Saturday, September 18, 2010

மண்ணிலே மழையென

பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய்
என்னெதிர் வந்தனள் நீண்ட
கண்ணிலே காதலைக் கண்டேன்
என்னுயிர்த் தன்னையே தந்தேன்!

கண்வழி உயிரிடம் மாற
அன்பினால் மனங்கலந் திட்ட
பின்னரிவ் வெக்கமேன் பெண்ணே
மண்ணிலே மழையெனச் சேராய்!

விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம். 

மண்ணிலே மார்கழி நாளே!

கண்ணனைப் பாடிடுங் கூட்டம்
கன்னியர் வரைந்திடுங் கோலம்
தண்ணெனக் குளிர்ந்திடும் காலை
மண்ணிலே மார்கழி நாளே!

விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

கோதையின் திருப்பாவை அமுதம்.

பண்ணிலே பக்தியைக் கூட்டி
கண்ணனைப் போற்றியே கோதை
அன்புடன் சாற்றிய பாவை
பொன்னிலே பதித்தநற் முத்தே!

விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.