Saturday, November 18, 2006

கலைந்த கனவு

அழகான மலை
ஆழமான பள்ளத்தாக்கு
அற்புதமான மாலை நேரம்
பசுமையான புல்வெளி
பக்கத்தில்
நீ மட்டும்
ப்பூ....
கட்டிலில் கொசு...

துணுக்குக் கவிதைகள்


அவ்வப்போது தோன்றியப்போது எழுதிய குட்டிக்குட்டிக்கவிதைகள்

"குழந்தை" பருவம்

கரிய வண்டின் வண்ணமோ
கண்ணில் வந்து நின்றதோ...
கோவைப்பழம் நாணுமோ
கொஞ்சும் வாய்ச் சிவப்பிலே
பட்டு மேனி மென்மையில்
பூவைக்கூட மிஞ்சுமோ...
பிஞ்சுக் கால்கள் நடக்கவே
பூமி வரம் பெற்றதோ

சிட்டுக் குருவிக் கூட்டமோ
சின்னப் பூக்கள் பேசுமோ
கோவை யிதழ் ஒலியிலே
குயிலின் ஓசை கேட்குமோ
மழலை கூட்டம் நடக்கையில்
மயிலும் பாடம் கற்குமோ
கொஞ்சி நடம் ஆடுமோ
கூடத் தாளம் போடுமோ...

பள்ளிப் பருவம்

சின்னச் சின்னக் கைகளில்
சிறுமைத் தனம் இல்லையே
வண்ண வண்ணக் கண்களில்
வன்மை என்றும் இல்லையே
பஞ்சுப் போன்ற நெஞ்சிலே
பகைமை தெரிவ தில்லையே
பள்ளிக் கூட நாட்களில்
பார்க்கும் யாவும் நன்மையே...

தாய் வீடு


முகம் துடைத்து பொட்டிட்டு
'பொன்னம்மாள்' வந்து விட்டால்
பூ வாங்கித் தலைச் சூடி
எனக்காக சிறிது நேரம்

சூடாறிப் போனதென்றாலும்
சுவைத்து சாப்பிட
எனக்காக சிறிது நேரம்

வேலை முடிந்து வீடு திரும்புகையில்
அயர்ந்து தூங்க அரைமணி நேரம்
எனக்கே எனக்காக - ஆம்
இரயில் பயணம் எனக்கு
தாய் வீடுதான்.

சென்னை sub urban இரயிலில் வேலைக்காக பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஆமோதிக்கும் விஷயமிது.

பட்டணத்தில் மழை


சென்னையில் தண்ணீர் கஷ்டம் தெரியுமா உங்களுக்கு?பத்து வருடாமாய் போதியமழையின்மை, இரண்டு வருடமாய் அதிகபடியான மாமழை,ஆனாலும் சென்னை, சென்னைதான்...

காட்டுப் பக்கம் தண்ணீர் இல்லை
நாட்டுப் பக்கம் வந்த மயில் - தன்
தோகைப் பழக்கம் மறவா திருக்க
விரித்து ஆடிப் பழகு கையில்
பார்த்து விட்ட மழை மேகம்
பட்டணத்து மக்களிடம் பகைமை மறக்க
மண்ணில் உதித்ததோர் உயிர்த்துளி...



பச்சை மஞ்சள் சிவப்பு
வரிசையாய்...
காத்திருக்கிறது
தண்ணீர் லாரி....

உன்னில் நான்



இரு விழிப்பார்த்து
இதய வாசல்
திறந்து வைத்தேன்
இறுக்கமான என் இதயத்தின்
நுணுக்கமான ஓர் இடத்தை
நீ தொட்டுவிட்டாய்
குடிப்புகுந்த வீட்டை
கொள்ளைக் கொண்டே போனாய்
தேடி அலைந்ததில்
கிடைத்தது
என்னில் உன் இதயம்...

Friday, November 17, 2006

சுனாமி கவிதைகள்


ஜெயித்த பூதகி

கடலே !
நீ பாதகி!
ஜெயித்த பூதகி!

ஆயிரமாயிரம் மீனவர்க்கு
அமுதூட்டுவதாய் அணைத்து
அழித்தப் பாதகி...
ஜெயித்த பூதகி...


நிலவே
நீ பொய்
உன் ஒளி பொய்
கடலோடு கலந்த
உன் மோகனம் பொய்
உன்னில் லயித்த எங்கள்
இன்பம் பொய்

உண்மை....
நேற்றய கனவு
இன்றில்லா
வெறுமை...
நேற்றய இன்பம்
இன்றில்லா
துன்பம்...

நன்மை...
புதைந்து போன
சேற்றிலே
புதிதாய் முளைத்த
மனிதநேயச் செடி...

நம்பிக்கை மலர்கள்
பூக்க
நேற்றையச்சோகம்
நாளைய
வரலாறாகும்...