Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

Wednesday, October 16, 2019

வெண்பா

ஆளும் பொறுப்பு உம்கையிலென்றால் என் செய்வீர் என்பது கேள்வி...
என் பதில் வெண்பாவில்... 


ஆட்சி எனதாட்சி என்றானால் அந்நாளில்
வீட்டுக் கழிவெல்லாம் வீதியிலே வீசுவோரை
நீட்டுன் கரமென்று நீள்கொம்பால் நான்கடி
போட்டுப் புரியவைப்பேன் பார்


அமுதன் அவர்களின் அறிவுறுத்தல்

தடியடியால் தோன்றிவிடும் சச்சரவு; நாட்டில் 
அடிதடியால் முன்னேற்றம் ஆகா(து) - உடனடியாய்த்
திட்டம் சரியாகத் தீட்டிவிட்டு நாம்போடும் 
சட்டம்தான் நன்மை தரும்!       


 என் பதில்


திட்டங்கள் தந்தாலும் சட்டங்கள் போட்டாலும்
எட்டா மனத்தினில் எள்ளளவும் மாற்றமில்லை
கொட்டிக் கெடுத்திடுவார் குப்பையை நாற்சந்தில்
தட்டிச் சரிசெய்தா லென்? 

Tuesday, January 13, 2015

புத்தகச் சந்தைக்குப் போ



எத்தனையோ எண்ணங்கள் ஏடாகி ஓரிடத்தில்
தித்திக்கும் தேனாக சிந்தனைக்குச் சத்தாகும்,
புத்திக்கும் வித்தாகும் புத்துணர்வைப் பெற்றிடவே
புத்தகச் சந்தைக்குப் போ


---------------------------------------------------------------------------------------



சத்தான நூல்பலவும் சேர்ந்து கிடைக்குமிங்கே
முத்தான தாக முயன்று படித்தறிந்து
மொத்தமாக வாங்கிடலாம், சொத்தாகும் சிந்தனைக்கு
புத்தகச் சந்தைக்குப் போ

Wednesday, February 19, 2014

அச்சம் தவிர்

முயற்சி தடுக்கும், உணர்ச்சியோ டுந்தன்
சுயத்தை அழிக்கும், வருத்தி-அயலவர்
துச்சமென்றே தூற்றிடச் செய்யும், மனத்தினில்
அச்சம் தவிர்ப்பாய் அறிந்து.

ஆறுவது சினம்

நல்லன யாவும் நலிவுறவே வாய்மொழிச்
சொல்லில் கடுமை, கொடுந்தீயாய் நல்லறிவை
இல்லா தழிக்கும் இணையெதுவோ சேர்ந்தாரைக்
கொல்லும் சினம்போல் கொடிது


Sunday, May 09, 2010

சந்தேகிக்{கு} உண்டோ சுகம்

விந்தை மனத்தினில் வேண்டாத சந்தேகம்
சிந்தை செயலிழக்கச் செய்திடுமே - வந்துறுமே
நிந்தனையும், தன்மேலே நம்பிக்கை தானிழந்த
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்

திரு கபீரன்பனின் கட்டுரையும் காண்க.

Tuesday, February 23, 2010

உடல் நலம் பேணிட...

காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.

நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.

உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.

அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.

ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.

சேவற் கொடியோன் சிறப்பு.

காவல் அவனன்றி வேறில்லை என்பார்க்கு
பாவக் கரையழித்து காக்கும் கருணையே
சேவற் கொடியோன் சிறப்பு.

தொல்லைகள் தீர தொழுதிட்டால் போதுமென்றும்
இல்லை எனாதெவர்க்கும் ஈந்திடுவான் நல்லருளை
அல்லல் அகலும் விரைந்து.

எத்திக்கும் அன்பர் இணையடி தான்தொழுதே
சக்தி குமரன் திருப்புகழைச் சொல்லும்வாய்
தித்திக்கும் தேனாய் இனித்து.

வேலும் மயிலும் துணையென நம்பியே
நாளும் அவனடி நாம்தொழ நன்மையெலாம்
சேர்ந்தே சிறக்கும் வாழ்வு.

