Friday, July 10, 2009

கடவுளைக் கொல்லாதீர்

தீயின் வெம்மை -கடவுள்;
நீரின் நீர்மை -கடவுள்;
பெண்ணில் தாய்மை -கடவுள்;
கண்ணில் பார்வை -கடவுள்;
மண்ணின் உயிர்ப்பே -கடவுள்;
விண்ணின் விரிப்பே -கடவுள்;
நெஞ்சில் நேர்மை -கடவுள்;
நினைவில் கருணை -கடவுள்;
எண்ணம் கடவுள்;
எழுத்தும் கடவுள்;
எண்ணிப் பார்த்தால்
நீயும் கடவுள்,
நானும் கடவுள்;
ஆதலால் உலகத்தோரே!
தீயில் நன்மைக் காண்பீர்
நீரின் தன்மைக் கொள்வீர்
நெஞ்சில் தாய்மைக் கொண்டே
மண்ணில் உயிர்கள் காப்பீர்
தன்னில் தெய்வம் கண்டால்
மண்ணில் மனிதம் வாழும்.

Wednesday, July 08, 2009

எழுத்துப் பிழைநீக் கியன்று!

மண்முத லாய்ப்பிறந்து குன்றாப் புகழினோ(டு)
எண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்து,களை
நீக்க இலக்கணம் கண்டே இலக்கியமும்
பெற்றதாம் சீரிளமைச் செந்தமிழ்த்தன் பண்டைச்
சிறப்போடு கண்ணியு கம்தாண்டி யென்றும்
தழைக்கத் தமிழா! தமிழ்பேசு; முற்றாய்
எழுத்துப் பிழைநீக் கியன்று!

திரு அகரம் அமுதாவின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பதிவில் எழுதியது. திரு. அமுதாவின் சில திருத்தங்களுடன் இங்கே.