Friday, April 09, 2010

என் இனிய தமிழ் மொழியே!





என் இனிய மொழியே

என் இதயத்தின் ஒலியே


நீ

நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

உனக்கு

அதிகமான

கவனிப்புத் தேவைபடுகிறது


நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

எல்லோரும் உன்னைக் கடந்து

சென்றுவிடுகிறார்கள்


உன் சிறந்த சொற்களை

நீ

சுவைப்பதில்லை

வேற்று மொழி

மருந்திலேயே

வீக்கம் கொள்கிறாய்


அசைப் போடுவதே

உன்

அன்றாட வேலையாகிவிட்டது


முன் பிறந்தும்

நீ முடமாகிக் கிடக்கிறாய்

பின்னவள் ஹிந்தியோ

பெரியவளாகிப் போனாள்


நீ முடமாகிக் கிடக்கிறாய்

ஊனமுற்றவர்

ஓட்டப் பந்தயத்தில் மட்டும்

முதல் பரிசு

உனக்கு


ஊனம்

உன்னில் இல்லை

உன்னைச் சுமந்தவர்

நெஞ்சில்


கன்னித் தமிழே

கவிதைச் சோலையில்

கதையில்

காணும் நாடகத்தில்

உன்

புன்னகையே

உன் இதழ்களை

அலங்கரிக்கட்டும்


அந்நிய சாயப் பூச்சு

வேண்டாம்

சொந்தப் பூவையேச்

சூடிக்கொள்


வண்ணங்கள் கலக்கலாம்

எண்ணங்கள் கலக்கலாம்


உன் சுவடுகள்

கலைக்கப்படாமல்

காப்பாற்று...

Sunday, April 04, 2010

இறைவழிபாடு 4

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு
மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

இறைவழிபாடு 3

கண்ணா அருள்வாயா?
குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை கண்ணால்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!

பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?

இறைவழிபாடு 2

குறிலீற்று மா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்


பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!


நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!

இறைவழிபாடு -1

மா மா காய்
மா மா காய்


கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!!


மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்கா புகழைத் தாந்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்க
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!