Thursday, February 04, 2010

நிறுத்தற் குறியீடு நன்றாய் மனதில்
நிறுத்தற் பொருட்டு நவின்றீர் - அருமை!
கருத்தில், பிழையில் எழுத்தில் பெரியோய்
விருந்தாம் விளக்கம் எமக்கு.
நிறுத்தக் குறிகளும் அதன் பயன்படுத்தமும் பற்றி மிக அழகாக திரு தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ளார். படித்து பயன் பெற வேண்டிய கட்டுரை.

Thursday, October 22, 2009

நன்றாகச் செய்க நயந்து.

எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனத்தை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - சத்தியம்
என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி
நன்றாகச் செய்க நயந்து.

எக்காரியம் செய்தாலும் அதில் நம் கருத்தை முழுமையாக செலுத்தி, விருப்பத்துடன் உண்மை மாறாமல் உழைத்தோமானால் அதனால் உண்மையான இன்பமும் பலனும் உண்டு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.]

என்றும் திருநாள் எனக்கு.


ஆடாத காலும் அமைதியுறும் தூக்கமும்
நாடா மனத்தினில் நன்னிறைவும் - சாடாமல்
என்னுடன் சுற்றமும் ஏற்றமுற சூழ்ந்திருந்தால்
என்றும் திருநாள் எனக்கு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.அவரது திருத்தலுக்குப் பின்]
விளக்கம்: [யாருக்குமே சரியா புரியலைங்கறதுனால...]
மக்கள் அனைவருக்கும் திருநாள் , பண்டிகை என்பன மிகவும் கோலாகலமானவை.ஆனால் முதுமையில் ஒருவருக்கு எது திருநாளாக அமையும். இந்த தீபாவளியில் முதியவர் பட்டாசு சத்தத்தில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பர் என எண்ணியதில் எழுதியது இப் பா.
ஓடியாடி திரியும் மக்கள் ஒரு கட்டத்தில் தளர்ந்து தமது எல்லைச் சுறுங்கி விடும் போது மனம் வலிக்கும். முதுமையில் கால்கள் தள்ளாடும், மனதில் பயம் வரும், இரவில் அமைதியான தூக்கம் குறையும், இன்றய காலகட்டத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினர் முதியோரை கவனித்துக்கொள்வது குறைந்துவிட்டது. முதுமையில் தனிமை மிகக் கொடுமை. இவ்வாறில்லாமல் சுற்றத்தார் சூழ்ந்திருக்க, நடைத் தள்ளாடாமல், அமைதியான தூக்கமும், கலக்கமில்லாத மனமும் அமைந்தாலே அந்நாள் அவர்களுக்கு திருநாளாக அமையும். இப் பா முதியவர் சொல்வதாய் அமைக்காப்பட்டுள்ளது.]

Monday, September 14, 2009

கண்ணோரம் கண்ணீர்க் கடல்

மடிக்கிடந்து கையெடுத்து மார்பணைத்த தன்மகனைப்
படிக்கவென்று பள்ளியிலே விட்டுவிட்டு வாசலிலே
கண்வைத்துக் காத்திருக்கும் கற்றறிந்த பெற்றவளின்
கண்ணோரம் கண்ணீர்க் கடல்.

Tuesday, September 01, 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே
வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே
மண்ணின் வசந்த வெடிப்பு.
[இயைபு தொடையில்]

[நம்முன் மெதுவாக தோன்றும் கருமை, கரியப் பட்டு விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு.

Friday, August 28, 2009

கடி என்ற சொல்லுக்கான வெண்பா

கடிந்தேகு வெள்ளம் கரையைக் கடக்கும்
கடிந்துறு செல்வம் கடுந்தீயாய்க் கொல்லும்
கடிதரு துன்பம் கடிந்துனைச் சேரும்
கடிந்தே மகிழ்வாய்க் கொடுத்து.

