Saturday, June 28, 2014

கலி மண்டிலம்

கருநா டகத்தே தலைகா விரியாய்
திரிவே ணியிலே திகழ்கா விரியே
வருமே யகண்டே தமிழ்நா டதிலே
பெருந்'தை' விளைந்தே பெருக்கம் தருமே!

1.நாற்சீரடிகள் கொண்ட நான்கடிப் பாடல்.
2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
3.சீரமைப்பு – மா + புளிமா + புளிமா + புளிமா
4.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு.
5. ஒவ்வொரு சீரும் இறுதி அசை நெடிலாதல் வேண்டும். அல்லது      குறிலொற்றெடுத்தும் வரலாம்.

கலிமண்டிலம்

கதவினை அடைத்துநான் கடைவரை நடக்க
அதற்குளே அறையினுள் அலைந்தன பொருட்கள்
இதையதும் அதையிதும் இழுத்தன திறந்த
கதவினால் சிரிப்பலை கரைந்ததே உடனே!

[toy story மாதிரி நாமில்லா நேரம் நம் வீட்டிலுள்ள பொருட்கள் உணர்வுற்றால்? முகுந்த் நாகராஜன் புதுக்கவிதையில் இது போல் எழுதியிருப்பார். நானும் இப்படி சிந்தித்ததுண்டு என்பதால் மரபுப் பாவில்.]

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகள் அமைந்த பாடல்.
2. சீர்கள் முறையே = கருவிளம் + கருவிளம் + கருவிளம் + புளிமா
3. ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை
4. கருவிளத்திற்குப் பதில் கூவிளமும் அருகி வருவதுண்டு. புளிமாவுக்குப் பதில் தேமாவும் அருகி வருவதுண்டும்.

கலிமண்டிலம்

பலப்பல நூல்கள் படித்திடுத் தேடி
உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி
நலம்பல பெறவே நடந்திடு நாளும்
உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே!

1. ஓரெதுகை பெற்ற நான்கடிகளைக் கொண்ட பாடல்.
2. சீறமைப்பு முறையே = விளம் + மா + விளம் + மா – என்றமைதல் வேண்டும்.
3. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் அருகி வருவதும் உண்டு.
4. பொழிப்பு மோனை சிறப்பு.

மொழியியல் முன்னோடி - கால்டுவெல்

தன் மதம்
பரப்ப வந்து
தமிழ் மணம்
பரப்பி நின்றவன்

மொழியியல் ஆய்ந்து
முதன்மை யானது
முத்தமிழ் என்றே
முடிவாய்ச் சொன்னவன்

தனித்தியங்க இயலும்
தமிழால் என்று
தரணிக்குக்
காட்டியவன்

திருநெல்வேலியின்
சரித்திரம் படைத்தவன்
செந்தமிழ் தன்னிலோ
சரித்திரம் ஆனவன்

செம்மொழி தமிழின்
சிறப்பை உணர்ந்தவர்
சிந்தையில்
செதுக்குவர்

நம்தமிழ் நலனை
நாட்டுக் குரைத்த
நல்லவன்
பெயரை

தமிழ்
உள்ளவரை
தமிழர்
உள்ளவரை

செந்தமிழ்ச் சொல்லின்
சுவைப்போல்
அவன்புகழ்
வாழ்க! வளர்கவே!!!

சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் 200 ம் பிறந்த தின நிகழ்வில் முதன் முதலாய் வாசித்தது.இசைப் பா

நெஞ்சம் இனிக்க
நிறையப் புகழ்வார்
நல்லுளம் கொண்ட அவனடியார் அவர்
கொஞ்சும் தமிழில்
குறைதவிர்த் தெழுத
கொடுப்பார் ஊக்கம் இரண்டடியால்

சிதறியப் பூவை
சேர்த்துக் கட்டும்
செயலாம் சொல்லும் அறிவுரைகள் நம்
சிந்தைத் தெளிய
சிறப்பாய் அமைய
செய்யும் உதவி சிறியவையோ

பண்ணில் அழகை
பார்வையில் தெளிவை
பழகச் செய்யும் நெறியினையே அவர்
பரிவாய்  உரைப்பார்
புரியும் படியாய்
படைப்போம் சிறந்த பாக்களையே

வெண்பா வலையில் நண்பர் அவனடியார். அவரது கருத்துக்கள் என்னை மிகவும் பண்படுத்தியிருக்கின்றன. நன்றியுடன்.

இப்பாடல்,

இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,

இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!

ஈற்றுச்சீர் (7-ஆம் சீர்) இழைபுத்தொடை அமைதல் சிறப்பு. 

வஞ்சி மண்டிலம்

கண்ணை மூடி பூவென
சின்னப் பிள்ளை தூங்கிட
அன்னை நெஞ்சம் தானுறும்
இன்பம் கோடி யாகுமே!

அள்ளி வைத்த பிள்ளையும்
துள்ளி ஓடி மானென
பள்ளிச் சொல்லும் போதிலே
உள்ளம் கொள்ளைப் போகுமே!

வாழ்வில் வெற்றி வந்துறும்
போழ்தில் தாயின் பேரிடர்
சூழ்ந்த காலம் தேய்வுற
ஆழ்ந்த இன்பம் தோன்றுமே!

தன்னை ஈந்து அன்புடன்
அன்னைத் தந்த வாழ்விலே
பின்னை பிள்ளைத் தானுமே
அன்பு காட்டல் வேண்டுமே!

தேமா + தேமா + கூவிளம் என்ற வாய்பாட்டால் இயன்ற வஞ்சி மண்டிலம்