Thursday, November 25, 2010

வெண்தாழிசை

[1. இது மூன்றடிப் பாடல்

2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். ]

காற்றும் நீரும் காணும் யாவும்
தோற்றம் நீயே போற்றி நின்றேன்
ஏற்றம் தாராய் என்று.

என்றும் நின்றாள் ஏத்து கின்றேன்
குன்றில் கோவில் கொண்டாய்க் கந்தா
மண்ணில் அன்பே மாற்று.

மாறும் நெஞ்சில் மையல் உன்மேல்
சேரும் மாறென் சிந்தை மாற்று
காரென் றெம்மைக் காத்து.

விண்ணோர் வாழ்வை வேண்டின் மண்ணில்
பொன்னை ஈதல் போலே பின்னும்
கண்ணைத் தானம் செய்.

நல்லார் அல்லார் எல்லாம் சொல்லும்
சொல்லால் ஆகும் தீச்சொல் தீயாய்க்
கொல்லச் சேரும் தாழ்வு.

Wednesday, November 24, 2010

ஊழல்

கறுப்புப் பணத்தைக் கடிதே பெருக்கும்

இருக்கையை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி

அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை

உடுத்தி இருக்குமாம் ஊழல்.

வாழ்த்து

சமீபத்தில் இல்லச் சுமையை இனிதாய் ஏற்றுக் கொண்ட

வெண்பா வலை நண்பர் திரு வசந்த குமாருக்கு!

சொல்வளர் செல்வன் வசந்த குமாருடன்
சொல்லிற் சுவையென சுந்தரி ஹேமலதா
இல்லறந் தன்னில் இணைந்திட்டார் வாழ்த்திடுவோம்
நல்லறங் காப்பீர் நயந்து.


முனைவர். திரு குணசீலன் அவர்களுக்கு

சொல்வளங் கொண்டத் தோழர் குணசீலன்
நல்லிணை யாக நங்கை அருணா
இல்லறம் இனிக்க இணைந்தார்
பல்வளம் பெருக
நல்லுளம் கொண்டோர் வாழ்த்த
நல்லன யாவும் நாளும் நிறைகவே!