விரைவாகவும் அதிகமாகவும் பாயும் வெள்ளம் கரையைக்கடந்து அழிவை ஏற்படுத்தும், அதுபோல் அதிகமான தீயும் அழிவை ஏற்படுத்தும். அதுபோல் மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வமும் அழிவை ஏற்படுத்தும்.மேலும் அப்பொருளை பாதுகாக்கும் அச்சமும் அது தரும் துன்பமும் விரைந்து நம்மைச் சேரும். பிறர்க்கு அச் செல்வத்தை கொடுத்து உதவுவதால் நம் அச்சம் தீர்ந்து மகிழலாம்.
கடி என்னும் சொல் விரைவு,மிகுதி,அச்சம்,நீக்கல் என பல பொருள் தரும்.
கடிந்தேகு வெள்ளம்- விரைந்து பாயும் அதிகமான வெள்ளம்
கடிந்துறு செல்வம் - மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வம்.
கடிதரு துன்பம் - அச்சம் தரும் துன்பம்
கடிந்தே மகிழ்வாய் - நீக்கியே மகிழ்வாய்.

Wednesday, August 26, 2009

படத்திற்கான பாடல்.வெக்கம் இது வெக்கம்

வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும்
மக்கள் ஒருபக்கம், வற்றியுடல் சக்கையாய்
கண்ணில் தெரியும் குழந்தை களொருபக்கம்;
விண்தொடும் வீடு வசதியாய் வாகனம்
மண்ணின் மறுபக்கம் வண்ணமிகு வாழ்க்கையதில்
சன்னல் கதவுக்கும் சீலை.

[புகைப்படம் திரு ஞானசேகரனின் 'அம்மா அப்பா' விலிருந்து]

Tuesday, August 25, 2009

படத்திற்கான பாட்டு


சகோதரா சொல்!ஏன் வறுமை விரட்ட
அகோர பசியால்நீ ஆவிபுசித் தாயோ?
நிலமோ நடுங்கியேக்கொல் லுந்தயங் காமல்
பலருயிர் போக்கினையே ஏன்?

மதமா மயக்கிய துன்னை? களிறே
மதமா பிடித்த துனை;நல் இளந்தளிருன்
பிஞ்சு மனதைக் கெடுத்து உனையேக்கொல்
நஞ்சாய் நசுக்கிய தார்?

வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
வாழ்வழிக்க வந்தாயே! வீழ்ந்தோரின் வாழ்வினுக்கு
தக்கபதில் சொல்லிடவே சண்டாளா! சாவுனக்கு
இக்கண மேவரட்டும் சா.

சற்றே மாற்றியப் பின்.

வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
வாழ்வழிக்க வந்தாய் வெறிச்செயலால் வீழ்ந்தோரின்
வாழ்நாள் விலையாயுன் வாழ்விழந்து நின்றுநிலைத்
தாழ்ந்தாய் தகாதனச் செய்து.



Sunday, August 23, 2009

அழகு,பணம், காதல், கடவுள்.

திரு ஞான சேகரன் அவர்கள் இத்தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்ததன் மூலம் என் சிந்தனைக்கு சற்றே தீனி போட்டிருக்கிறார். அழகு,பணம், காதல், கடவுள் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார். அவரது பதிவில் தண்ணீர், பசிக்கொடுமை பற்றியெல்லாம் நிறைய அறிந்து எழுதியிருப்பார். அதன் தாக்கத்தால் அவர் எழுதிய சில விடயங்கள் பற்றி பா'எழுத நினைத்ததுண்டு. இப்படி பல விதங்களில் தூண்டுதலாய் அமைந்ததால் அவருக்கு நன்றியுடன்.

பணம்:
அளவாய் இருந்தால் அமுதாய் இனிக்கும்
விளக்கின் ஒளியாய் வெளிச்சம் கொடுக்கும்
பணமும் சினம்போல் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் கனன்று.

[தீயானது அளவோடு அகலில் இருந்தால் வெளிச்சம் கொடுக்கும்.அதுவே அளவுக்கு மீறினால் நெருப்பாய்க் கூரையை எரிக்கும், அதுபோல் பணமும் தேவைக்கு தகுந்தவாறு அளவோடு இருக்க, உதவியாய் இருக்கும், நம் உயிரைக்காக்கும் உணவு போல் நம்மைக்காக்கும். அதுவே மிகுந்தால் நம் சிந்தையை அழித்துவிடும். சிந்தை இழந்தவன் செத்தவன். எனவே நம்மை கொல்லும் பணம். சினமும் அதுபோல் அளவோடு இருக்க வேண்டும்.]

