Friday, July 17, 2009

சொல்லே மிகவும் சுடும்.


கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய

சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர்

வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்

சொல்லே மிகவும் சுடும்.


[தலைவன் மேல் தலைவிக்கு ஏனோ கோபம். அதனால் அவனைப் புறக்கணித்து வாய்ச் சொல் தவிர்க்கிறாள். ஆனாலும் கண்ணால் தன் கோபத்தைக்காட்ட, தலைவன் கூற்று.]

Thursday, July 16, 2009

திரு.அகரம் அமுதா அவர்களின் பதிவில் பின்னூட்டங்களாக எழுதிய சில வெண்பாக்கள்.


நம்மை பெற்று வளர்த்து இந்த பூமியை நமக்கு விட்டுத்தந்த நேற்றய சமுதாயமும் நடுத்தெருவில் வீழ்ந்திருக்க நாம் காக்க வேண்டிய நாளய சமுதாயமும் நலிந்திருக்க இன்றய சமுதாயம் சாதித்தது என்ன? இப்படி பலர் நலிந்திருக்க நாம் உண்டு உடுத்தி வாழ்வது வெக்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. மனித்தன்மை செத்துவிட்டதா? அதன் இலக்கணம் தான் மாறிவிட்டதா?

மெத்தப் படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோப் பட்டும் புரியவில்லை நித்தமிங்குப்
போரை விரும்பிப் புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.

மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மையே;
கண்ணுற்ற போது கவியெழுத சொல்லில்லை
சோர்வுற்ற நெஞ்சின் துயர்களையக் கற்ற
தமிழன்றி இல்லை துணை


வட்டில் உணவில்லை வாடி எலும்புடன்
ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி
அழுமோசை காதில் விழவில்லை செத்து
விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு.

இன்னல் அகன்று இனிதாய் இவர்வாழ
மின்மினிகள் கைக்கோர்த்து கண்ணோ[டு] விளையாட
கற்று உயர்ந்திவர் காதலித்த றம்நாட
கற்பனைச் செய்திடுதே நெஞ்சு
.

வயதொன்றே காரணமாய் வாழ்த்துகின்றேன் நற்றமிழை
நாடகத்தில் நாட்டியே முத்தமிழின் முத்தெடுப்பாய்
நற்கவியாம் உம்பணியை நாமகளும் நாடுகின்றாள்
இல்லை உமக்கே யிடர்.

அமுதாவின் தமிழ் பற்றும், அவரது பணியையும் வாழ்த்தி எழுதியது.


நாணுகின்றேன் நற்றமிழில் நீரெனையே ஓர்கவி
என்றதனால், நாடுகின்றேன் உந்தனையே நற்கவியை
நான்புனைய நல்லிலக்க ணங்கற்பிக் கும்நீர்
எனக்கே இராச குரு.

Add Video
யாப்பிலக்கணத்தோடு சொல்லிலக்கணமும் கற்பிக்கும் திரு.இராச குரு அவர்களுக்கு வணக்கத்துடன்.


எங்குற்றாய் என்றீர் தமிழின் இனிமைப்
பயின்றிட காத்திருக்கி றோமிங்கு நன்றாம்
பிரவா கமென்னு மிலக்கண நண்பர்
குழுப்பக்கம் சற்றே திரும்பு.

[பிரவாகம் குழு பக்கம் அமுதா வராது போனதால்]