Saturday, November 21, 2015

மாமழைப் போற்றுதும்

தண்ணீர்! தண்ணீர்!
என்று
தாகத்தால் தவித்த
தமிழகத்தில்
இன்று

தண்ணீர்... தண்ணீர்...
எங்கும்
தண்ணீர்...

மீண்டும் தவிக்கும்
மக்கள், மாக்கள்

மரங்களை வெட்டி
மாரியின்
கதவடைத்தப்பின்
கழுதைக்குக்
கல்யாணம் செய்கின்றார்
மழை வர...
வெட்கம்....

முகவரி தொலைத்து
திரிந்திருந்த
மாமழை
முகம் காட்டியப் போது

தண்ணீர்... தண்ணீர்...
எங்கும்
தண்ணீர்....

ஏரி குளமெல்லாம்
எட்டடுக்கு
கட்டிடமானதால்
விருந்தாக வந்த
மழைதானே...
வீட்டுக்குள்
வந்துவிட்டது...
.....

2.

வீட்டுக்குள் வந்த மழை
விக்கித்து நின்றதங்கே...

என்வீடு என்றிருந்தேன்
ஏனிவர்கள் தடுக்கின்றார்....

ஆறு குளந்தானிருக்கும்
ஆடிப்பாடி ஓடிடலாம்...

கரையோரங் கையாட்டும்
கிளையோடு பேசிடலாம்.....

கழனியெல்லம் நிறைத்து
மக்கள்
கவலையெல்லாங் கரைத்து
நானும்
கடலோடு கலந்திடலாம்...

கருத்தாக வந்துநின்றேன்...

காட்டாறு ஓடும் வழி
காரோட்டி சென்றதென்ன...

கட்டிடக் காடாக
கண்டபடிக்  கட்டிவிட்டு
குட்டிக்கடலென்று
குறையென்னைச் சொல்வதென்ன...

என்பாதை எதுவென்று
நான் மறந்தேன்....
கூறிடுவீர்....

சற்று
நேர்ப் பாதை நீர் நடந்தால்
நீராகி நிறைவளிப்பேன்......

யார் பாதை எதுவென்று
இன்றேனும் சிந்திப்பீர்....

Tuesday, September 29, 2015

இளைஞர்களே- சிந்திப்பீர் செயல்படுவீர்

காசும் பணமும் கைநிறைய
   கண்ணில் தூக்கம் இழந்தீரே...
பேசும் பழக்கம் குறைந்தே'கை'
  பேசி தன்னில் குறுஞ்செய்தி
பாசம் சொல்லப் பகிர்ந்தீரே
   பெற்றோர் மனத்தை மறந்தீரே
வாசப் பூவின் நுகர்வின்றி
   வண்ணப் படத்தில் மகிழ்ந்திடவோ...

உண்ணும் உணவில் முறைத்தவறி
  உறக்கம் கெட்டு உழைக்கின்றீர்
எண்ணிப் பார்ப்பீர் எதிர்காலம்
   இருண்டே இருக்குத் தெளிவில்லை
கொண்டக் கொள்கை உயர்ந்திடுதல்
  குற்றம் இல்லை உம்மனத்தில்
அன்னி யமோகம் அகன்றிட்டால்
  அடையும் இன்பம் அழகாகும்

மண்ணை முட்டி வெளிவந்தே
  விண்ணைத் தொட்டே வளர்ந்திடுமே
சின்ன விதையின் சிறப்பதனைச்
  சிந்தை தன்னில் கொண்டீரே
தன்ன லமின்றி அத்திறத்தால்
   தாய்நா டுயர முயன்றிட்டால்
திண்ணம் அறிவீர் அந்நாளில்
   நம்நா டுயரும் வல்லரசாய்


மா மா காய்
மா மா காய்

என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

Monday, September 28, 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா

http://bloggersmeet2015.blogspot.com/

மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பங்குபெறும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Friday, September 25, 2015

நாற்பத்தாறு வயதினிலே

நாற்பத்தாறு...

வளர்ச்சியின் உச்சம்

வீழ்ச்சியின் ஆரம்பம்


விதைத்தவை எவையோ

முளைத்திடும் அவையே

நாற்பத்தாறு...

நல்லதோர் இடைத்தரகன்

இருபத்தாறின்
இருப்பைக் கொண்டு
அறுபதின் பின்னே
அனுபவித் துய்ய

நாற்பத்தாறு...

நல்லதோர் இடைத்தரகன்...

இருபத்தாறு...

ஆர்ப்பரிக்கும் அலைக்கடல்

நாற்பத்தாறு...

நடுக்கடல் அமைதி

இருபத்தாறு...

சுட்டெரிக்கும் சூரியன்

நாற்பத்தாறு...

சூரியச் சுடரால்
ஒளிர்ந்திடும் நிலவு

முதுமையின்  இருளகற்ற
முகம்காட்டும் 
முழுநிலவு

தடைத்தாண்டி ஓட்டத்தில்
தடைக்கல் வயது இது...

ஓடிய வேகம்  
சீராய் இருந்தால் 
தாண்டுதல் எளிது...

உணர்ச்சியின் வேகம் 
வேறாயிருந்தால் 
வீழ்வது உறுதி...

வீழ்ச்சியின் பின்னும்
ஓட்டம் இருக்கும்
அடுத்த தடைக்கல்
அறுபதை நோக்கி...

எடுத்த அடியை
எண்ணியே வைத்தால்
அறுபதைத் தாண்டி
அமைதி நிலைக்கும்...

Tuesday, May 12, 2015

அம்மாநினைவுக் கரங்களால் மட்டுமே
தீண்ட முடிந்த
நேற்றையப் பொழுதுகளின்
நிஜங்களிலும்...

