிறிது காலம்...

சத்தான பழமும் பாலும்
காயும் உணவில் கூட்டு
சீரகும் வாழ்வு அதனை
சிந்தை யில்நீ ஏற்று...

நேராக அவளும் நெஞ்சம்
தெளிவு பெறும் போது
தாயாக மாறி அவளே
தாங்கி டுவாள் உன்னை...

வயதான காலம் வாழ்வில்
வந்து விட்டப் போதும்
தோழி யாக நின்று
தோள் கொடுப்பாள் என்றும்...

கலக்காதே அம்மா!

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை..

வயிறு சுமக்காத
பாரத்தை
நெஞ்சு சுமக்க
'தாயாக' தவித்திருப்போர்
தவமிருக்க
தானாக வந்ததனால்
எனதருமை
தெரியாது போய்விட்டதோ
என் தாயே?

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை..

ஆணாகப் பிறந்திருந்தால்
அழித்திருக்க மாட்டாய் தான்
என்றாலும்
சேயாக எனையிங்கீன்ற நீ
பெண்தானே? ஆணல்லவே?

நாளை உன் மகனுக்கோர் இணை
பெண்தானே? ஆணல்லவே?

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை

தினம்
குடித்து குடித்து
உனை
அடித்து அடித்து
எனைத் தந்த
என் தந்தை
ஆணல்ல அம்மா
அறிந்து கொள்...

உனை பொருளாக்கி
உதைத்து
உணர்வழித்து
என் உயிரழிக்க முற்பட்ட
வஞ்சகன்
ஆணல்ல
அவனுக்கு மகளாக
எனக்கும் ஆசையில்லை

ஆனாலும்
கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை

எனையோர்
அரசு தொட்டிலில்
விட்டு விடு...
எனைபோல்
அக்னி குஞ்சுகள்
ஓர் நாள் நெருப்பாகும்
வெந்து வீழுமம்மா
வீணர் ஆணாதிக்கம்..
வீட்டில் பெண்ணை
அடிமைப் படுத்தும்
மூடர் பரம்பரை
மண்ணில் சாய
வேர் பொசுக்கி
வெற்றிக் கொள்வோமம்மா...

அதுவரை
கலக்காதே அம்மா
கள்ளிப்பலை

எனையோர்
குப்பைத்தொட்டியிலாவது
எறிந்து விடு

கலக்காதே
அம்
ஆ.........