Thursday, May 20, 2010

ஈகை

குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்



தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.

Wednesday, May 19, 2010

கோடை மழை

24 நாட்கள்
அக்னி நட்சத்திரம்
சூரியன்
சிந்திய
வியர்வைத் துளிகள்
கோடை மழையாய்
பூமியில்..

இரவு

சூரியச்
செம்பழம்
தின்று
கடல் துப்பிய
கொட்டை
நிலவு...
சிதறிய
துளிகள்
நட்சத்திரங்கள்..

அக்னி' பரீட்சை

அன்று..
அக்கினிப் பரீட்சையில்
வென்றது
சீதை..
தோற்றது
இராமன்
நியாயம்

இன்றோ!

அக்னி' பரிசோதனையில்
வென்றது
அறிவியல்..
தோற்றது
மனிதநேயம்
ஒற்றுமை



செய்தி: அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 2000கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் அக்னி 2 ஏவுகனை பரிசோதனை வெற்றி.

கூட்டம்

இரயில் நிலையத்தில்
மெத்தக் கூட்டம்
உள்ளே
நுழைய முடியவில்லை
எப்படி தேடுவது?
'பாச' கயிற்றோடு
நிலைய அதிகாரியின்
அறையை அடைந்தான்

கிடைத்து விட்டார்கள்
அவர்கள் இருவரும்

செய்தி: புதுதில்லி இரயில் நிலையத்தில் இரயில்கள் இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தாய் மகன் இருவர் பலி.