Thursday, October 22, 2009

நன்றாகச் செய்க நயந்து.

எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனத்தை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - சத்தியம்
என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி
நன்றாகச் செய்க நயந்து.

எக்காரியம் செய்தாலும் அதில் நம் கருத்தை முழுமையாக செலுத்தி, விருப்பத்துடன் உண்மை மாறாமல் உழைத்தோமானால் அதனால் உண்மையான இன்பமும் பலனும் உண்டு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.]

என்றும் திருநாள் எனக்கு.


ஆடாத காலும் அமைதியுறும் தூக்கமும்
நாடா மனத்தினில் நன்னிறைவும் - சாடாமல்
என்னுடன் சுற்றமும் ஏற்றமுற சூழ்ந்திருந்தால்
என்றும் திருநாள் எனக்கு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.அவரது திருத்தலுக்குப் பின்]
விளக்கம்: [யாருக்குமே சரியா புரியலைங்கறதுனால...]
மக்கள் அனைவருக்கும் திருநாள் , பண்டிகை என்பன மிகவும் கோலாகலமானவை.ஆனால் முதுமையில் ஒருவருக்கு எது திருநாளாக அமையும். இந்த தீபாவளியில் முதியவர் பட்டாசு சத்தத்தில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பர் என எண்ணியதில் எழுதியது இப் பா.
ஓடியாடி திரியும் மக்கள் ஒரு கட்டத்தில் தளர்ந்து தமது எல்லைச் சுறுங்கி விடும் போது மனம் வலிக்கும். முதுமையில் கால்கள் தள்ளாடும், மனதில் பயம் வரும், இரவில் அமைதியான தூக்கம் குறையும், இன்றய காலகட்டத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினர் முதியோரை கவனித்துக்கொள்வது குறைந்துவிட்டது. முதுமையில் தனிமை மிகக் கொடுமை. இவ்வாறில்லாமல் சுற்றத்தார் சூழ்ந்திருக்க, நடைத் தள்ளாடாமல், அமைதியான தூக்கமும், கலக்கமில்லாத மனமும் அமைந்தாலே அந்நாள் அவர்களுக்கு திருநாளாக அமையும். இப் பா முதியவர் சொல்வதாய் அமைக்காப்பட்டுள்ளது.]