இல்லா திருந்தாலோ வாழ்ககையே இல்லையே
எல்லாம் அதுவேதான் என்றாலுந் தொல்லை
பணமோ பெருகிடும் வெள்ளம் அலையா
மனமோ தடுக்கும் அணை.

பணம் இல்லாதிருந்தால் வாழ்கையில்லை. பணம் என்னும் கருவி யில்லை என்றால் பல காரியங்கள் செய்ய இயலாது. அனால் பணம் செய்வதுதான் முதன்மை என்று கொண்டால், நாம் வாழ்வை மறந்துவிடுவோம். நம் வாழ்வை வளமாக்க பணம் சேர்க்கப் போய் வாழ்வையே இழத்தல் சரியோ?[ BPOவில் வேலை செய்யும் எவ்வளவோ பேர் தனது பெயர்,உடை,உணவு முறை, உறக்கம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு பணம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். வாழ்வை அறிவதேயில்லை. ] ஆற்றில் வெள்ளம் அளவோருந்தால் பாசனத்திற்கும், மற்றத்தேவைகளுக்கும் பயன் படும். அதுவே பெருகினால் ஊரே அழியலாம். அதை தடுக்க அணை கட்டுகிறோம். அணை நீரை சேமிக்கவும் இல்லாத போது உபயோகிகவும், மிகுந்தால் சீராய் திறந்து பயன்படுத்தவும் உதவும். அதுபோல் போதும் என்ற மனமே நமக்கு பணத்தை சேமிக்கவும்,தேவைக்கதிகமானால் பிறருக்கு கொடுத்து மகிழவும் செய்யும்.

காதல்:
//காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..//
எவ்வளவு அழகான வரிகள்.
உண்மைதான் காதல் உணரப்படவேண்டியது. மனிதராய் இருப்பவர் யாரும் எப்போதும் உணரக்கூடியது.
காதல் மென்மையானது. மெல்லச் சொல்லுங்கள் இறகைத்தொடுவதுப் போல் மெல்ல உச்சரியுங்கள். அழுந்தச் சொன்னால் உடைந்துப் போய்விடும்.
காதல் என்பது அன்பு என்ற அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட இறகாலான, பூவிதழ் பரப்பப்பட்ட மணமிக்க வீடு. அதில் வாழ்வது என்பது மிதப்பது ஆகும்.
காதல்
அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சிப்
பறக்கச் செய்யும்..
தாழ்ந்த விழி
தரைநோக்க
தனித்தியங்க்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்..

பூவிதழ்
புன்னகை வீச
புகம்பம் வெடிக்கும்
இதயத்தில்

இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்

மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்
கட்டில் தாண்டியும்
கரம் சேரும்..

காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்.

கடவுள்:
கடவுளும் காதலைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..

ஆமாம். என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பதும் ஓர் உணர்வுதான். ஒவ்வொருவரும் தனித்தனியே அதை உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்ப வைக்கவே.மனம் போகும் வழியிலேயேச்சென்று அதைக்கட்டுப்படுத்த உருவ வழிபாடு உதவுகிறது. எதைச் செய்வதால் அன்பு, அமைதி,உண்மையான நிம்மதி கிடைக்கிறதோ அவையெல்லாம் வழிபாடு. எவையெல்லாம் அதற்குத்துணை ஆகிறதோ அவையெல்லாம் இறைவன். தாய்மை கொடுக்கும் உணர்வுதான் கடவுள். அன்பு என்னும் அருள் தான் கடவுள். உண்மை நேர்மை தூய்மையேக் கடவுள். உண்மையாய் நேர்மையாய் தூய்மையாயிருந்தால் நீயும் கடவுள்.
நாத்திகம் ஆத்திகத்தின் முடிவு.ஆத்திகம் நாத்திகத்தின் முடிவு. அன்பை போதித்ததால் வள்ளளாரும் கடவுள். பலருக்கு அன்பை நல் வழியைக்காட்டியதால் பெரியாரும் கடவுளே.

