(வைரமுத்து அவர்கள், திரைப்படத்துறையில் இருந்தபடி திரைப்படங்கள் குறித்து விமர்சனமாய் எழுதிய `தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’ என்ற கவிதையில் சினிமா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து,
இளைஞர்களின் கைகளிலேனும் இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா? சற்று பொறுத்திருப்போம். இல்லையெனில் மக்களைச் சுருள வைக்கும் திரைப்படச் சுருளை ஒரு தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்
என்று எழுதியிருந்ததை பார்த்ததும் எனக்கு இப்படி எழுத தோன்றியது..)
அழுக்குப் பிடித்த
வெள்ளித் திரையை
வெளுக்க
இளைஞர்களெல்லாம்
டிஜிட்டல் அறையில்
கூடினார்கள்…
புதிய பார்வை
புதிய குறிக்கோள்
இயல்பான
அற்புதமான நடிப்பு
ஆண் பெண்
பேதமில்லை
கூட்டாக அனைவரும் கூடி
சில
படைப்புகளை
டிஜிட்டலில்
தந்தார்கள்..
பார்த்தது
வெள்ளித்திரை...
எதிர்த்தது!!
முடியவில்லை…
எப்படி
சமாளிப்பது
வெள்ளித் திரை
மாற்றம் பெற்று
டிஜிட்டலில் இறங்கியது…
ஓடிடியில்
ஒளிவு மறைவின்றி
போட்டுக் காண்பித்தது
தணிக்கை குழு
இல்லை…
கண்காணிக்க
ஏதுமில்லை
ஒவ்வொறுவர்
தொலைபேசியிலும்
வக்கிரம்
வலைவிரித்தாடியது…
கோபம்,கொலை
காதல், காமம்
இரத்தம்
அனைத்தும்
அதிகமாக
மிக அதிகமாக
சற்று
தெளிந்தவர்
திசையறிந்து கொண்டார்
நல்லதும் கொட்டதும்
பிறித்தாய்ந்து கொண்டார்..
இளையவர் பலரோ
இதில் மாட்டிக் கொண்டனர்…
எப்பொழுதும்
ஏதோ ஒன்றை
தொலைபேசியில்
பார்த்துக் கொண்டே
குடும்பம்
அன்பு
பக்கத்தில் இருப்பவர்
புத்தகம் படிப்பது
இப்படி
அனைத்தும் மறந்து
அயல் நாட்டு
மோகத்தில்
உணவு
உடை பழக்கம்
அனைத்தும் மாற
தாய் மொழி மாற
தாயும் தந்தையும்
முதியவர் இல்லம் தேட
மாறிப் போனது
எல்லாம் மாறிப் போனது…
டிஜிட்டல் துறையில்
ஒருபடி ஏறிய
நிலையில்
பலப்படி
இறக்கமும்
கண்டது
இந்தியா…
இன்றும் சிலர்
“இதுவும் கடந்து போகும்”
என்பதில்
நம்பிக்கையோடு….
“பட்டுத் தெளியாமல் விட்டு விடாது”
என்பதால்
பழைய
பழக்கங்களை
டிஜிட்டலில் ஏற்றியபடி…