Saturday, September 19, 2009

பாரதி - [ நிலைமண்டில ஆசிரியப்பா ]


அஞ்சி நடுங்கிய அடிமை நாட்டில்
நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறனும்
கொஞ்சும் தமிழும் கொண்டே பிறந்தவன்..
சிந்தை யிழந்த சிறுமதி யாளர்
நீசர் காலடி நித்தம் வணங்கிட,
நாசக் காரர் நம்மில் சிலரின்
நெஞ்சை உடைத்து நேர்மை புகுத்தி,
அஞ்சியோர் மனதில் ஆண்மை வளர்த்து,
நாட்டுப் பற்றை நரம்பில் ஏற்றி,
பாட்டின் வரியில் பகையை மிரட்டிய
அச்சம் தவிர்த்த ஆண்மையே பாரதி!
அகந்தை இல்லா அறிவே பாரதி!
கண்ணன் பாட்டில் காதலைத் தேடி
குயிலின் பாட்டில் ஞானம் கண்டவன்..
வறுமை அவனை வாட்டியப் போதும்
சிறுமைக் கொள்ளாச் சிந்தைப் பெற்றவன்..
காலன் வந்தப் போதும் அவனைக்
காலால் மிதிக்க கர்வம் கொண்டவன்
காக்கையும் குருவியும் நம்மின மென்றே
பார்த்திடும் அவன்வழி பகைவனுக் கருள்வது..
ஏற்றதை நாமும் இனித்தொடர்ந் தென்றும்
போற்றுவோம் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!

Monday, September 14, 2009

தமிழ்த்தாய் வாழ்த்து. - [நிலைமண்டில ஆசிரியப்பா.


தாயே வாழ்க! தமிழே வாழ்க!
தாயே வாழ்க! தமிழர் வாழ்க!
தரணியில் எங்கும் தகவுடன் வாழ்க!
சுரண்டிடும் பேய்கள் சூழ்கலி நீங்கி
தமிழகம் வாழ்க! தன்னலம் நீக்கி
தமிழர் எழுக! தாயும் வாழ,
தன்னினம் வாழ, தமிழா எழுக!
இன்னல் யாவும் இன்றொடு முடிக!
கண்ணுங் கருத்தாய் கற்றே தமிழை
விண்ணும் அளந்திட வழிசெய் திடுக!
ஆய்ந்தே அறிவியல் அனைத்தும் அறிக!
தேய்ந்திடா வண்ணம் தமிழைக் காக்க
கலைச்சொல் ஆக்கியே கருத்துடன் சேர்த்தே
கலைகள் யாவும் கற்பீர் தமிழில்
அயல்மொழி நீக்கியே அழகாய் எழுதிட
இயல்பாய்த் தமிழில் இனிதாய்ப் பேசிட
தங்கும் தமிழும், சற்றும் தொய்விலா[து]
எங்கும் புகழோ[டு] உயர்ந்தே வளமுற
தமிழர் வாழ்க! தமிழகம் வாழ்க!
தமிழ்த்தாய் சிறப்புடன் வாழ்க! வாழ்கவே!


கந்தனே அருள்வான். - [ நிலைமண்டில ஆசிரியப்பா]



அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனை
பழகிடும் தமிழின் பற்பல சொற்களாய்
விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே
கலக்கம் நீக்கிக் கருத்தினைச் சேர்த்தே
சிந்தனை தமிழாய் செயல்களும் தமிழ்க்காய்
எந்தமிழ்க் கந்தனை என்றும்நாம் வணங்கிடத்
தந்தருள் புரிவான் தங்கிடும் புகழும்
செந்தமிழ் தன்னுடன் சிறப்புற நமக்கே!

தருவதே மேலாம். - [ நேரிசை ஆசிரியப்பா]


தங்கும் தண்ணீர்த் தாகம் தீர்க்காது,
எங்கும் வளமுற இருகரை தன்னில்
பாயும் ஆறோ பருகத் தருமே
ஈயும் கடலில் இரண்டறக் கலந்தும்
மீண்டும் மழையாய் எங்கும் பொழிந்தே!
யாண்டும் அதுபோல் பணமும் கொடுக்கும்
நேராய் பெற்றதை நிறைவோ[டு] ஈந்திட
பாராய் நெஞ்சினில் பெருகும் நிம்மதி
தேராய் என்றும் தருவதே மேலாம்!
ஈயாப் பொருளோ இருந்தே அழியும்
பேயாய் மனதில் பயமும் வளரும்
தாராய் என்றும் தங்கிடும் அமைதியென்[று]
ஊராய்ச் சென்றே உள்ளம் உருக
இறைவனைத் தொழுதிடல் வேண்டா
இரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!


கண்ணோரம் கண்ணீர்க் கடல்

மடிக்கிடந்து கையெடுத்து மார்பணைத்த தன்மகனைப்
படிக்கவென்று பள்ளியிலே விட்டுவிட்டு வாசலிலே
கண்வைத்துக் காத்திருக்கும் கற்றறிந்த பெற்றவளின்
கண்ணோரம் கண்ணீர்க் கடல்.