Friday, February 18, 2022

முடிவு உன்கையில்

முடியாது என்பது
ஒரு கெட்ட வார்த்தை...
 
பொய்யை, 
பழிச்சொல்லைக் காட்டிலும்
பெரும் கேடு 
விளைவிக்கக்கூடியது...
 
உறுதியை 
உற்சாகத்தை
உடைக்கக்கூடியது...
 
முடியாது 
உறுதியற்ற மனத்தின் வெளிப்பாடு...
 
முடியாது என்பது 
முயற்சியின்மையின் மகன்
செயலின்மையின் சகோதரன்
சோம்பேறித் தனத்தின் தலைவன்
 
முடியாது
நம்பிக்கையை
கனவுகளை 
கலைக்கக்கூடியது
குறிக்கோளை 
குலைக்கக்கூடியது
 
முடியாது என்ற வார்த்தை
வெட்கக் கேடு,
சொல்லவும் நா கூச வேண்டியது

முடியாது 
உன்னில் புகுந்தால்
உன்னை உடைக்கும்
 
முடியாது என்பதை
முழுமனத்துடன்
வெறுத்துத் தள்ளிவிடு
விலக்கி எழு.
 
முடியாது
தைரியத்தின்
தன்னம்பிக்கையின்
உழைப்பின் எதிரி
 
உனது 
தைரியத்தின் கூரிய வாளால்
உழைப்பின் உறுதியால்
தன்னம்பிக்கைத் தனலால்
உடைத்து எரி
 
நம்பு!!
 
முடியாததை
முடித்து வைப்பது 
முடியும் என்ற முடிவு மட்டுமே!!

உன்னால் முடியும் நம்பு!!!

Edgar Albert Guest ன் Can't என்ற கவிதையின் தழுவல். எனது முயற்சி..