Saturday, November 21, 2015

மாமழைப் போற்றுதும்

தண்ணீர்! தண்ணீர்!
என்று
தாகத்தால் தவித்த
தமிழகத்தில்
இன்று

தண்ணீர்... தண்ணீர்...
எங்கும்
தண்ணீர்...

மீண்டும் தவிக்கும்
மக்கள், மாக்கள்

மரங்களை வெட்டி
மாரியின்
கதவடைத்தப்பின்
கழுதைக்குக்
கல்யாணம் செய்கின்றார்
மழை வர...
வெட்கம்....

முகவரி தொலைத்து
திரிந்திருந்த
மாமழை
முகம் காட்டியப் போது

தண்ணீர்... தண்ணீர்...
எங்கும்
தண்ணீர்....

ஏரி குளமெல்லாம்
எட்டடுக்கு
கட்டிடமானதால்
விருந்தாக வந்த
மழைதானே...
வீட்டுக்குள்
வந்துவிட்டது...
.....

2.

வீட்டுக்குள் வந்த மழை
விக்கித்து நின்றதங்கே...

என்வீடு என்றிருந்தேன்
ஏனிவர்கள் தடுக்கின்றார்....

ஆறு குளந்தானிருக்கும்
ஆடிப்பாடி ஓடிடலாம்...

கரையோரங் கையாட்டும்
கிளையோடு பேசிடலாம்.....

கழனியெல்லம் நிறைத்து
மக்கள்
கவலையெல்லாங் கரைத்து
நானும்
கடலோடு கலந்திடலாம்...

கருத்தாக வந்துநின்றேன்...

காட்டாறு ஓடும் வழி
காரோட்டி சென்றதென்ன...

கட்டிடக் காடாக
கண்டபடிக்  கட்டிவிட்டு
குட்டிக்கடலென்று
குறையென்னைச் சொல்வதென்ன...

என்பாதை எதுவென்று
நான் மறந்தேன்....
கூறிடுவீர்....

சற்று
நேர்ப் பாதை நீர் நடந்தால்
நீராகி நிறைவளிப்பேன்......

யார் பாதை எதுவென்று
இன்றேனும் சிந்திப்பீர்....

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அருள்மொழிவர்மன் said...

~முகவரி தொலைத்து
திரிந்திருந்த
மாமழை
முகம் காட்டியப் போது~

~கட்டிடக் காடாக
கண்டபடிக் கட்டிவிட்டு
குட்டிக்கடலென்று
குறையென்னைச் சொல்வதென்ன...~

~யார் பாதை எதுவென்று
இன்றேனும் சிந்திப்பீர்..~

அருமையான வரிகள். சிந்திக்க வேண்டிய பொருள். நின் கவிநடை அருமை.

~ஏனிவர்கள் தடுக்கின்றார்~ இதில் ஏனிவர் என்பதன் பொருளென்னவோ!!

`ஏன் இவர்` என்பதை இணைப்பது வழக்கமா! குழப்பமாக உள்ளது.

இன்றுதான் தங்கள் வலைப்பதிவைப் பற்றித் தெரிந்தது. வரும் நாட்களில் பதிவுகளை வாசித்து கருத்துத் தெரிவிக்கிறேன்.