Saturday, August 28, 2010

சுயநலம்

கல்லாய் மனத்தினை கடிதாக்கி
சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும்
பொல்லா நோயது சுயநலம்போல்
கொல்லும் மற்றெதும் அறிவீரோ?


மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

தன்னம்பிக்கை

சற்றுன் மனத்திருள் நீயகற்றி
பற்றென் கைகளை பயம்விலக்கி
கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை
உற்ற துணையுனை உயர்த்திடுவேன்!

மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

தெரிந்துச் செயல்படு

உரிமையும் கடமையும் உணர்ந்திடுவாய்
அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய்
பெரியவர் சிறியவர் செய்கையினால்
தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய்.

விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.

Wednesday, August 25, 2010

தமிழ் வாழ்க!

 ஓர் மராத்திய பெண் தமிழை தன் இரண்டாவது மொழியாக விரும்பி ஏற்று கற்று [தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாவது மொழியாகக்கூட தமிழ் கற்பிக்காமல் ஹிந்தி, சமஸ்கிருதம் கற்பிக்கும் இக்கால கட்டத்தில்] அதில் பல பரிசுகளும் சிறப்புகளும்  பெற்றிருப்பது பாராட்டக்கூடியது. முண்டாசு கவிஞன் பாரதியையும் திருக்குறளையும் நன்றாக அறிந்த அவர் பாரதியை பற்றிக்கூறும் கருத்துகள் உண்மை பொதிந்தவை. பல மலிவான சுய முன்னேற்ற நூல்கள் விற்பனையில் சாதிக்கும் இன்று பாரதியின் கவிதைகளை சுய முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு இளைஞனும் பயன் படுத்துவானேயாயின் எவ்வளவு பலன் கிடைக்கும். அடிமை இந்தியாவில் பிறந்த பாரதி இன்று சுதந்திர நாட்டில் இருந்திருந்தால்?? ஆஹா 2020 என்ன 2000 லேயே நாம் வல்லரசாகியிருப்போம். சிறந்த கருத்துகளும் தெளிவான பேச்சும் கொண்ட
செல்வி ஜெயஸ்ரீயை வாழ்த்துவோம், வாருங்கள்.
திரு.சீனிவாசன் அவர்களின் இப் பதிவை தமிழார்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்கவும். ஒலி நாடாவையும் கேட்கவும்.http://vetripadigal.blogspot.com/2008/04/blog-post_03.html