Friday, June 29, 2007

வெயில்

குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம்
பெரியவர்களின் பொறாமை
அம்மாக்களின் சுயநலம்
அப்பாக்களின் கஞ்சத்தனம்
சான்றோரின் பொய்
தொழிலாளியின் சோம்பல்
பணக்காரனின் நீச்சத்தனம்
ஏழைகளின் சுயவிரக்கம்
ஆண்களின் அதிகாரம்
பெண்களின் புலம்பல்
பிச்சைக்காரர்களின் நச்சரிப்பு
பொதுக்குழாயில் சச்சரவு
இவைப்போன்று எரிச்சலூட்டக்கூடியது
மே மாத கத்தரி வெயில்

கண்ணங்குழிந்த குழந்தை முகம்
பெரியவர்களின் அரவணைப்பு
அம்மாவின் மடி
அப்பாவின் கைப்பிடி
ஆண்களின் நேசம்
பெண்களின் புன்னகை
இப்படி இதம் தரக்கூடியது
தெருவோர ஆலமர நிழல்....

பாட்டிகள் மாறிவிட்டார்கள்

அந்தக் காலம்
அங்கலாய்க்கிறாள் பாட்டி
எதிரில் நின்றிருப்போமா
எதிர்த்து பேசியிருப்போமா?
சொன்னதை செய்து
கொடுத்ததை சாப்பிட்டோம்....

ஆம்
அது அந்தக் காலம்
நடுங்கும் விரல்களால்
அழுந்த எண்ணெய்த்தடவி
பின்னிவிடும் வேளையில்
பலப்பல கதைகள் சொல்லி
சுரம் காண்ட நேரத்தில்
மிளகு ரசம் சுட்ட அப்பளம்
பண்டிகை காலத்தில்
சீடை கைமுருக்கு
அதிரசம் போளி
அத்தனையும் செய்து கொடுத்து
சட்டி சோற்றையும்
கட்டித் தயிர்விட்டு பிசைந்து
கைகளில் குழித்து விட்டு
வத்தல் குழம்புபோடு
வகையாய் உண்ணவைத்து
வெண்டைக்காய் கத்தரிக்காய்
பாவக்காய் ஆனாலும்
பக்குவமாய் சமையல் செய்து
பாசமாக பரிமாறி

விளையாட்டாய் வேலைவாங்கி
வேடிக்கையாய் சொல்லிக்கொடுத்தது
எல்லாம் அந்தக்காலம்

'லேஸ்' சிப்ஸ் வாங்கி தந்து
குழந்தைகளின் வாயடைத்து
'பந்தம்' 'பாசம்''நிம்மதி'
பார்க்கும் பாட்டிகள்
சொன்னால்
எந்த வேலையும் செய்வதில்லை
இந்தக்காலக் குழந்தைகள்.....