அழகு:
இந்த உண்மையெல்லாம் உணர்ந்தால் அதுதான் அழகு. உண்மைதான் அழகு. கண்ணில் தெரிவதெல்லாம் உண்மையா? இல்லை. கானல் நீர் கண்ணில் தெரியும் ஆனால் இல்லையல்லவா அதுபோல் தான் இவையும். அழகாக தெரிவதெல்லாம் அழகில்லை. உள்ளத்தில் அழகாக உணரப்படுவதே அழகு.

தொடர்ந்து எழுத நான் அழைப்பது இனிய நண்பர் திரு. சொல்லரசனை. ஏசு என்னச் சொல்கிறார் என்பதை அவர்மூலம் நாமறியலாமே.

அடுத்ததாக திரு. திகழ்மிளிர்.
இந்த நான்கிற்கும் நல்ல பா' எழுதுங்களேன்.

அன்புடன் உமா


கடவுள்

காரிருள் வண்ணணாம் கண்ணணை; வாழ்வினில்
காரிருள் போக்கியருள் கந்தனைக்; காரியத்தில்
வெற்றிக் கனிந்தருள்செய் வேழ முகத்தோனைப்
பற்றியே பாடுமென் நெஞ்சு.

[ என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பது ஒர் உணர்வு. அன்பு, நேர்மை,காதல் போல் கடவுளும் ஒர் உணர்வு.அதை காட்ட இயலாது. தனித்தனியாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்பவைக்கவே. மனம் விசித்திரமானது. அறிவியல் உண்மைகளை சுலபமாக நம்பாதமனம் சில விடயங்களை சிறிதும் அடிப்படையில்லாமல் நம்பும். மனதின் போக்கிலேயேச்சென்று மனதை கட்டுபடுத்தும் செயலுக்கு உருவவழிபாடு அவசியமாகிறது. மனதில் அன்பையூட்டும் கண்ணணும், கந்தனும், கடிகணபதியும் அனைவரும் ஒருவரே.கண்ணனாய் நினைக்கும் போது அன்பு மேலோங்குகிறது. கந்தனாய் வணங்கையில் நேர்மை நெஞ்சில் நிலைக்கிறது, கணபதியைத் தொழுதால் எண்ணியக் காரியம் முடிக்கும் திரன்வளர்கிறது.]

Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன்
காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

காகிதக்கப்பல் கடலைக் கடக்க இயலாது, அதுபோல் இவ் வாழ்க்கை எனும் கடலைக் கடக்கத் தெரியாது தத்தளிக்கிறேன். கந்தனே எனைக்காப்பாயாக!
கருவிழிக்கு வரும் தீங்கை கருவிழி தன்னால் தடுக்க இயலாது. விழிக்குக்துணை இமையே. அதுபோல் எனக்குத் துணை நீயே,எனக்குறும் பகையை கந்தனே உன்னால் மட்டுமே அழிக்க இயலும். என்னால் ஆவதிவ்வுலகில் எதுவுமில்லை. என்னை நல்வழி படுத்தி எனைக் காத்தருள்வாய் குகனே.

திரு.தமிழநம்பி அவர்கள் திருத்தியதன் பின்.
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமை
சாத்திப் பரிவாய்ச் சலியாது ஓம்புதல்போல்
காட்டுன் கனிவருளை! கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

சினம்

விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே
இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை
சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் மிகுந்து.

[தீயானது விளக்கிலிருக்கும் போது நிதானமாய் எரிந்து வெளிச்சம் கொடுக்கும்,அதுவே சற்றே பெரிதானால் குளிரைத்தடுக்க, உணவு சமைக்க பயன் படும். ஆனால் மிகுதியான நெருப்பாய் எரியும் போது கூரையையே கொளுத்தி விடும். அது போல் சினம் தேவையான இடத்தில் அளவோடு இருந்தால் நன்மை தரும், அதுவே மிகுதியானால் நம் சிந்திக்கும் திறனை அழித்து நம்மையே கொன்றுவிடும்.]

Monday, August 17, 2009

அன்பு

என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால்

அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு

என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு

என்றாலும் ஏற்றிடுவேன் யான்.