Friday, September 22, 2006

நிலாப்பயணம்




கிராமத்து காத்தினிலே


குளித்தெழுந்த முழுநிலா...


பாசும்புல்லின் துண்டெடுத்து


முகம் துடைத்த


வெண்ணிலா...


நீல வான ஆடைதன்னை

கட்டிக்கொண்ட

வான் நிலா...

பாய்ந்து வரும்

ஓடையிலே

அழகு

பார்த்துக்கொண்ட
பெண்நிலா...

ஓர் நாள்

கார் மேகக் கூந்தலிலே
மின்னல் பூவைச்சூடி

பூ வாச "செண்ட்" அடித்து

புறப்பட்டாள் புதுநங்கை...

பயணமோ வெகுதூரம்...


பஞ்சு போன்ற


புல் மெத்தை


வறண்டு போயி


பாழாச்சு...


பயிரிட்ட பாதி நிலம்


வீணாகி நாளாச்சு...


டீ.வி. பொட்டியொன்னு


வந்ததனால்


பாதி ஊரு


கெட்டாச்சு...



அதுவுமில்லை


இதுவுமில்லை


இரண்டும் கெட்டான்


நிலையாச்சு...


ஆளுக்கொரு

கொடியாச்சு


ஆயிரந்தான்


கட்சியாச்சு


கூடியிருந்து பேசுந்திண்ணை


கொலைக்களமாய்


மாறிப்போச்சு...




அத்தனையும் செஞ்சுப்புட்டு


யாரங்கே தூங்கறது!




பட்டணந்தான் போய்வந்தால்


புரிந்திடுமோ ஒருவேளை...




பூ வாச "செண்ட்" அடித்து


புறப்பட்டாள் புதுநங்கை...




எட்டி நடை போட்டு


ஏந்திழையாள் வந்துவிட்டாள்


அலையோசை தனைக்கேட்டு


அங்கேயே நின்றுவிட்டாள்...


குட்டி குட்டி

ஆறுகளும்


கூடுமிந்த கடலோரம்


முன்பு அவள்


கண்ட இன்பம்


நெஞ்சினிலே நினைந்திட்டாள்...


வெளிச்ச கரம் நீட்டி

வீதிவரை வந்துவிட்டாள்...


ஐயோ!


அவள் காண வந்த காட்சி என்ன!


கண்டுவிட்ட கோலமென்ன!




பரந்துநின்ற


மணல்வெளியோ


பாதையோர வீடாச்சு


பகுதிநேர


விடுதியாச்சு...


அலைவீசும் கடலோரம்

மனம் கூசும்


கக்கூசாச்சு...


கொடிகளோடு கூட்டங்களும்


கொள்ளைகளும் கோடியிங்கே


விண்ணைமுட்டும் கட்டிடங்கள்


வீதியில்


வெற்றுடம்பில் இரத்திணங்கள்...


கேளிக்கை கூத்துக்கு


ஹோட்டல்கள் ஒருபக்கம்


கூழுக்குமில்லாத


கூலிகள் தெருபக்கம்...


கட்டிப்போட்ட நாய்குட்டி


கட்டிலோரம் தூங்குறது..


தொட்டில் குழந்தையொன்னு


தெருவோரம் கிடக்கிறது...


மண் பதைக்கும் வித்தியாசம்


மருந்துக்கும் இல்லை


மனிதநேயம்...


தாகம் தீர்க்க


தண்ணியில்லை


காற்றுவாங்க


சோலையில்லை


வீதியோர கொசுவெல்லாம்


விருந்துண்ண ஓடிவர


பட்டணத்து பயங்கரம்


பார்த்துவிட்ட பாவையிவள்


'சிக்குன் குனியா' வருவதற்க்குள்


பறந்துவிட நினைக்கின்றாள்...


ஐயோ!




காலை மணி அடிச்சாச்சு


கரும்புகையே மேகமாச்சு


நீல ஆடை வெளுத்துப்போச்சு


வெள்ளை முகம் கருத்துபோச்சு


தீராத தழும்போடு





தலைதெரிக்க ஓடுகின்றாள்


பாதையெங்கும் வாகனம்


பார்த்து போகநேரமில்லை


ஆராத இரணத்தோடு


பாதியான தேய்நிலா





கால்வலிக்க ஓடிவந்து


கடலினிலே விழுந்துவிட்டாள்


திரும்பி வரும் எண்ணமில்லை


ஆனாலும் வருகின்றாள்


மாதம் ஒருமுறை


முழுநிலவாய்...





நேர்மை தவறாத மனத்தோடு





சோர்ந்திருக்கும் சிலருக்கு


சோதிமுகம் காட்டுகின்றாள்


'கலங்காதீர்' என்றே சொல்லி


காத்திருக்கிறாள்


அவளும்


காலம் மாற...