Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன்
காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

காகிதக்கப்பல் கடலைக் கடக்க இயலாது, அதுபோல் இவ் வாழ்க்கை எனும் கடலைக் கடக்கத் தெரியாது தத்தளிக்கிறேன். கந்தனே எனைக்காப்பாயாக!
கருவிழிக்கு வரும் தீங்கை கருவிழி தன்னால் தடுக்க இயலாது. விழிக்குக்துணை இமையே. அதுபோல் எனக்குத் துணை நீயே,எனக்குறும் பகையை கந்தனே உன்னால் மட்டுமே அழிக்க இயலும். என்னால் ஆவதிவ்வுலகில் எதுவுமில்லை. என்னை நல்வழி படுத்தி எனைக் காத்தருள்வாய் குகனே.

திரு.தமிழநம்பி அவர்கள் திருத்தியதன் பின்.
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமை
சாத்திப் பரிவாய்ச் சலியாது ஓம்புதல்போல்
காட்டுன் கனிவருளை! கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

சினம்

விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே
இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை
சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் மிகுந்து.

[தீயானது விளக்கிலிருக்கும் போது நிதானமாய் எரிந்து வெளிச்சம் கொடுக்கும்,அதுவே சற்றே பெரிதானால் குளிரைத்தடுக்க, உணவு சமைக்க பயன் படும். ஆனால் மிகுதியான நெருப்பாய் எரியும் போது கூரையையே கொளுத்தி விடும். அது போல் சினம் தேவையான இடத்தில் அளவோடு இருந்தால் நன்மை தரும், அதுவே மிகுதியானால் நம் சிந்திக்கும் திறனை அழித்து நம்மையே கொன்றுவிடும்.]

Tuesday, August 18, 2009

மருந்து வாங்கப் போனேன்.

மருத்துவரைப் பார்த்திடவே
.........மனைவியோடு சென்றிருந்தேன்..
அருந்தவமே நான்புரிந்து
.........அங்குள்ளே சென்றேனே..
ஏறிட்டு முகம்பார்த்து
..........எழுதியதை கொடுத்துவிட்டார்..
ஏதென்று பார்க்குமுன்னே
..........இருநூறு என்றிட்டார்...
எடுத்ததையும் தந்துவிட்டு
...........எழுந்துவந்து விட்டேனே..
மருந்துசீட்டு தன்னோடு
...........மருந்தகந்தான் சென்றேனே...

சீட்டு'பார்த்து சிரித்துவிட்டு
..........எட்டுநூறு ஆடுமென்றான்..
கட்டுபடி ஆகாதே
.........கண்டபடி செலவுசெய்ய!
சின்னதொரு ஜலதோசம்
..........சீக்கிரமாய் மருந்துகொடு..
பட்டென்று என்மனைவி
...........பாய்ந்தங்கே கேட்டிடவே..
சட்டென்று சிலமருந்து
..........எடுத்தவனும் நீட்டிவிட்டான்..
சில்லறையாய் மூனுரூபாய்
............தந்தவளும் வந்துவிட்டாள்...

சோறுதண்ணி இல்லாம
.........சோர்ந்திருப்பாள் என்றெண்ணி
மாலைவந்து பார்க்கையிலே
..........மலைத்துநின்றேன் நானங்கே..
சோர்ந்தமுகம் ஏதுமில்லை
..........சோதிமுகம் காட்டிநின்றாள்..
முல்லைதனைச் சூடியவள்
...........மல்லிகையாய் சிரித்திருந்தாள்
எப்படியோ போகட்டும்
...........இருநூறு வீணாச்சே
இப்படீன்னு தெரிஞ்சிருந்தா
...........அய்யய்யோ வீணாச்சே!!!

Monday, August 17, 2009

அன்பு

என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால்

அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு

என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு

என்றாலும் ஏற்றிடுவேன் யான்.

மழை

சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல்
பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே
ஆறெல்லா நீரோட மாமழையாய் பெய்திடய்யா
ஊரெல்லாம் காத்திருக்கே வா.

வாவென்று நானழைத்த மாமழையும் வந்திங்கே
சோவென்று கொட்டுதய்யா பேய்மழையாய் - போவென்று
நான்சொல்ல போயிடுமோ? நாளெல்லாம் பெய்திங்கே
ஏன்கெடுதல் செய்கிறதோ எண்ணு.
[திரு தமிழநம்பி அவர்களின் திருத்தத்துடன்]


மன்றல் - சொல்லுக்கான வெண்பா.

மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
மன்றல் மகிழ நினைந்து.

மன்றல் கமழும் - மணம் வீசு்ம் மலர்மாலை அணிந்து
மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம் வீச
மடக்கொடி வந்துற்றாள் மன்றல் - கொடியைப் போன்ற இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்தாள்.
மன்றல் மகிழ நினைந்து - அவளைக் கூடி மகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.
மன்றல் - மணம், நெடுந்தெரு,திருமணக்கூடம், புணர்ச்சி எனப் பல பொருள் தரும்.

படத்திற்கான வெண்பா.


மானம் இழந்தெமது மண்ணை மறந்திங்கு
வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும்
மரமும் நிழலை மறந்து.
[ ஈழத்தமிழரின்னல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அவர் மானம் காக்கவும் உயிரைக்காக்கவும் எவரும் இல்லை. இயற்கையும் துணைவரவில்லை. மரம் கூட தன் இலைகளை உதிர்த்து நிழலின்றி காய்க்கிறது.]