மூடிய கண்களால் மட்டுமே
காண முடிந்த
கனவுத் திரைகளின்
நிழல்களிலும்...

உப்பின் சுவையிலும்
உணர்வின்
நீர்த் துளியிலும்...

வலியிலும்
வலி மறந்த
இதங்களிலும்...

ஆரவாரங்களினூடேயான
என் ஆத்ம
தனிமைகளிலும்...

எப்போதும்
உயிர்த்திருக்கிறாள்
என்
அம்மா...

Friday, February 20, 2015

என்னருங் காதலே - தமிழே

மழலைச்சொல் சென்றேகி சற்றே நானும்
   மனத்தின்கண் சிலிர்ப்பூட்டும் எண்ணத் தாலே
குழல்மேவும் காற்றோடு கொள்ளை இன்பம்
   கூட்டாகி வருமிசைப்போல் எந்தன் நெஞ்சில்
அழகான தமிழேயுன் சொல்லைக் கொண்டேன்
   அழைக்கின்றேன் கலந்திடவே வருவாய் நன்றாம்
கவிதையென துள்ளத்துள் உயிர்த்தே நல்ல
   கூட்டமுதம் செந்தமிழே தருவாய் நித்தம்

பண்ணோடு நானெழுதும் பாட்டில் மேவி
   பைந்தமிழே பேரின்பம் தந்தாய் நாளும்
என்னோடு நீசேர்ந்து எழிலாய் நற்பா
   என்னுள்ளே உதித்திடவே செய்தாய் என்றும்
விண்மேவும் மேகங்கள் மழையைத் தூவ
   மண்மீது உயிர்ப்பூக்கள் மலரும் மாப்போல்
பண்பட்ட கருத்துக்கள் உன்னுள் கொண்டே
   பாட்டினிலே உயிர்சக்தி தந்தாய் வாழி!காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா - என்ற வரையறையிலான எண்சீர் மண்டிலம்

Monday, February 09, 2015வாழ்த்துக்கள்
சகோதரி
வாழ்த்துக்கள்
இன்றுனது பிறந்த நாள்
இதயங்கனிந்த
வாழ்த்துக்கள்


அன்றுனது
கரம்பிடித்து
அலைந்திருந்த நாட்கள்
என்றும் பசுமையாய்
என் கண்ணுக்குள்...

உனக்கு
வயிற்று வலி
என்றால்
எனக்கும்
பள்ளிக்கூட
வழி மறந்துப் போகுமே

அந்த இளமைக்கால
நினைவுகளின்
இன்றும் நான்
இனிமையாய்
மூழ்கிப் போகிறேன்...

சின்னச் சின்னக்
குட்டு வைத்து
பள்ளிக் கணக்கோடு
வாழ்க்கை கணக்கையும்
வகுத்துக் கொடுத்தாயே
அந்த அன்பில்
ஆழ்ந்துப் போகிறேன்...

நான்
மலர்ந்த நாளும்
நீ
பிறந்த நாளும்
ஒன்றாய்
காரணம்
என் இனிமைகளெல்லாம்
உன்னோடு
தொடர்புடையவைதானே?

என் வாழ்க்கைப் பாதையில்
அன்று முதல்
இன்றும்
என்றும்
உன் காலடி சுவடுகளே
என்
கலங்கரை விளக்கங்களாய்...

உடன் பிறந்த எங்களின்
முன்னேற்றத்தில்
உன் வெற்றி
முற்றானதாய்
மகிழ்ந்த
உன் அன்பை
உணர்ந்தபடி
என்றும்
உழைத்தபடி
நாங்கள்..

நாட்கள்
நகரலாம்
நரைக்கூடி
நெகிழலாம்..

என்றும்
உன்
நட்பில்
நனைந்தபடி
நாங்கள்...

வாழ்த்துக்கள்
இனியத் தோழி
வாழ்த்துக்கள்
இன்றுனது பிறந்த நாள்
இதயங்கனிந்த
வாழ்த்துக்கள்....

அன்புடன்
உமா

Friday, January 30, 2015

பொங்கலோ பொங்கல்கிளாஸ் ஸ்டாப்
அடுப்பு துடைத்து
கிரானைட்டில்
கோலமிட்டு
குக்கரில்
பொங்க வைத்து
டிவிட்டரில்
வாழ்த்துச் சொல்லி
பேஸ் புக்கில்
ஷேர் செய்து
பெர்முடாஸ்
டீஷர்ட் டோடு
பைக்கெடுத்து
ஊர் சுற்ற
பொங்கலோ பொங்கல்


ஆயிற்று பொங்கல்


அத்தனைக்கும்
மாற்றுண்டு
ஆனால்
அம்மா உன்
அன்புக்கு
மாற்றேது???
நீயில்லாமல்
வெறுமையாய்!!!!
பொங்கல்...
எப்படி போனாலென்ன!

Tuesday, January 13, 2015

புத்தகச் சந்தைக்குப் போஎத்தனையோ எண்ணங்கள் ஏடாகி ஓரிடத்தில்
தித்திக்கும் தேனாக சிந்தனைக்குச் சத்தாகும்,
புத்திக்கும் வித்தாகும் புத்துணர்வைப் பெற்றிடவே
புத்தகச் சந்தைக்குப் போ


---------------------------------------------------------------------------------------சத்தான நூல்பலவும் சேர்ந்து கிடைக்குமிங்கே
முத்தான தாக முயன்று படித்தறிந்து
மொத்தமாக வாங்கிடலாம், சொத்தாகும் சிந்தனைக்கு
புத்தகச் சந்தைக்குப் போ